ஆவின் நிறுவனத்தின் புதிய பத்து வகைப் பால் பொருள்களை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 19.08.2022 அன்று, சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில், விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் என்னும் வணிகப் பெயரில், பால் மற்றும் பால் பொருள்களை, தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறது. மேலும், வளர்ந்து வரும் நுகர்வோரின் தேவைக்கேற்ப, புதிய பால் பொருள்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. பால் பொருள்கள் விற்பனையைக் கூட்டி, கூடுதல் வருவாயை ஈட்டி, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.
இவ்வகையில், இவ்வாண்டு மார்ச் 2022 இல் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை அம்பத்தூர் பால்பண்ணை மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணையில் தயாராகும், பத்துப் பால் பொருள்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
பலாப்பழ ஐஸ்கிரீம் 125 மி.லி., வெள்ளை சாக்லேட் 45 கிராம், குளிர் காபி 200 மி.லி., வெண்ணெய்க் கட்டி 200 கிராம், பாசந்தி 100 மி.லி., ஆவின் ஹெல்த் மிக்ஸ் 250 கிராம், பாலாடைக்கட்டி 200 கிராம், அடுமனை யோகர்ட் 100 கிராம், ஆவின் பால் பிஸ்கட் 75 கிராம், ஆவின் வெண்ணெய் முறுக்கு 200 கிராம் ஆகிய, பத்துப் பால் பொருள்களை பால்வளத்துறை அமைச்சர் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
குளிர்ந்த காஃபி
ஆவினின் குளிர்ந்த காஃபி, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விரும்பும் வகையில் சிறந்த சுவையில் தயாரிக்கப்படுகிறது. இது, புத்துணர்வு பானமாக 200 மி.லி, ரூ.30 விலையில் விற்கப்படும்.
பாலாடைக்கட்டி
பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி 200 கிராமின் விலை ரூ.140 ஆகும். ஆவின் பாலாடைக்கட்டி மூலம், சாண்ட்விச், தோசை, பிஸ்சா, பர்கர், பக்கோடா, பால்ஸ் போன்ற பலவகை உணவுகளைச் செய்து சாப்பிட்டு மகிழலாம்.
பலாப்பழ ஐஸ்கிரீம்
ஆவின் ஏற்கெனவே பிரீமியம் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது பலாப்பழப் பிரியர்கள் விரும்பிச் சுவைக்கும் வகையில், பலாப்பழம் ஐஸ்கிரீமை விற்பனை செய்ய உள்ளது. இந்த 125 மி.லி. ஐஸ்கிரீமின் விலை ரூ.45 ஆகும்.
வெண்ணெய்க் கட்டி
ஆவின் வெண்ணெய் தமிழக மக்களால் மிகுதியாக வாங்கப்படும் பால் பொருளாகும். இது, 200 கிராம் மற்றும் 500 கிராம் கட்டிகளாக விற்பனை செய்யப்படுகிறது. தற்போது எட்டு 25 கிராம் வில்லைகளைக் கொண்ட 200 கிராம் வெண்ணெய்ப் பொட்டலம் தயாரிக்கப்படுகிறது. இதன் விலை 130 ரூபாயாகும்.
பாஸந்தி
ஆவின், மைசூர்பா, பால்கோவா, பால்பேடா, குலாப்ஜாமுன், இரசகுல்லா போன்ற பால் சார்ந்த தரமான இனிப்பு வகைகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது, பாஸந்தி என்னும் பால் பொருள், உயர் தரத்தில், மிகுந்த சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. 100 மி.லி. பாஸந்தியின் விலை ரூ.60 ஆகும்.
ஆவின் பால் பிஸ்கட்
ஆவின் பால் பொடி மற்றும் ஆவின் வெண்ணெய் மூலம், சுவையுள்ள பால் பிஸ்கட்டை ஆவின் தற்போது தயாரித்து வருகிறது. இதை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பால் அல்லது தேநீருடன் ருசித்து உண்ணலாம். ஆவினின் 75 கிராம் பால் பிஸ்கட்டின் விலை ரூ.12 ஆகும்.
ஆவின் வெண்ணெய் முறுக்கு
ஆவின், தனது நுகர்வோரின் நீண்டகால எதிர்பார்ப்பான கார வகைகள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இவ்வகையில், தற்போது ஆவின் வெண்ணெய் முறுக்கை விற்பனைக்கு வந்துள்ளது. சுவையும் தரமும் நிறைந்த 200 கிராம் முறுக்கின் விலை ரூ.80 ஆகும்.
அடுமனை யோகர்ட்
ஆவின் யோகர்ட், சுவைக்கும் யோகர்ட், பருகும் யோகர்ட் எனப் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. யோகர்ட்டில் நமது உடலுக்குத் தேவையான நன்மை தரும் நுண்ணியிரிகள் உள்ளன. மேலும், இதை உண்டால், வயிற்றுப்புண் மற்றும் செரிமானச் சிக்கல் சரியாகும். இந்நிலையில், தற்போது ஆவின் பேக்டு யோகர்ட் என்னும் புதிய யோகர்டைத் தயாரிக்கிறது. 100 கிராமின் விலை 50 ரூபாயாகும்.
ஆவின் ஹெல்த் மிக்ஸ்
ஆவின் ஹெல்த் மிக்ஸ் என்பது, தானிய வகைகள், பயறு வகைகள், கொட்டை வகைகள் மற்றும் பால்பொடி மூலம் பாரம்பரிய முறையில் தயாராகும் சத்து மாவாகும். இதை, அனைத்து வயதினரும் உண்ணலாம். ஆவின் ஹெல்த் மிக்சில் பால் பொடியைச் சேர்ப்பதால், இதில் பாலைச் சேர்க்கத் தேவையில்லை. இதில், சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு அல்லது உப்பு ஏதேனும் ஒன்றைச் சுவைக்காகச் சேர்க்கலாம். 250 கிராம் ஹெல்த் மிக்சின் விலை ரூ.120 ஆகும்.
வெள்ளை சாக்லேட்
சாக்லேட் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் சத்துமிகு தின்பண்டம். ஆவினில் ஆவின் நட்டிஸ் சாக்லேட், சாகோ பைட் போன்ற சாக்லேட் வகைகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பில் உள்ளன. தற்போது, வெள்ளை நட்டிஸ் சாக்லேட் என்னும் புதிய பால் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. 45 கிராம் வெள்ளைச் சாக்லேட்டின் விலை ரூ.30 ஆகும்.
இந்தப் பொருள்கள் அறிமுக நிகழ்ச்சியில் பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு.ந.சுப்பையன் மற்றும் ஆவின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மு.உமாபதி