கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014
கண்டங்கத்தரி பிரச்சனைக்குரிய களையாகும். இது வறண்ட பூமியிலும் நன்றாக வளரும். இதன் பூக்கள் கத்தரிச்செடியின் பூக்களைப் போல இருக்கும். காய்களும் சற்றுச் சிறிய அளவில் கத்தரிக்காய்களைப் போலவே இருக்கும். இதன் தாவரவியல் பெயர் சொலானம் ஜேன்தோகார்பம் (solanum xanthocarpum) எனப்படும். கண்டங்கத்தரி அதிகளவில் விதைகளை உற்பத்தி செய்யும். மேலும், இது எளிதில் பரவும் தன்மையைக் கொண்டது. எனவே, கண்டங்கத்தரியைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும். இச்செடியில் முட்கள் நிறைந்திருப்பதால் இதை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் விவசாய நிலங்களில் இருந்து அகற்ற முடியும்.
கண்டங்கத்தரி, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காய்கள், இலைகள், பூக்கள் ஆகியன மிகச்சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. இருந்தாலும் இதைக் கர்ப்பக் காலத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதைப் பொடி செய்தும் கஷாயமாகவும் உண்ணலாம். காய்களை நேரடியாகச் சமைத்து உண்ணலாம். இதிலுள்ள சொலானோ கார்பன், கார்பெஸ்டிரால், பொட்டாசியம் நைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், சிட்ரோஸ்டீரால், ஐசோகுளோரோஜெனிக் அமிலம், சொலோசோடின் ஆகிய இரசாயனப் பொருள்கள் இதன் மருத்துவக் குணங்களுக்கு உதவுகின்றன.
மருத்துவப் பயன்கள்
இதிலுள்ள கசப்புத்தன்மை, குடற்புழுக்களை நீக்க உதவுகிறது. சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்கிறது. இது, மிகச்சிறந்த கோழை அகற்றியாகும். அதனால், ஆஸ்துமாவுக்கு மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் இலைகளை நெருப்பில் வாட்டிப் புகையைச் சுவாசிப்பதன் மூலம், தலைவலி, மூக்கடைப்பு ஆகியன சரியாகின்றன. இதன் கஷாயம் கடுமையான தொண்டை வலியைப் போக்கும் மருந்தாகச் செயல்படுகிறது.
கண்டங்கத்தரி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் பசையானது மூட்டுவலிக்கும் மற்ற வலிகளுக்கும் மிகச்சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. இதன் வேர்களும் விதைகளும் இருமல் மற்றும் சளியால் ஏற்படும் நெஞ்சுவலிக்குச் சிறந்த மருந்தாகும். இதன் கஷாயத்தைத் தேனுடன் கலந்து சாப்பிட, மார்புச்சளி சரியாகும். இதய நோய்களுக்குக் கண்டங்கத்தரி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும், இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைப்பதுடன், இரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் வேலையையும் செய்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீர் செய்யவும் உதவுகிறது. கண்டங்கத்தரி வேரை எலுமிச்சைச் சாற்றுடன் அரைத்துக் கொடுத்தால் தேள்கடி, பாம்புக்கடி குணமாகும். நமைச்சல், காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது. வாயு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும், செரிமானச் சக்தியை அதிகப்படுத்தவும் கண்டங்கத்தரி பயன்படுகிறது. இதன் விதைகள் பசியைத் தூண்டும்.
எனவே, கண்டங்கத்தரியைக் களையாகக் கருதாமல், அதன் மருத்துவத் தன்மைகளை உணர்ந்து பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் சிறந்த பலனை அடைய முடியும்.
முனைவர் மு.சுகந்தி,
பெ.முருகன், முனைவர் மா.விமலாராணி, முனைவர் பா.குமாரவேல்,
வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.