கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2017
காலங்காலமாக நமது கிராமங்களில் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்குள், வீட்டைச் சுற்றி, தெருக்களில், தோப்புகளில், பண்ணை வீடுகளில் என, நமது நாட்டுக் கோழிகள் அவரவர் வசதிவாய்ப்புக்கு ஏற்றவாறு வளர்க்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடும்போது, தொன்றுதொட்டு வரும் பழைமை வாய்ந்த நுண்ணறிவு சார்ந்த சிறுசிறு தொழில் நுட்பங்களையும் பதிவு செய்து அவற்றைப் பயன்படுத்தினால் அதிகளவில் பலன் கிடைக்கும். மேலும், புதிய தொழில் நுட்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது பாரம்பரியக் கருத்துகளைக் கட்டாயமாகப் பதிவு செய்தல் மிகவும் முக்கியமாகும்.
வீரத்துக்கும், முட்டைக்கும், இறைச்சிக்கும், மருத்துவத்துக்கும் என நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டன. இன்றைய அறிவியல் உலகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பும் வேறு திசையில் சென்று கொண்டுள்ளது. நாட்டுக்கோழி முட்டைகளைக் கூட வணிக அடிப்படையில் பொரிக்கச் செய்யும் முறை பெருமளவில் செயல்படுத்தப்படுகிறது. கோழிகளைக் கொண்டு முட்டைகளைப் பொரிக்கச் செய்யும் முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. பாரம்பரிய அடை வைத்தல் முறை குறித்து இங்கே விளக்கமாகக் காணலாம்.
நாட்டுக்கோழி முட்டையிடத் தொடங்கி ஏழெட்டு நாட்களில் அடையை வைத்துவிட வேண்டும். அதாவது, ஒரு நாட்டுக்கோழி 12 அல்லது 14 முட்டைகளை இடுவதாக வைத்துக் கொண்டால், முதலில் இடும் நான்கைந்து முட்டைகளை விற்று விடலாம் அல்லது உணவாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது இதற்கு முன் முட்டையிடத் தொடங்கி அடைக்குப் போகும் வேறு கோழியின் அடையில் வைக்கலாம். இந்த முறையை நமது முன்னோர்கள் மிகவும் நுணுக்கமாகக் கடைப்பிடித்து வந்தனர். நாட்டுப் பசுவின் சாணியால் மெழுகப்பட்ட மூங்கில் கூடையில், செம்மண்ணுடன் சிறிது அடுப்புச் சாம்பலை இட்டுச் சிறிய இரும்புத் துண்டை அதில் பாதியளவில் புதைத்து, இரண்டு மூன்று அடுப்புக்கரித் துண்டுகள், இரண்டு மூன்று மிளகாய் வற்றல்களை இட்டு, அந்தி சாயும் வேளையில், முட்டைகளை அடுக்கி அடைகூட்டி வைப்பார்கள்.
இதை நாம் மூடநம்பிக்கை என்று கூறிவிட முடியாது. நமது மூதாதையர்கள் மூடர்கள் அல்ல. எல்லா விவரங்களையும் அலசி ஆராய்ந்து செய்தவர்கள் என்றால் அது மிகையாகாது. குளிர், பனி, வெப்பம், காற்று என எந்தச் சூழலிலும் ஒரே சீரான வெப்பத்தைக் கொடுக்கும் தன்மை மூங்கில் கூடைக்கு உண்டு என்பதால், அதை அடை வைக்கத் தேர்ந்தெடுத்தனர் எனலாம். மேலும், மூங்கில் கூடையில் பூசப்படும் பசுவின் சாணம், அடையில் இருக்கும் முட்டைகளை நோய்க்கிருமிகள் தாக்காதவாறு கவசமாகப் பாதுகாக்கும். எனவே, கூடையில் சாணத்தைப் பூசினர்.
மணல் கலந்த செம்மண், வெப்பத்தை வெளிப்படுத்தும் குணமும், நல்ல காற்றோட்டமும் மிக்கதாகும். எனவே, முட்டைகளின் மேல் விழும் கோழியின் உடல் வெப்பம் அங்கேயே தங்கி அதிகமாகாமல் சீராக இருக்கச் செய்யும். இதுவே, களிமண்ணாக இருந்தால் வெப்பத்தை உள்வாங்கி அதிக வெப்பத்துக்கு வழிவகுக்கும். செம்மண்ணில் உள்ள காற்றோட்டமும் முட்டைக்கரு நன்கு வளர உறுதுணையாக இருக்கும். இதனால், முட்டையின் கருத்திறன் அதிகமாகி, குஞ்சுகள் சுறுசுறுப்பாகவும், திடமாகவும் இருக்கும். இதற்கு அறிவியல் சார்ந்த சான்றுகளும் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஜோதிடத்தில், செவ்வாயைச் சிவந்த வெப்பக்கிரகம் என்று கூறுகிறார்கள். எனவேதான் நம் முன்னோர்கள் கோழிமுட்டைகளை அடைவைக்கச் செம்மண்ணைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
செம்மண்ணில் கொஞ்சம் அடுப்புச் சாம்பலைச் சேர்ப்பது, கோழிப்பேன், உண்ணிகள், பூச்சிகள், நுண்கிருமிகள் ஆகியன முட்டைகளைத் தாக்காமல் தடுப்பதற்கே ஆகும். அவரைச் செடிகளைப் பூச்சிகள் தாக்காமல் இருக்க, அதிகாலைப் பனிப்பதத்தில் இலைகள் மீது அடுப்புச் சாம்பலைத் தூவும் வழக்கம் கிராமங்களில் இன்றும் உண்டு.
அடையில் பாதியளவு புதைத்து வைக்கப்படும் இரும்புத் துண்டு, பட்டாசு, வெடிச்சப்தம், இடி, மின்னல் போன்ற அதிகச் சப்த அதிர்வலைகளை உள்வாங்கி, முட்டைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அடுப்புக்கரியானது காற்றுமூலம் வரும் ஈரத்தை உறிஞ்சி, அடைமண் ஈரமாகாதவாறு பாதுகாக்கிறது. மிளகாய் வற்றலில் இருந்து வரும் காரநெடியானது, புழு, பூச்சிகள், வண்டுகள் போன்றவை அடைக்குள் வராமல் பாதுகாக்கிறது.
மாலை 4-6 மணிக்குள் முட்டைகளை அடையில் வைக்க வேண்டும். இந்த நேரத்தை ஆன்மிகத்தில் பிரதோஷ நேரம் என்கிறார்கள். மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களுக்கும் இந்த நேரம் நன்மை செய்யும் என்கிறார்கள். ஏனெனில், இந்த நேரத்தில் வெப்பமும் குளிர்ச்சியும் ஒரே சீராக இருக்கும். எனவே, முட்டைகளை அடை வைக்கும் போது, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், 87.5 டிகிரி பாரன்ஹீட் ஈரப்பதமும், அடையில் உட்காரும் தாய்க்கோழி மூலம் கிடைக்கும். இதே தட்ப வெப்பம் மாலையில் நிலவுவதால், நம் முன்னோர்கள் நுணுக்கமாகக் கணக்கிட்டு, இந்த நேரத்தை முட்டைகளை அடை வைப்பதற்கான நேரமாகத் தேர்ந்தெடுத்தனர். இதில் நம்பிக்கை இல்லாதவர்கள், கோடை மற்றும் குளிர் காலத்தில், முட்டைகள் பொரிக்கும் நாட்கள் வேறுபடுவது ஏன் என ஆராய்ந்தால் புரியும்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது, கருவில் உருவாகும் உயிரினம், தாயின் மூலம் பதிக்கப்படும் பதிவுகளை ஏற்றுக்கொள்ளும் என்பதேயாகும். அதாவது, தாய்க்கோழியின் உடல் அதிர்வுகள் மூலம் பல செய்திகள், முட்டைக் கருவில் பதியப்படுகின்றன. இதனால், கருவிலிருந்து உருவாகும் குஞ்சானது, நோய் எதிர்ப்புத் திறன், எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளல், சுறுசுறுப்பு, வீரம், சண்டையிடும் திறன், சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்தல் போன்ற தன்மைகளைப் பெற்றுக்கொள்கிறது.
எனவே, நாட்டுக்கோழி முட்டைகளைச் செயற்கையாகப் பொரிக்கச் செய்யாமல், நமது முன்னோர்கள் காலங்காலமாகக் கடைப்பிடித்ததுடன், நமக்கும் காட்டிவிட்டுச் சென்றுள்ள, தாய்க்கோழிகள் மூலமாக அடைவைத்துப் பொரிக்கச் செய்வதே சிறந்ததாகும். இந்த முறையை இதுவரையில் மறந்திருந்தாலும் இனிமேலாவது நடைமுறைப்படுத்தி நற்பயனை அடைவீராக!
முனைவர் க.தேவகி,
முனைவர் ப.இரா.நிஷா, முனைவர் க.வேல்முருகன்,
வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்-603203.