அனுபவத்தைச் சொல்கிறார் கே.வி.தங்கபாலு!
ஐம்பது ஆண்டுகளைக் கடந்த கட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், 134 ஆண்டு காங்கிரஸ் கட்சியில், ஐம்பது ஆண்டுகளாக இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு.
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சமூக நலத்துறை இணையமைச்சராகவும், மூன்று முறை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ள தங்கபாலுவின் அரசியல், அக்கட்சியில் அவருக்குத் தெரியாத தேசியத் தலைவர்களே இல்லை என்று பெருமையாகச் சொல்லும் அளவில் தான் இருக்கிறது.
காலையில் சென்னையிலோ சேலத்திலோ இருக்கும் தங்கபாலு, மாலையில் டில்லியில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான கூட்டங்களுக்குச் சென்று திரும்பும் அளவுக்கு, தமிழகத்தையும், டில்லியையும் ஒரேநாளில் இணைக்கும் அளவுக்குப் பரபரப்பான மனிதர்.
தற்போதும், டில்லி காங்கிரஸ் கட்சித் தலைமையின் முழுமையான ஆசிர்வாதத்தோடு இயங்கும் தங்கபாலுவுக்கு, வயது 68 ஆனாலும் அவரது செயல்கள், வேகம் அத்தனையும் இருபது வயது இளைஞருக்கு உரியவை என்று சொன்னால் அது மிகையில்லை.
அரசியலில் இன்றும் வேகமான மனிதராகவும், முழுநேர அரசியல்வாதியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்கபாலு, இத்தனைக்கும் மத்தியில் தன்னை ஒரு விவசாயியாகவும் அடையாளம் காட்டிக் கொள்வதைப் பெருமையிலும் பெருமையாகக் கருதுகிறார். அகில இந்திய இளம் விவசாயிகள் சம்மேளத்தின் தலைவராகவும், இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழகத் தலைவராகவும் இருந்து, விவசாயிகளுக்குப் பேருதவியாகப் பல்வேறு காரியங்களைச் செய்திருக்கிறார்.
விவசாயத்தின் அத்தனை வளர்ச்சிகளையும் அனுபவம் வாயிலாகக் கற்றுத் தேர்ந்திருக்கும் தங்கபாலுவின் விவசாய வாழ்க்கை, பலருக்குமான பாடம் என்று கூடச் சொல்லலாம். அதனால், அவரின் விவசாய வாழ்க்கையைப் பற்றி அறியும் பொருட்டு அவரைத் தொடர்பு கொண்டோம். அப்போது சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகில் இருக்கும் அவரது சொந்த ஊரான குறிச்சிப்பேலூரில் உள்ள அவரது தோட்டத்துக்கு வருமாறு நம்மை அழைத்தார்.
அதன்படி அங்கே சென்றோம். ஓங்கி வளர்ந்திருந்த தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் நம்மை வரவேற்றன. பாக்கு மரங்களுக்கு இடையிடையே குலை தள்ளி நின்றிருந்த வாழை மரங்கள், விருந்து வைப்பது போல் இலைக் கரங்களால் கையசைத்தன. மக்காச்சோளம், சப்போட்டா, எலுமிச்சை, தக்காளி, மிளகாய் என, பலதரப்பட்ட பயிர்கள் அவரது தோட்டத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே சென்ற நம்மை வரவேற்ற அவர், அந்த இரம்மியான சூழலில் மரங்களுக்கு இடையே நடந்து கொண்டே பேசினார். நாமும் அவரைப் பின்தொடர்ந்தோம்.
“இது என்னுடைய பூர்விக நிலம். விவசாயம் எங்களின் பரம்பரைத் தொழில். தாத்தா காலத்திலிருந்தே விவசாயம் தான். 1965இல் தான் மின்சாரம் வந்தது. அதற்கு முன்னர் மாடுகளைக் கட்டிக் கவளம் மூலம் தண்ணீர் இறைப்பார்கள். அப்படித் தண்ணீர் இறைப்பது, பாய்ச்சுவது, ஏர் ஓட்டுவது, களையெடுப்பது, மாடு மேய்ப்பது என விவசாயத்தில் எல்லா வேலைகளையும் செய்துள்ளேன்.
அப்பா காலத்தில் எங்களுக்குச் சுமார் 2.5 ஏக்கர் நிலம் இருந்தது. அதன் பின்னர் நான் 20 ஏக்கர் நிலம் வரை வாங்கியிருக்கிறேன். தற்போது சுமார் 25 ஏக்கர் நிலம் வரை உள்ளது. அதில், நெல், கரும்பு, தென்னை, மா, பாக்கு, நிலக்கடலை, மக்காச்சோளம் முதலியவற்றைப் பயிர் செய்து வருகிறேன். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை கிணற்றுப் பாசனம் தான். எங்கள் நிலத்தில் ஐந்து கிணறுகள் உள்ளன.
அகில இந்திய இளம் விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவராக இருந்திருக்கிறேன். இந்திய விவசாயிகள் சங்கத்தில் தமிழ்நாடு தலைவராக இருந்துள்ளேன். என் அன்றாட வாழ்வில் ஒரு முறையாவது யாருடனாவது விவசாயத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டேன். ஏனெனில், விவசாயம் என்பது நம் உயிரோடு ஊறிப் போனது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், நாமெல்லாம் கிராமத்தில் பிறந்தவர்கள். நம்முடைய வாழ்க்கையே விவசாயத்தைச் சார்ந்து தான் இருக்கிறது.
விவசாயம் செய்து தான் சாப்பிட்டோம், சட்டை போட்டோம், பள்ளிக்கூடம் போனோம், கல்லூரிக்குப் போனோம், திருவிழாக்களைக் கொண்டாடினோம். நிலத்தில் பயிரிட்டு, நீர்ப்பாய்ச்சி, களையெடுத்து, உரமிட்டுப் பாதுகாத்து விளைய வைத்த பொருள்கள் மூலம் கிடைத்த பணத்தால் தான் எல்லாமே நடந்தன. விடிந்தால் தோட்டத்துக்குப் போக வேண்டும், மாடுகளுக்குத் தீனி வைக்க வேண்டும் என்னும் நினைப்புகள் தானாகவே வந்துவிடும்; அந்த வேலைகளைச் செய்து விடுவோம்.
என்னுடைய சிறு வயது வாழ்க்கை முழுவதும் இப்படித் தான் கழிந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போவதற்கு முன்னும், போய்விட்டு வந்ததும் தோட்டத்துக்குத் தான் போவேன். அது ஒரு கனாக் காலம். உழைப்பு, கஷ்டம் இருந்தாலும் அந்தக் காலம் பொற்காலம் தான். இன்றைக்கு நகரத்தில் அழுக்குப் படாத நாகரிக வாழ்க்கை வாழ்ந்தாலும், ஊருக்குப் போகும் போதெல்லாம் தோட்டத்துக்குப் போய் அங்குள்ள பயிர்களை, மரம் செடி கொடிகளை, பட்சிகளை, பறவைகளைப் பார்க்கும் போது, அவற்றின் சப்தங்களைக் கேட்கும் போது கிடைக்கும் மன நிறைவுக்கு எடுத்துக்காட்டெல்லாம் சொல்ல முடியாது. தோட்டச் சூழ்நிலை கொடுக்கும் சுகமே தனிதான்.
ஊருக்கு இராசா என்றாலும் தாய்க்குப் பிள்ளை தான் என்பார்கள். அதைப் போல எவ்வளவு பெரிய பதவியில், வேலையில் இருந்தாலும் எப்படியோ ஒரு வகையில் அவர்களின் தொடக்க வாழ்க்கை விவசாயத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். அதனால் விவசாயம் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதன் மீதான ஈடுபாடு என்றுமே மாறாது” என்றவர் அங்கிருந்த சப்போட்டா மரத்திலிருந்து பழத்தைப் பறித்து நமக்கும் கொடுத்துத் தானும் உண்டார்.
அதன் பின்னர் மீண்டும் தோட்டத்துக்குள் நடக்க ஆரம்பித்த அவர், “நான் இன்றைக்கும் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்திற்குக் கொடுக்கும் என்னுடைய சுய விவரக் குறிப்பில், தொழில் பகுதியில் விவசாயம் என்று தான் குறிப்பிடுவேன். நான் ஒரு விவசாயியின் மகன், நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
விவசாயத்தில் தற்போது இருக்கும் முறையில் மாற்றம் வர வேண்டும். எல்லோரும் ஒரே பயிரையே பயிர் செய்கிறார்கள். அதனால் விவசாயிகளுக்குப் போதிய விலை கிடைக்காமல் போகிறது. மாற்றுப்பயிர் விவசாய முறைக்கு மக்கள் மாற வேண்டும். தேவைக்கேற்ப உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
விவசாயத்தில் கடந்த பல ஆண்டுகளாக இரசாயன உரங்களைப் போட்டுப் போட்டு மண்ணின் இயல்புத் தன்மை முழுவதும் கெட்டு விட்டது. எனவே, இயற்கை விவசாய முறைக்கு மக்கள் மாற வேண்டும். தொழுவுரம், வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகவ்யா போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்’’ என்று சொல்லிக் கொண்டே அங்குள்ள மாட்டுக் கொட்டத்துக்குள் சென்றார்.
அங்குப் பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளும் கன்றுகளும் இருந்தன. அவற்றைப் பார்த்துப் பேசிக்கொண்டே தீவனத்தைப் போட்டபடி, “இந்த மாடுகளின் மூலம் கிடைக்கும் சாணத்தைத் தான் நிலத்துக்கு உரமாகப் போடுகிறேன். அதனால், தற்போது முற்றிலும் இயற்கை முறையிலான விவசாயத்தையே செய்து வருகிறேன். இதன் மூலம் எனது விவசாயத்தை இலாபமுள்ள தொழிலாக மாற்றியுள்ளேன்.
சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் தான் நடக்கிறது. அதனால், அந்த மாநிலத்தின் விளைபொருள்களுக்கு எல்லா இடங்களிலும் மதிப்பு அதிகமாக இருக்கிறது. அதைப்போல இயற்கை விவசாயத்துக்கு நமது தமிழ்நாட்டு விவசாயிகளும் மாற வேண்டும். இன்று இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிரிட்டு விளைய வைக்கும் பொருள்களை அதிகமான விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அனைத்து நகரங்களிலும் பசுமை அங்காடிகள், இயற்கை அங்காடிகள் என வந்து விட்டன.
அரசும் இயற்கை விவசாய முறையை ஊக்கப்படுத்தும் பொருட்டு இயற்கை வேளாண்மை மண்டலங்களை அமைக்கப் போவதாகச் சொல்லியுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இராசயன உரங்களுக்குக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தி விட்டு இயற்கை உரம், பாரம்பரிய விதை முதலியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆடு மாடுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முதல் ஐந்தாண்டுக்கு 100 சதவிகிதம், அடுத்த ஐந்தாண்டுக்கு 50 சதவிகிதம், அடுத்த ஐந்தாண்டுக்கு 25 சதவிகிதம் என, மானியம் கொடுத்து ஊக்குவித்தால், தற்போது இரசாயன உரங்களால் பாழ்பட்டுக் கிடக்கும் நமது மண்ணை, சுமார் 15 ஆண்டுகளில் முற்றிலும் நல்ல மண்ணாக மாற்றி விடலாம். அப்படி இயற்கை விவசாய முறைக்கு மாறி விட்டால், தமிழகமும் சிக்கிம் மாநிலத்தைப் போல இயற்கை விவசாயத்தில் முன்னோடி மாநிலமாகத் திகழும்.
மேலும், இரசாயன உரங்களில் விளைந்த பொருள்களைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு இன்று மக்களுக்கு நோய் நொடிகள் அதிகமாகி விட்டதுடன், வாழும் காலமும் குறைந்து வருகிறது. இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் நஞ்சில்லா உணவுப் பொருள்கள் கிடைக்கும், உடல் நோய் நொடியில்லாமல் நன்றாக இருக்கும், மருத்துவச் செலவுகள் குறையும். செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதால் இலாபமும் குறைகிறது. எனவே, இன்றைய நிலையில் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கு உதவ வேண்டியது அரசின் கடமை” என்று கூறிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த தோட்டக்காரர்கள் அவருக்கும் நமக்கும் இளநீரை வெட்டித்தர அதை அருந்தியபடியே மீண்டும் பேசத் தொடங்கினார்.
“படித்த இளைஞர்கள் கிராமங்களுக்குத் திரும்ப வேண்டும். அரசு வேலையையும், தனியார் நிறுவன வேலையையும் நம்பி இருக்காமல், அவரவர் நிலத்தில் விவசாயம் செய்தால் அவர்களுக்கு வேலை கிடைப்பதோடு மரியாதையும் கிடைக்கும். இன்னும் சில ஆண்டுகளில் விவசாயி என்றால் பெரிய மரியாதை கிடைக்கும். அந்தக் காலம் வரத்தான் போகிறது.
படித்துப் பட்டம் பெற்று வெவ்வேறு தொழில்களைச் செய்தாலும், என்னைப் போலவே என் மகன் கார்த்திக்கும் விவசாயத்தில் ஆர்வமாக இருக்கிறார். என்னுடன் தோட்டத்துக்கு வருவதோடு, விவசாய வேலைகளிலும் ஆர்வம் காட்டுகிறார். நான் இங்கு வர முடியாத நேரங்களில் விவசாய வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் மூலம் நல்ல இலாபம் கிடைக்கும். ஏனெனில், அதில் மிகப்பெரிய செலவு என்று எதுவும் கிடையாது. எவ்வளவு தான் அரசியல் பணிகள் மற்றும் மக்கள் பணிகள் இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தோட்டத்துக்கு வந்து விடுவேன். தென்னை மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் ஓய்வெடுக்கும் சுகமே அலாதியானது தான். தோட்டத்துக்கு வந்து போனால் மிகப்பெரிய மன அமைதி கிடைக்கும்.
அடுத்து இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிதான் தம்பி. அப்போது, விவசாயிகள் நலனைப் பாதுகாக்க நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு உதவ வேண்டும். இந்தச் சிந்தனை தான் எனக்குள் மேலோங்கி நிற்கிறது’’ என்று அவர் சொல்லி முடிக்கவும், தோட்டத்தைச் சுற்றி முடிக்கவும் சரியாக இருந்தது.
தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்வதைத் தனது கடமையாகக் கருதும் தங்கபாலுவின், விவசாயம் தொடர்பான சிந்தனைகள் அனைத்தும் உயர்ந்த சமூக நோக்கில் இருப்பதை எண்ணியபடியே அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.
மு.உமாபதி