கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020
கரையான், கோழிகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உணவாகும். இப்படி, கோழித்தீவனச் செலவைக் குறைக்கும் கரையான், நமக்கு நன்மையையும் செய்கிறது. எனவே, கரையானை உற்பத்தி செய்து கோழிகளுக்குத் தருவது பயனுள்ள உத்தியாகும்.
பொதுவாக, கரையான் உற்பத்திக்கு மண்பானை சிறந்த பொருளாகும். ஆனால், ஒரு பானை மூலம் 15-20 கோழிகளுக்குத் தேவையான கரையான்கள் மட்டுமே கிடைக்கும். கோழிகள் நிறைய இருந்தால், இம்முறையால் முழுப்பயன் கிடைக்காது. எனவே, பெருமளவில் கரையானை உற்பத்தி செய்யும் முறையைப் பற்றிப் பார்ப்போம்.
கரையான் எறும்பைப் போல இருப்பதால், இதை வெள்ளை எறும்பு என்றும் அழைப்பார்கள். ஆனால், எறும்பு Hymenoptera வகையைச் சேர்ந்தது. கரையான் ஐசோப்டெரா என்னும் வகையைச் சேர்ந்தது. இதில், ஐசோ என்பது ஒரே மாதிரி எனவும், ப்டெரா என்பது இயற்கை எனவும் பொருள்படும். உலகம் முழுவதும் கரையானில் 275 பேரினங்களும், 2,750 சிற்றினங்களும் உள்ளன.
கரையான்களால் தனித்து வாழ இயலாது. எனவே, தேனீக்களைப் போலவே, கரையான்களும் சமுதாயப் பூச்சியினமாகும். ஒரு கரையான் கூட்டத்தில் 500 முதல் 5 இலட்சம் கரையான்கள் வரையில் இருக்கும்.
பயன்கள்
கரையான் நாட்டுக் கோழிகளுக்குச் சிறந்த தீவனமாகும். இதை உண்ணும் கோழிக்குஞ்சுகள் விரைவாக வளர்ந்து இரண்டு மடங்கு எடையை அடையும். நூறு கிராம் கரையானில் 36% புரோட்டின், 4.4% கொழுப்பு, 560 கலோரி எரிசக்தி, 20% வளர்ச்சி ஊக்கி போன்றவை உள்ளன.
இடத்தேர்வு
சிறந்த கரையான் உற்பத்திக்கு நிழலான இடமே ஏற்றது. மேலும், அவ்விடம் செம்மண்ணாக இருந்தால், கரையான்கள் நிறையக் கிடைக்கும். கரையான் உற்பத்திக்கு, கிழிந்த துணிகள், காகிதம், சணல் சாக்கு, காய்ந்த தேங்காய் மட்டை, இற்றுப்போன கட்டை, காய்ந்த இலை, கூழாங்கற்கள், நீர் ஆகியன தேவை.
செய்முறை
முதலில் ஒரு மீட்டர் நீள, அகல, ஆழத்தில் குழியெடுக்க வேண்டும். இதில், காய்ந்த தேங்காய் மட்டை, இலை, இற்றுப்போன விறகு, கிழிந்த துணி, காகிதம் என நிரப்பி, அதற்கு மேல் சணல் சாக்கால் குழியை மூட வேண்டும். நல்ல ஈரப்பதம் இருந்தால் தான் கரையான்கள் அதிகமாக உற்பத்தியாகும். எனவே, ஒரு வாளி நீரை அதன்மீது ஊற்ற வேண்டும்.
அடுத்து, குழிக்குள் காற்றுப் புகாதவாறு சணல் சாக்கைச் சுற்றிக் கூழாங்கற்களை வைக்க வேண்டும். இரவு நேரத்தில் தான் கரையான்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால், இந்த வேலையை மாலை ஆறு மணிக்கு மேல்தான் செய்ய வேண்டும். இதைச் செய்து 12 மணி நேரத்தில் கரையான்கள் உருவாகி விடும்.
அறுவடை
இந்தக் கரையான்களை, வெய்யில் வருமுன் காலை 6 மணியளவில் அறுவடை செய்ய வேண்டும். சணல் சாக்கை எடுத்து விட்டு மண்வெட்டியால் கரையான்களை எடுத்துக் கோழிக் குஞ்சுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.
அறிவியல் உண்மை
செம்மண்ணில் கரையான்கள் அதிகமாக உருவாகும். ஆடு மாடுகளைப் போல, கரையான்களும் நார்ப்பொருளை உண்டு வாழும் உயிரினமாகும். குடலிலுள்ள நார்ப்பொருளைச் செரிக்கச் செய்யும் நுண்ணுயிரிகள் உண்டு. சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்குக் கட்டையில் உள்ள பூஞ்சைக் காளானையும், கரையான்கள் பயன்படுத்தும். நீர்த்தெளிப்பு, கரையான்கள் உருவாக ஏதுவாகும்.
கொ.குறளரசன்,
உதவிப் பேராசிரியர், பத்மஸ்ரீ ஜீ.வி.சலாம் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி-620009.