பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், எவ்வித ஆபத்தும் இல்லாமல், எளிதாகப் பனை மரத்தில் ஏறுவதற்கான சிறந்த கருவியைக் கண்டுபிடிப்பவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பில், பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ளலாம். இந்தக் கருவியைக் கண்டு பிடிப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தோட்டக்கலைத் துறையின் பேராசிரியர், வேளாண்மைப் பொறியியல் துறையின் பேராசிரியர், அரசு தோட்டக்கலைத் துறையின் மத்திய மற்றும் மாநிலத் திட்டங்களுக்கான கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு பனைப்பொருள் வளர்ச்சி வாரியத்தின் அலுவலர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.
இந்தக் கருவியைக் கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்தச் செலவினம், கருவியின் செயல் திறன், இதற்கான விலையின் உறுதித் தன்மை, கருவியின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், விருதுக்கானவர் தேர்வு செய்யப்படுவார்.
இந்த விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்களும், தனி மனிதர்களும் www.tnhorticulture.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், தமிழ்நாடு அரசு.