உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

குடம் புளி kudampuli

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020

கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்கக் குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம் இப்போது பயன்படுத்தும் புளி புழக்கத்துக்கு வந்திருக்கிறது. குடம் புளி அதிகமாக விளைவதில்லை. பெரும்பாலும் மலைகளில் விளைகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தான் அதிகமாக விளைகிறது. மேலும், இலங்கை, மியான்மர், வடகிழக்கு ஆசியா போன்ற இடங்களில் விளையும் குடம் புளியின் தாயகம் இந்தோனேஷியா ஆகும்.

அறுசுவைகளில் ஒன்றான புளிப்புச் சுவையைத் தர எலுமிச்சை போன்ற மாற்றுப் பொருள்கள் இருந்தாலும், நாம் அதிகமாகப் பயன்படுத்துவது புளியைத் தான். சுவையான விருந்துக்கு மட்டுமல்ல, தென்னிந்திய சைவ, அசைவச் சமையல்களில் புளி நிறையவே பயன்படுகிறது. ஆனால், நமது பயனிலுள்ள புளியை விட அதிக மருத்துவக் குணமிக்கது குடம் புளி.     

குடம் புளியமரம், பழுப்பு நிறத்தில் இருக்கும். காய்ப்பதற்கு 7-8 ஆண்டுகள் ஆகும். இப்போது விதை மற்றும் இளந்தண்டு ஒட்டு முறையில் குடம்புளிக் கன்றுகள் கிடைக்கின்றன. இந்த மரம் எத்தகைய தட்பவெட்ப நிலையையும் தாங்கி வளரும். இதைப் பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை.

கோக்கம் புளி, மலபார் புளி, பானைப்புளி, மீன் புளி, கொடம்புளி, சீமைக் கொறுக்காய் (இலங்கை) எனப் பல பெயர்களைக் கொண்ட குடம் புளி, டிசம்பர்-பிப்ரவரி காலத்தில் பூத்துக் காய்த்து ஜூலையில் அறுவடைக்கு வரும். பழம் 5 செ.மீ. விட்டத்தில் சிறிய பூசணியைப் போல, வெளிர் மஞ்சளாக இருக்கும். இதிலுள்ள கொட்டையை நீக்கிக் காய வைத்துப் புகை மூட்டம் போடுவார்கள். காய்ந்த பழம் கறுப்பாக இருக்கும். பல ஆண்டுகளுக்குக் கெடாது. இதில், 30% வரை ஹைட்ராக்சி சிட்ரிக் ஆசிட் உள்ளது.

முன்பு நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி, இதன் மருத்துவக் குணம் மற்றும் மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் மற்ற கடைகளிலும் கிடைக்கிறது. ஆனால், சாதாரணப் புளியை விட இதன் விலை அதிகம். மிதமான புளிப்புச் சுவையை உடையது. அமிலத் தன்மை இருக்காது. சமையல் மணமாக இருக்கும். இப்புளியைச் சாதாரணப் புளியைப் போல ஊற வைத்துச் சமையலில் சேர்க்க இயலாது.

சாம்பார், காரக்குழம்பு, இரசம் போன்றவை கொதிக்கும் போது இதைச் சேர்த்து, சமைத்து முடித்ததும் வெளியே எடுத்துவிட வேண்டும். இல்லையெனில், நேரம் ஆக ஆகச் சமைத்த உணவில் புளிப்புச்சுவை கூடிக்கொண்டே போகும். ஊறுகாய், சட்னி போன்றும் செய்து சாப்பிடலாம். மேலும், வெய்யில் காலத்தில் குடம் புளியில் நீரை விட்டு மின்னம்மியில் நன்றாக அரைத்து, வெல்லம், ஏலக்காயைச் சேர்த்துப் பானகமாகத் தயாரித்துப் பருகலாம்.

உடல் மெலிவு மருந்துகளில் குடம் புளிக்கு முக்கிய இடமுண்டு. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், இந்தப் புளியை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து அழகிய  தோற்றத்தைத் தரும். உடல் தசைகளை வலுவாக்கும். நீரிழிவைப் போக்கும் நல்ல மருந்தாகும்.

குடம்புளித்தோல் சாறு, வாதம் மற்றும் வயிற்றுச் சிக்கல்களுக்கு நல்ல மருந்தாகும். கால்நடைகளின் வாய் சார்ந்த  நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகப் பயன்படுகிறது. இதில் மருத்துவக் குணங்கள் நிறைய இருப்பதால், இது, மருத்துவப் புளி எனப்படுகிறது. அமிலச் சிக்கல் உள்ளவர்களுக்கு நாம் பயன்படுத்தும் புளி ஆகாது.

ஆனால், குடம் புளியைப் பயன்படுத்தலாம். செரிமானச் சிக்கல் உள்ளவர்கள் குடம் புளியைத் தினமும் உணவில் சேர்த்து வரலாம். அசைவ உணவும் எளிதில் செரிக்க உதவும். அதிகப் பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். இதிலுள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் ஆசிட், மாரடைப்பு மற்றும் இதயநோயைத் தடுக்கும்.

குடம் புளியுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்துப் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றிச் சருமம் பொலிவுடன் இருக்க உதவும். நுரையீரலைப் பாதுகாக்கும். குடம் புளியில் தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து வயிற்றுப்போக்கைப் போக்கும். வாதம் போன்ற ஆர்த்ரைட்டீஸ் நோய்களைக் குணப்படுத்த, குடம் புளிக் கஷாயம் உதவுகிறது. மூளை வளர்ச்சிக்கும் குடம் புளி பயன்படுகிறது. குடம் புளி மரப் பட்டையில் வடியும் மஞ்சள் பிசின் மருத்துவத்தில் பயன்படுகிறது.

ரப்பர் மரப் பாலைக் கெட்டிப்படுத்தவும், தங்கம், வெள்ளியைப் பளபளக்க வைக்கவும் குடம் புளி உதவுகிறது. குடம்புளிப் பயன்பாட்டில் கவனிக்க வேண்டியது; இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்தம் உறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அளவாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


குடம் புளி DR.G.KALAISELVI e1616350379131

முனைவர் கோ.கலைச்செல்வி.

முனைவர் மு.மலர்மதி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., சென்னை-600051.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading