கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017
கலப்படம் என்பது, விற்பனை செய்யப்படும் பொருளின் தரத்தைக் குறைப்பதற்காக, வேண்டுமென்றே வேறு பொருள்களை அதனுடன் சேர்ப்பது. அல்லது அதிலுள்ள முக்கியமான சத்துப் பொருள்களை நீக்கி விட்டு விற்பனை செய்வது. உணவின் தரத்தைக் குறைப்பதற்காக விலைமலிவான பொருளை அத்துடன் சேர்ப்பது, முக்கியமான சத்துகளை அந்தப் பொருளிலிருந்து ஒரு பகுதியை அல்லது முழுமையாக நீக்கிவிட்டு, கவர்ச்சியைக் கொடுப்பதற்காக அதன் நிறத்தை மாற்றி விற்பனை செய்வது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். எந்தளவில் கலப்படம் உள்ளதோ அந்தளவில் அதன் தரமும் குறைந்து விடும். இப்படி கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை உண்ணும் மக்கள், இதயநோய், சிறுநீரகநோய், சர்க்கரை நோய், குடற்புண், கண்நோய் எனப் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
பாலில் கலப்படம் செய்யப்படும் பொருள்கள்
நீர், ஸ்டார்ச், யூரியா, டிடர்ஜெண்ட், சிந்தட்டிக் மில்க், குளுக்கோஸ், வனஸ்பதி, பார்மலின், அம்மோனியம் சல்பேட், உப்பு, ஹைட்ரஜன் பர் ஆக்ஸைட், சோடா பை கார்பனேட், போரிக் பௌடர், சோப் ஆகியன பாலில் கலப்படம் செய்யப்படுகின்றன.
கலப்படப் பொருள்களைக் கண்டுபிடிக்கும் விதம்
பாலில் கலப்படம் செய்யப்படும் பொருள்களை இரண்டு விதமாகக் கண்டுபிடிக்கலாம். 1.குவாலிடேடிவ் டிடெக்ஷன் (Qualitative detection) 2.குவாண்ட்டிடேடிவ் டிடெக்ஷன் (Quantitative detection). இவற்றில், லிக்யுட் குரோமோடோகிராபி முறை (Liquid Chromatography Test- L.C. Test) எலிசா டெஸ்ட் (Elisa Test) பி.சி.ஆர்.டெஸ்ட் (Polymerase Chain Research Test) பேஜ் டெஸ்ட் (Poly Acrylamide Gel Electrophoresis) ஆகியன சோதனைகள் அடங்கும். குவாலிடேடிவ் டிடெக்ஷன் என்பது, இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்திக் கண்டுபிடிப்பது. இதற்கு மில்க் சிலிப் டெஸ்ட் (Milk Slip Test) என்று பெயர்.
தண்ணீர்
பாலின் அளவைக் கூட்டுவதற்காகப் பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்படுகிறது. வழவழப்பான டைல்ஸ் (tiles) அல்லது கிரானைட் பலகையைச் சாய்வாக நிறுத்தி வைத்து, அதன்மேல் பகுதியில் சில சொட்டுப் பாலை வைத்தால் அது மெதுவாகக் கீழே இறங்கும். அப்போது பால் வரும் வழியில் மெல்லிய கோடு தோன்றும். இப்படி மெதுவாக இறங்குவதுடன் மெல்லிய கோடும் தெரிந்தால் தண்ணீர் கலக்காத பால். இதற்கு நேர்மாறாக, பால் வேகமாகக் கீழே இறங்குவதுடன் கோடும் தெரியவில்லை என்றால் அது தண்ணீர் கலக்கப்பட்ட பாலாகும்.
ஸ்டார்ச்
சோதனைக் குழாயில் 3 மில்லி பாலை எடுத்துக்கொண்டு அத்துடன் சில துளிகள் டிங்சர் அயோடினைக் (tincture of iodine) கலக்கும்போது பால் நீலநிறமாக மாறினால் அது ஸ்டார்ச் கலப்படம் செய்யப்பட்ட பாலாகும்.
யூரியா
சோதனைக் குழாயில் 3 மில்லி பாலை எடுத்துக் கொண்டு அதில் அரைத் தேக்கரண்டி சோயாபீன் பொடியைச் சேர்த்து நன்றாகக் குலுக்க வேண்டும். அடுத்து 5 நிமிடம் கழித்துச் சிவப்பு லிட்மஸ் தாளை (red litmus paper)அந்தக் குழாயில் போட்டு அரை நிமிடம் கழித்து வெளியே எடுக்க வேண்டும். அப்போது அந்தத் தாள் நீலமாக மாறினால், பாலில் யூரியா கலக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
டிடர்ஜெண்ட்
சோதனைக் குழாயில் 5 மில்லி பாலையும், 5 மில்லி நீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது நுரைத்து வந்தால் (lather formation) டிடர்ஜெண்ட் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
சிந்தடிக் மில்க்
சிந்தடிக் கலப்படம் செய்யப்பட்ட பால் கசப்பாக இருக்கும். இரண்டு விரல்களால் தேய்த்தால், சோப்பைப் போல வழவழப்பாக இருக்கும். இந்தப் பாலைக் காய்ச்சினால் மஞ்சளாக மாறும்.
குளுக்கோஸ்
குளுக்கோஸ் கலக்கப்பட்ட பாலில், டை அசிட்டிக் ஸ்டிரிப் (di acetic strip) என்னும் தாளை அரை நிமிடம் முதல் ஒரு நிமிடம் வரையில் வைத்திருக்கும் போது அந்தத் தாளின் நிறம் மாறினால் குளுக்கோஸ் கலப்படம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.
வனஸ்பதி
சோதனைக் குழாயில் 3 மில்லி பாலுடன் 10 துளி ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து இந்தக் கலவை சிவப்பாக மாறினால் வனஸ்பதி சேர்க்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்ளலாம்.
பார்மலின்
சோதனைக் குழாயில் 10 மில்லி பாலை எடுத்துக்கொள்ள வேண்டும். குழாயின் ஒரு பக்கமாக 5 மில்லி அடர் கந்தக அமிலத்தை மெதுவாக ஊற்ற வேண்டும். சோதனைக் குழாயைக் குலுக்கக் கூடாது. இந்தக் கலவை நீலமாகவோ வயலட்டாகவோ மாறினால் பார்மலின் கலக்கப்பட்டுள்ளது என அறிந்து கொள்ளலாம்.
அம்மோனியம் சல்பேட்
சோதனைக் குழாயில் 5 மில்லி பாலையும், 5 மில்லி சிட்ரிக் அமிலத்தையும் ஊற்ற வேண்டும். இரண்டும் கலந்து ஆடையைப் போலத் தோன்றும். இந்த ஆடையுடன் 0.5 மில்லி பேரியம் குளோரைடைக் கலந்தால் பாலானது தயிரைப் போலத் (precipitation) தோன்றும். இதிலிருந்து இந்தப் பாலில் அம்மோனியம் சல்பேட் கலக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
உப்பு
சோதனைக் குழாயில் 5 மில்லி சில்வர் நைட்ரேட்டை எடுத்துக்கொண்டு 2-3 துளி பொட்டாசியம் டைகுரோமேட்டையும் ஒரு மில்லி பாலையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அப்போது இக்கலவை மஞ்சளாக மாறினால் உப்புக் கலக்கப்பட்டுள்ளது என அறியலாம்.
ஹைட்ரஜன் பர் ஆக்ஸைட்
சோதனைக் குழாயில் 5 மில்லி பாலுடன் 3 துளி பேரா பினைலீன் டை அமைனைச் (Para phenylene demine) சேர்த்து நன்றாகக் குலுக்கும் போது நீலமாக மாறினால், ஹைட்ரஜன் பர் ஆக்ஸைட் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என அறியலாம்.
சர்க்கரை
சோதனைக் குழாயில் 3 மில்லி பாலையும், 2 மில்லி ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், 50 மி.கி. ரிசோசினாலையும் கலந்து சூடாக்க வேண்டும். அப்போது சிவப்பு நிறமாக மாறினால் சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது என்று அறியலாம்.
சோடா பை கார்ப்
சோதனைக் குழாயில் 3 மில்லி பாலையும், 5 மில்லி ரெக்டிபைடு ஸ்பிரிட்டையும், 4 துளி ரோசாலிக் அமிலத்தையும் கலக்கும்போது சிவப்பாகவோ ரோஸாகவோ மாறினால், சோடா பை கார்ப் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என அறியலாம்.
போரிக் பௌடர்
சோதனைக் குழாயில் 3 மில்லி பாலுடன் 20 துளி ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கலந்து நன்றாகக் குலுக்க வேண்டும். இதில், மஞ்சள் லிட்மஸ் தாளை நனைத்து ஒரு நிமிடம் கழித்துப் பார்த்தால் சிவப்பாக மாறும். இந்தச் சிவப்பு லிட்மஸ் தாளுடன் சில துளி அம்மோனியாவைச் சேர்த்ததும் அது பச்சையாக மாறினால், போரிக் பௌடர் பாலில் கலக்கப்பட்டுள்ளது என அறியலாம்.
சோப்
பாலுடன் சோப்பைக் கலந்தால், பால் கெட்டியாக அல்லது அடர்த்தியாக இருப்பதுடன் நுரையுடனும் இருக்கும். இந்தப் பாலுடன் பினால்ப்தலினைச் சேர்த்தால் பிங்க் நிறமாக மாறும். சோப் கலந்த பாலைச் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு, குடற்புண் ஏற்படுவதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்படும். எனவே, கலப்படப்பாலைத் தவிர்ப்போம்! கவலையில்லாமல் வாழ்வோம்!
டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன்,
மண்டல இணை இயக்குநர் ஓய்வு,
கால்நடைப் பராமரிப்புத் துறை, கன்னங்குறிச்சி, சேலம்.