கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014
பச்சைக் கீரைகளை உணவாகக் கருதும் பழக்கம் தமிழ்நாட்டில் தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது. கீரைகள் இயற்கைத் தாய் வழங்கிய கொடை. ஆனால், கீரைகள் மிக மலிவானவை என்றும், சுத்தம் செய்வது கடினம் என்றும் கருதும் போக்கு மக்களிடம் உள்ளது. உண்மையில் கீரைகளைப் போல நன்மை செய்யும் உற்ற நண்பன் வேறு இல்லை.
தமிழர்களின் உணவில் முக்கியத் தாவர உணவான கீரைகள், பச்சைப் பசேலென்று பல வகைகளில் கிடைக்கின்றன. காய்கறிகளைப் பொதுவாக, இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என்று பிரிக்கலாம். இவற்றில் எளிதாகவும் விரைவாகவும் செரிப்பவை கீரைகள் தான். நமது நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கீரை வகைகள் உள்ளன. அகத்திக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை எனப் பச்சைக் கீரைகளின் பட்டியல் மிக நீளமாகும்.
கீரைகளில் கால்சியம், இரும்பு, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, ரைஃபோளேவின், ஃபோலிக் அமிலம் போன்றவை அதிகமாக உள்ளன. பச்சையம் நிறைந்துள்ளது. லெசித்தின், கரோனாய்டு, அல்கலாய்டு மற்றும் ஆக்சாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் முதலிய கரிம அமிலங்களும் உள்ளன. கொழுப்பும் மாவுச்சத்தும் குறைவு. தாதுப் பொருள்களும் வைட்டமின்களும் அதிகம். எனவே, கீரைகளை வருமுன் காக்கும் உணவு என்று சொல்லலாம்.
மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் கீரைகளில் உடல் வளர்ச்சிக்கும் நலத்துக்கும் தேவையான அத்தனை சத்துகளும் உள்ளன. எனவே, தினமும் குறைந்தது 50-100 கிராம் கீரையையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கீரை அவசியம்.
ஆயுர்வேதப்படி, நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதி உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு பகுதி செரிமானச் சக்திக்கு உதவுகிறது. இன்னொரு பகுதி சத்தாக மாறி உடலில் தங்குகிறது. மீதமுள்ள பகுதி மலமாக வெளியேறுகிறது. இந்த நான்கு செயல்களுக்கும் காய்கறிகள் உதவுகின்றன. கீரைகள் குறிப்பாக, செரிக்கவும் மலத்தை வெளியேற்றவும் உதவுகின்றன.
காலையில் தனி உணவாகக் கீரையை உண்பது நல்லது. இரவில் கீரையைச் சாப்பிடக் கூடாது. இரவில் செரிக்கும் சக்தி குறைந்திருக்கும். தூக்கத்தாலும் இரவின் குளிர்ச்சியாலும் செரிப்புத்திறன் மந்தமாகி விடும். மேலும், மலப்போக்கு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல் முதலியன ஏற்படலாம்.
ஒவ்வொரு வகைக் கீரையிலும் வெவ்வேறு சத்துகள் உள்ளன. எனவே, அன்றாடம் முடியா விட்டாலும் அடிக்கடி, பலவகைக் கீரைகளை உணவில் சேர்க்க வேண்டும். பசுமையாகவும் புதிதாகவும் உள்ள கீரையாகப் பார்த்து வாங்க வேண்டும். மஞ்சள் நிறக் கீரைகளைத் தவிர்க்க வேண்டும். இலைகள் வாடி வதங்கி இருக்கக் கூடாது. அதைப்போல ஓட்டைகள் விழுந்த கீரைகளை வாங்கக் கூடாது. ஏனெனில் அவை கிருமிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவை.
சித்தர்கள் எந்தந்தக் கீரையை எந்தெந்தப் பருவத்தில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வகைப்படுத்தி இருக்கிறார்கள். உணவில் இடம் பெற வேண்டிய கீரைகளைப் பற்றி வள்ளலார் மிக அழகாகக் கூறுகிறார். கரிசலாங்கண்ணி, தூதுவளை, முளைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை ஆகியவற்றை, பருப்பு, மிளகு, புளியைச் சேர்த்தும் தனித்தும் கறி செய்து உண்ணுங்கள். மற்ற கீரைகளை ஏகதேசமாக உணவில் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொன்னாங்கண்ணி, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை ஆகிய கீரைகள் எல்லாப் பருவங்களிலும் சாப்பிட ஏற்றவை.
சமைப்பதற்கு முன், கீரை இலைகளை ஆய்ந்து, சுத்தமான குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும். பிறகு, இதை வேக வைக்கக் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்த வேண்டும். சமையல் சோடாவைச் சேர்க்கக் கூடாது. மாறாகச் சிறிதளவு புளிநீரைத் தெளிக்கலாம்.
பச்சை என்பதும் பசுமை என்பதும் நிறத்தை மட்டும் குறிப்பன அல்ல. குன்றாத இளமைக்கும், என்றும் நின்று நிலைக்கும் அழியாமைக்கும் அடையாளமாக உள்ளவை. மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி பெரியது என்று ஒரு பழமொழி உண்டு. அதன்படி, கீரைகளின் சத்துகளும் பயன்களும் மகத்துவம் மிக்கவை. எனவே, இத்தகைய கீரைகளை நமது உணவில் சேர்த்து நன்மைகளைப் பெறுவோம்.
முனைவர் மா.விமலாராணி,
முனைவர் பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்.