கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020
இன்று மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் ஒன்றாகச் சிறுநீரகக் கல் உள்ளது. இது திண்மையான படிகங்களின் தொகுப்பாகும். இந்தப் படிகங்கள் மிகவும் கடினமாக இருந்தால் அல்லது கால்சியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில் இருந்தால், சிறுநீரகக் கல் உருவாகியுள்ளது என்று பொருள். இந்தக் கல், சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் உருவாகும்.
சிறுநீரகக் கல்லை உருவாக விடாமல் தடுக்கும் அமைப்பில் தான் சிறுநீர் உள்ளது. இதைத் தடுக்கும் திரவங்கள் சிறுநீரில் குறையும் போது கல் உருவாகி விடுகிறது. இதனால், தாங்க முடியாத வலி ஏற்படும். சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்றை உண்டாக்கி, சிறுநீரகங்களைப் பாதிக்கச் செய்யும்.
ஒருமுறை தோன்றி விட்டால் தொடர்ந்து உருவாகும். இதற்கு விரைவாக, முறையாக மருத்துவம் செய்யா விட்டால் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும். மூலிகை மருத்துவம் மூலம் இதை நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.
சிறுபீளை, சிறு நெருஞ்சியைச் சமமாக எடுத்து மை போல அரைக்க வேண்டும். பிறகு, இதில் கொட்டைப்பாக்கு அளவில் எடுத்துக் கால் லிட்டர் தயிரில் கலந்து காலை மாலையென 60 நாட்களுக்குச் சாப்பிட வேண்டும். அல்லது 10 கிராம் நத்தைச்சூரி விதையை வறுத்துப் பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும். பிறகு, இதில் பால், சர்க்கரையைக் கலந்து, காலை மாலையில் சாப்பிட்டு வந்தால், கல்லடைப்பு, சதையடைப்பு நீங்கும்.
சிறுகீரை வேர், நெருஞ்சில் வேர், சிறுபூனை வேர், சீரகம் ஆகியவற்றைத் தலா 40 கிராம் எடுத்து நொறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு லிட்டர் நீரிலிட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, காலையில் பாதி மாலையில் பாதியெனக் குடித்து வந்தால் கல்லடைப்பு அகலும். வாழைத்தண்டைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கல் கரையும். ஒரு கிராம் அளவில் கடுகுப்பொடியைப் பாயாசத்தில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
ஒரு மடங்குக் கொள்ளைப் பத்து மடங்கு நீரில் வேக வைக்க வேண்டும். பிறகு இதில் இந்துப்பைச் சேர்த்து, காலை மாலையில் பருகி வந்தால் சிறுநீரகக் கல் கரையும். 40 கிராம் தொட்டால் சிணுங்கி வேரைச் சிதைத்து, கால் லிட்டர் நீரிலிட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, 15 மில்லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைக்குக் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரையும்.
மரு.சு.சத்தியவாணி எம்.டி.,
வளசரவாக்கம், சென்னை-600087.