ஆதாரத்தைக் காட்டி அனுபவத்தைப் பேசும் ஐ.பெரியசாமி!
கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018
ஒரு காலத்தில் நெல்லும் கரும்பும், வாழையும் தென்னையும் என, நீர்ச் செழிப்புள்ள பயிர்கள் விளைந்த பூமி. பூக்கள், புகையிலை, காய்கறிகள் மற்றும் புஞ்சைத் தானியங்களுக்கும் பஞ்சமில்லா பூமி. குழந்தைகளுக்குப் பாலூட்டும் அன்னையரைப் போல, பெய்யும் மழையை எல்லாம் உள்வாங்கி வைத்து, ஊற்றாறுகளாய் ஓடவிட்டு, குடிநீராக, பாசன நீராக, குறையில்லாமல் கொடுத்து வந்த சிறுமலையும், கொடைக்கானலும், இந்த மண்ணின் நீர்வளத்தை உறுதி செய்யும் இயற்கைப் பெருங்காரணிகள். ஆக, பூட்டுக்கும், தோல் பொருட்களுக்கும் பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டம், வேளாண்மையிலும் செழித்தோங்கிய மாவட்டம் என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆனால், கால மாற்றத்தால் பல ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், வறட்சி கொடிகட்டிப் பறக்கிறது. குடிநீருக்கும் கூட மக்கள் திண்டாடி வருகின்றனர். பாசன நீருக்கு ஆதாரமாக விளங்கிய வைகையாறு, மஞ்சளாறு, குடகனாறு, மணலாறு, சுருளியாறு, கூத்தநாய்ச்சி வாய்க்கால், வறட்டாறு, பிரப்பாறு, சின்னாறு, கொட்டக்குடி ஆறு, குதிரையாறு, கோம்பையாறு, வராக நதி, பாம்பாறு போன்ற ஆறுகளும், நாயோடை, மணலோடை, பிள்ளை விழுங்கி ஓடை போன்ற ஓடைகளும் காய்ந்து கிடக்கின்றன. அதனால், நிலத்தடி நீரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இங்கே நிலைகுலைந்து விட்டது.
எனவே, பெற்ற பிள்ளைகளைப் போலச் சீராட்டி, பாராட்டி வளர்த்த தென்னை மரங்களெல்லாம், பட்டுக் கிடப்பதைக் காணச் சகிக்காத விவசாயிகள், அவற்றை வெட்டிச் சாய்த்திருக்கும் அவலத்தை ஆங்காங்கே காண முடிந்தது. சிறுமலை மற்றும் கொடைக்கானலின் குளிர்ச் சாரலில் இதமாய் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில், வெய்யிலின் தாக்கம் மிகுதியாய் இருப்பதை உணர முடிந்தது. பெரும்பாலான நிலங்கள் பயிரின்றித் தரிசாகக் கிடந்தன.
இந்த நிலையில், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தனது நிலம் முழுவதும் பல்வேறு வகையான பழ மரங்களை வளர்த்து, இந்தக் கடுமையான வறட்சியிலும் வேளாண்மையில் சாதித்து வருகிறார் என்பதை அறிந்து அவரிடம் பேசினோம். வாஞ்சையுடன் வரச் சொன்ன அவர், முதலில், வத்தலக்குண்டு பகுதியில் குன்னுவராயன்கோட்டையில் உள்ள அவரது பூர்விகத் தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
போகும் வழியில் இருந்த தோட்டங்களில் காய்ந்து போய்க் கிடந்த தென்னை மரங்களைக் காட்டிக்கொண்டே வந்தார். அந்தத் தென்னை மரங்களையும், வயல் வெளிகளையும் பார்த்தபோது, அந்தப் பகுதியின் வறட்சியை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. திண்டுக்கல் நகரைக் கடந்ததும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறு சிறு மலைகளும் கரடுகளும் தென்பட்டன. காரின் ஏசியிலும் வெய்யிலின் தாக்கத்தை நம்மால் உணர முடிந்தது. பயணத்தின் போதே நம்மிடம் பேசத் தொடங்கினார்.
“விவசாயம் தான் எங்கள் பரம்பரைத் தொழில். நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்திலிருந்தே எங்கள் தோட்டத்துக்குச் செல்வேன். விவசாய வேலைகளைச் செய்வேன். எனக்கு அப்போது இருந்தே விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு. அது இன்று வரையில் தொடர்கிறது. இப்போது வரையில் விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் எனக்கு இல்லை. என்னுடைய அப்பா காலத்தில், தென்னை, வாழை, நெல், கரும்பு முதலிய பயிர்களைச் சாகுபடி செய்து வந்தனர். அதற்கடுத்து ஏற்பட்ட வறட்சி காரணமாக, நெல்லி, எலுமிச்சை, சப்போட்டா போன்ற, நீர் நிறையத் தேவைப்படாத மரப்பயிர்களை நான் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். இப்போது வறட்சி அதிகமாக இருப்பதால், அடுத்து முருங்கையைப் பயிரிடலாமென இருக்கிறேன்.
நீரின் அருமையை உணர்ந்து, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நான் சொட்டுநீர்ப் பாசன விவசாய முறைக்கு மாறி விட்டேன். அப்போது அதை எங்கள் பகுதியிலுள்ள விவசாயிகளும் மக்களும் ஆர்வமாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்தார்கள். சொட்டுநீர்ப் பாசனத்தில் சொட்டுச் சொட்டாக விழும் நீர் தென்னைக்குப் போதவில்லை. அதனால் நீரைப் பீய்ச்சியடிக்கும் தெளிப்புநீர்ப் பாசன முறையை அமைத்தேன்.
முன்பு பெய்ததைப் போலப் போதுமான மழை இப்போது பெய்வதில்லை. வருடத்துக்கு 10-15 செ.மீ. மழை இருந்தால்கூட நன்றாக விவசாயம் செய்யலாம். இப்போது நிலவும் இந்த வறட்சி இன்னும் இரண்டு வருடத்துக்கு நீடித்தால் விவசாயிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. வேறு இடம் தேடி கூலி வேலைக்குத் தான் செல்ல வேண்டும். விவசாயம் முற்றிலும் அழிந்து போகும்.
தற்போது திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வறட்சி கடுமையாக இருக்கிறது. தென்னை மரங்கள் எல்லாமே காய்ந்து மடிந்து வருகின்றன. ஆனாலும், சொட்டுநீர்ப் பாசனம் மூலமும், லாரிகளில் தண்ணீரை வாங்கி ஊற்றியும், மடியும் நிலையிலுள்ள தென்னை மரங்களின் உயிரைக் கொஞ்சம் காப்பாற்றி வருகிறோம்’’ என்று சொல்லி முடிக்கவும், அவரது பூர்விக நிலத்துக்கு வரவும் சரியாக இருந்தது.
வண்டியை விட்டு இறங்கியதும் அங்கிருந்த நெல்லித் தோப்புக்குள் நம்மை அழைத்துச் சென்றார். நெல்லிக் காய்கள் சிறிதும் பெரிதுமாக இருந்தன. சட்டென்று பெரிய நெல்லிக்காய் ஒன்றைப் பறித்த அவர், அதை நம்மிடம் காட்டி, “தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த அளவில் இந்த நெல்லிக்காய் உள்ளது. போதுமான நீர் இருந்திருந்தால் இந்த நெல்லி, இன்னும் இரண்டு மடங்கு பெரியதாக, சிறிய ஆப்பிள் அளவுக்கு இருக்கும்’’ என்றார்.
தொடர்ந்து நெல்லி மரங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவர், அங்கிருந்த தோட்டக்காரர்களிடம் தண்ணீர் விடுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். நீர்ப் பற்றாக்குறையால் நெல்லி மரங்கள் வாடிப்போய் இருந்தன. அதனைத் தொடர்ந்து அவரது தோட்டத்தில் செயல்படுத்தி வரும் சொட்டுநீர்ப் பாசன முறைகளையும் விளக்கினார்.
பின்னர் அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த குட்டையைக் காட்டினார். அந்தக் குட்டையில் உள்ள நீர், நிலத்தில் இறங்கா வண்ணம் பாலிதீன் தாளால் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து திண்டுக்கல் பகுதியில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டை எடுத்துக் கூறியவர், மின்சாரம் இல்லாததால், டீசலில் இயங்கும் பம்புகளைப் பயன்படுத்திப் பாசனம் செய்வதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மாமர நிழலில் சற்று இளைப்பாறினோம். அப்போது அங்கு வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள், புறா முதலியவற்றைப் பார்த்து, அவற்றுடன் சிறிது நேரம் இருந்து விட்டு அங்கிருந்து பரசுராமபுரம் தோட்டத்துக்குக் கிளம்பினோம்.
அப்போது, “தென்னைக்கு ஐம்பது அறுபது லிட்டர் நீர் தேவைப்படும். ஒரு மரத்துக்கு நூறு லிட்டர் நீர் கிடைத்தால் தென்னை நல்ல விளைச்சலைத் தரும். நெல்லிக்கு அவ்வளவு நீர் தேவைப்படாது. வறட்சியைத் தாங்கி வளரும். எல்லா வகையான மண்ணிலும் வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். வருடத்துக்கு இரண்டு முறை காய்க்கும். ஒரு ஏக்கர் நெல்லியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். எலுமிச்சைப் பழங்களை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. பழுத்துக் கீழே விழுந்த பழங்களைத் தான் எடுக்க வேண்டும்’’ என்று, வருமானத்தையும், சில சாகுபடிக் குறிப்புகளையும் கூறினார்.
“கடந்த தி.மு.க. ஆட்சியின் போது தலைவர் கலைஞர் கொண்டு வந்த மருதாநதி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை இந்த ஆட்சியில் செயல்படுத்தாமல் விட்டு விட்டார்கள். அதனால் தான் இந்தப் பகுதியில் குடிநீர்ப் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. இங்கே இப்போது 1100 அடி வரையில் ஆழ்குழாய்க் கிணற்றைத் தோண்டியும் நீர் கிடைக்கவில்லை. எங்குச் சென்றாலும் குடிநீர் வேண்டுமென்று தான் மக்கள் கேட்கிறார்கள்’’ என்று சொல்லிக்கொண்டே வர, பரசுராமபுரம் தோட்டம் வந்து விட்டது.
தோட்டத்துக்குள் சென்றோம். “இந்தத் தோட்டம் முழுவதும் தென்னை மரங்கள் தான். சுமார் ஆயிரம் மரங்களுக்கு மேல் இருக்கின்றன. இங்கு ஏற்கெனவே சப்போட்டா மரங்களை நிறையளவில் பயிரிட்டிருந்தோம். ஆனால், சமீப காலமாகச் சப்போட்டா பழத்துக்கு நல்ல விலை கிடைக்காததால் அந்த மரங்களை எடுத்துவிட்டு, இப்போது எலுமிச்சையைப் பயிரிட்டுள்ளோம்’’ என்றார். அப்போது அங்கிருந்த தோட்டக்காரர்கள் எல்லோருக்கும் இளநீரை வெட்டித்தர, வெய்யிலுக்கு இதமாக அருந்திக் கொண்டே அங்கு வந்த கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் வத்தலக்குண்டு அருகேயுள்ள ஒரு தோட்டத்துக்குச் சென்றோம். மலையடிவாரத்தில் இருந்த அந்தத் தோட்டம் கரடுமுரடாக இருந்தது. ஆனாலும் அங்கே வளர்க்கப்பட்டிருந்த சப்போட்டா, எலுமிச்சை, நாரத்தை, கொடுக்காய்ப்புளி மரங்கள், இந்த வறட்சியிலும் நிறையக் காய்த்திருந்தன.
அதையெல்லாம் மனநிறைவுடன் நமக்குத் தொடர்ந்து சுற்றிக் காட்டிய அவர், “எனக்குப் பிடித்தது, வஞ்சகம் இல்லாத இந்த மண்ணும் மரங்களும் தான். இங்கே வந்தால் மனத்திலுள்ள கனமெல்லாம் இறங்கி விடுகிறது. மலர்ந்த பூவைப் போல மனம் லேசாக மாறி விடுகிறது. வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு சுகத்தை உணர முடிகிறது. அதனால் தான் விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலையும் நான் செய்யவில்லை’’ என்றபடி, காரில் ஏறி அமர்ந்தார்.
(குறிப்பு: இது 2018 ஆம் ஆண்டில் எடுத்த பேட்டி)
அப்போது அவரிடம் விவசாயம் தொடர்பான சில கேள்விகளை முன் வைத்தோம்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதித்தல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுத்தல் என்று, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து மத்திய அரசு தொல்லைகளைக் கொடுத்து வருகிறதே?
நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களைப் பல மாநிலங்களில் தொடங்க முடியவில்லை. அங்கெல்லாம் அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பலவீனமான ஒரு அரசு இருக்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, மற்ற மாநிலங்களில் செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம் இங்கே செயல்படுத்தப் பார்க்கிறது மத்திய அரசு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விவசாயிகளைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை அனுமதிப்பதில்லை. குறிப்பாக, மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை உட்பட டெல்டா பகுதிகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் நிலம் பாலைவனமாகி விடும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் அரிசி, காட்சிப் பொருளாகி விடும். அரிசிக்கும் உணவுக்கும் பஞ்சம் ஏற்படும். ஒரு கிலோ அரிசி ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூடக் கிடைக்காது.
தமிழ்நாட்டை வியாபாரச் சந்தையாக, தனக்கான வருவாய்த் தலமாக மாற்ற முயற்சிக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் நான்கு வழிச் சாலைகளாக உள்ள தேசியச் சாலைகள் அனைத்தும் விரைவில் ஆறுவழிச் சாலைகளாக மாறவிருக்கின்றன. அப்படியிருக்கும் போது கெயில் குழாய்களை நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்லலாமே? எதற்கு விவசாய நிலத்தில் கொண்டு செல்ல வேண்டும்? தமிழ்நாட்டில் எல்லாமே விவசாயத்துக்கு எதிராக நடக்கிறது. தமிழகத்தைப் பாலைவனமாக்க முயற்சி நடக்கிறது.
உணவுப்பொருள் உற்பத்தியில் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக உணவுப் பஞ்சம் வரும். ஏழு கோடி மக்கள் பட்டினியாகக் கிடக்கும் நிலையும், வேறு மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலையும் ஏற்படும். தமிழகம் பாலைவனமாகி விடும். அதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
நீர்வளமும் பருவநிலையும் சரியில்லாத போதும் கூட, தேசிய அளவில் உணவு உற்பத்தியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறார்களே?
விவசாய உற்பத்தியில் தமிழக விவசாயிகளை மிஞ்ச இந்திய அளவில் யாரும் கிடையாது. இன்றைக்கு நவீன உத்திகளைக் கையாண்டு நமது விவசாயிகள் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளுக்கு நமது அரசாங்கம் இன்னும் ஊக்கம் அளிக்க வேண்டும். கலைஞர் ஆட்சிக்காலத்தில் விவசாய அலுவலகங்களில் விதை, மருந்து, மானியம் முதலிய திட்டங்கள் வெளிப்படையாக இருந்தன. ஆனால் இன்று அது இல்லை. தமிழ்நாட்டில் தலைசிறந்த விவசாயிகள் இருக்கிறார்கள். இங்கு எல்லோரும் சிறு குறு விவசாயிகள் தான். மற்ற மாநிலங்களைப் போல் பெரிய விவசாயிகள் இங்குக் கிடையாது. நமது விவசாயிகளிடம் திறமை இருக்கிறது. அந்தத் திறமையை வெளிக்கொண்டு வர இந்த அரசு அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நிலையில் தமிழ்நாட்டில் விவசாயம் செழித்து வளர நமது விவசாயிகளுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?
பருவ நிலைக்குத் தகுந்த பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். தண்ணீர் இருக்கும் நேரங்களில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களையும், வறட்சிக் காலத்தில் எலுமிச்சை, மா, புளி, முருங்கை, நெல்லியைப் போன்ற வறட்சியைத் தாங்கும் பயிர்களையும் சாகுபடி செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம். எத்தகைய வறட்சி வந்தாலும் இந்த மரங்கள் விவசாயிகளைக் கைவிடாது. மேலும், மரங்கள் நிறைய இருந்தால் தான் மழையும் பெய்யும். எனவே, விவசாயிகள் தங்களின் நன்மைக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மழையைப் பெறுவதற்காகவும் மரங்களை நிறையளவில் வளர்க்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்குக்கூட கர்நாடகம் கட்டுப்பட மறுக்கிறதே?
எந்த அரசும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுக்க முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசை மத்திய அரசு கலைத்திருக்க வேண்டும். ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் விஷயத்தில், மத்திய அரசே நாடகமாடிக் கொண்டிருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டப்படி தான் நமது ஜனநாயகம் அமைந்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்கவில்லை யென்றால் என்ன செய்வது? உச்ச நீதிமன்றத்தை விடப் பெரிய நீதிமன்றம் ஏதாவது இருக்கிறதா? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. உச்சநீதிமன்றம் இறுதியான தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், அதைச் செயல்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
ஆற்று மணல் அதிகமாக அள்ளப்படுவதும் தமிழகத்தின் வறட்சிக்கு முக்கிய காரணம். ஆனால், அதே நேரத்தில் வளர்ந்து வரும் கட்டுமானத் துறைக்கும் மணல் தேவை. இந்த இரண்டு சிக்கல்களையும் எப்படித் தீர்க்கலாம்?
தற்போது எம் சாண்ட் என்னும் மணல் புதிதாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்லை அரைத்து அதை மணலாகப் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இதைப்போல மணலுக்கு மாற்றுப் பொருட்களைக் கண்டறியும் வரை, அரசு ஒழுங்குபடுத்தி மணலை வழங்க ஏற்பாடு செய்யலாம். ஆற்று மணலை முறையில்லாமல் அதிகமாகி அள்ளி விட்டதால் தான் தண்ணீர் இல்லை என்கிறார்கள். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
தமிழகம் முழுக்க உள்ள பொதுப்பணித்துறை, சுங்கத்துறை அதிகாரிகள், அதைக் கண்காணிக்காமல், தவறுக்கு உடந்தையாக இருந்ததால் தான் தற்போதுள்ள நிலை. அதற்காக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பொருட்களைத் தடுப்பது என்பது சரியாக இருக்காது. எனவே, மாற்று வழிகளை அரசு கண்டறிய வேண்டும். அதுவரை தேவைக்கு ஏற்றபடி சரியான அளவில் மணலை அள்ளி, முறைப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் காவிரிப்படுகை பாலைவனமாகி விடுமோ என்னும் அச்சம் அப்பகுதி மக்களிடம் இருக்கிறது. இந்த அச்சத்திலிருந்து மீள அப்பகுதி விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
தஞ்சைப் பகுதி மட்டுமல்ல. தமிழகமே காவிரியைத் தான் நம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் காவிரிநீர் தான் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இராமநாதபுரத்தில் நீரை வாயில் வைக்க முடியாது. உப்பு நீர். கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்து அதே இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குடிநீரை வழங்கினார். அது மிகப்பெரிய சாதனை.
அதைப்போல, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை என, பல மாவட்டங்களில் காவிரிநீர் தான் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. தமிழகத்தின் 80 சதவீதக் குடிநீர் ஆதாரம் காவிரிநீர் தான். எனவே, காவிரி என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்னை. அதனால், நமக்கான காவிரி நீரைப் பெற, தமிழக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று சொல்லி முடிக்கவும், அவரது வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.
ஐ.பெரியசாமியுடன் செலவழித்த சுமார் நான்கு மணி நேரத்தில், “வயதான நிலையிலும் விவசாயத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாடு, பாசனநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம், விவசாயிகள் மரப்பயிர்களுக்கு மாற வேண்டியதன் கட்டாயம், எவ்விதப் பேதமுமின்றித் தமிழக மக்கள் அனைவரும் வளமாக வாழ வேண்டும் என்னும் நாட்டம்’’ என, அவருக்குள் இருக்கும் நல்ல நோக்கங்களை நாம் அறிந்துகொள்ள முடிந்தது. அந்த மகிழ்ச்சியில் நன்றி சொல்லி அவரிடம் இருந்து விடை பெற்றோம்.
மு.உமாபதி