வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். கொரோனாவின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். தடுப்பூசியும் புழக்கத்தில் வந்து விட்டது. ஆனாலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் விட்டுவிடக் கூடாது. ஏனெனில், இதிலிருந்து இன்னும் நாம் முழுமையாக மீளவில்லை. மேலும் இக்கிருமி, புத்துருவம் பெற்று மக்களைத் தாக்கி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படி, 2020 ஆம் ஆண்டின் முக்கால் பகுதி, நமக்குச் சோதனைக் காலமாக இருந்தாலும், பருவமழை நன்றாகவே பெய்துள்ளது. சில பகுதிகளில் சரிவரப் பெய்யாமல் போயிருக்கலாம். மழை குறைவாகப் பெய்யும் பகுதிகளில் மரப்பயிர்களை வளர்த்தால், நீரை மிச்சப்படுத்தவும் முடியும்; எதிர்காலத்தில் மழை சிறப்பாக முகாமிடும் பகுதிகளாகவும் மாற்ற முடியும்.
பல்லாண்டுகள் வாழ்ந்து பயன்படும் மரங்களை வளர்த்தால், வேலையாட்கள் தேவை அதிகமாக இருக்காது. இடுபொருள் செலவும் உழவடைச் செலவும் குறையும். வருவாயைத் திட்டமிட முடியும். மரங்களுடன் ஆடு மாடு கோழியென, கால்நடைகள் வளர்ப்பையும் சேர்த்து, ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்ற முடியும். அன்றாடம் வருமானத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தரும்.
ஒருங்கிணைந்த பண்ணையில் நடக்கும் வளர்ப்புகளில் ஒன்று கைவிட்டாலும் மற்றவை நமக்குத் துணையாக நிற்கும். குறைந்தது ஓர் ஏக்கராவது இப்படி ஒருங்கிணைந்த பண்ணையாக இருந்தால், விவசாயிகள் வாட வேண்டிய நிலையே ஏற்படாது. எனவே, பெரு விவசாயிகளாக இருந்தாலும், சிறு குறு விவசாயிகளாக இருந்தாலும், அனைவரும் அவரவர் சூழலுக்குத் தக்கபடி, தங்களின் நிலத்தில் குறிப்பிட்ட பகுதியை, ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.
ஏனெனில், சீரற்ற மழைப்பொழிவு, அதனால் ஏற்படும் வறட்சி அல்லது வெள்ளம், வேலையாட்கள் கிடைக்காமை மற்றும் கடுமையான கூலி உயர்வு, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருள்களின் விலையேற்றம், விவசாயத்தை, விவசாயிகளை நிலைகுலையை வைக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து மகசூலை எடுத்தால், கட்டுப்படியான விலையின்றித் தவித்துத் தத்தளிக்கும் சூழல்.
இவற்றுக்கெல்லாம் தீர்வைத் தருவது தான் ஒருங்கிணைந்த பண்ணையம். ஆடு வளர்க்கலாம்; மாடு வளர்க்கலாம்; கோழி வளர்க்கலாம்; காடை வளர்க்கலாம்; காளான் வளர்க்கலாம்; மீன் வளர்க்கலாம்; முயல் வளர்க்கலாம்; நாய் வளர்க்கலாம்; பன்றி வளர்க்கலாம்; இன்னும் அனுபவத்தில், அவரவர் வாழும் பகுதிக்கு ஏற்ப, விதவிதமான வளர்ப்புகளை மேற்கொள்ளலாம்.
இவையனைத்தும் தருவது பணம் பணம். இதனால், வேதனைகளில் இருந்து வெளியேற முடியும்; அமைதியான வாழ்வை அடைய முடியும். கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம். எனவே, விவசாயிகள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம் அவசியம்.
ஆசிரியர்