கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019
இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40%. இதன் மதிப்பு 25,000 கோடி ரூபாய். இப்படி, விவசாயிகளுக்கு பொருள் இழப்பும், நுகர்வோருக்கு சத்திழப்பும் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க, சரியான நேரத்தில் காய்கறி மற்றும் பழங்களை முறையாகக் கையாள வேண்டும். இதற்கு அறுவடைக்குப் பின் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் உதவுகின்றன.
உலகளவில் இந்தியா காய்கறிகள் மற்றும் பழங்களை மிகுதியாக உற்பத்தி செய்கிறது. இவற்றில் மாவுச்சத்து, தாதுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியன நிறைந்துள்ளன. மேலும், இவற்றில் மருத்துவப் பண்புள்ள பீட்டா கரோட்டின், மாவுச்சத்து அல்லாத கூட்டுச் சர்க்கரை, பீனால், பிலேவனாய்டு மற்றும் ஆல்கலாய்டு ஆகியன உள்ளன. இவை, சிறுநீரகம் மற்றும் இதயத்துக்கு நன்மை பயப்பதுடன், புற்றுநோய் வராமலும் காக்கின்றன.
இந்தியாவில் விளையும் பழங்களில் 0.5 சதம், காய்கறிகளில் 1.7 சதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு 20-40% ஆகும். இதில் 10-15% பழங்கள் மற்றும் காய்கறிகள் முறையாகக் கையாளப்படாமல் சுருங்கி அழுகி விடுகின்றன. இதனால், இவை நுகர்வோரால் ஏற்கப்படுவதில்லை.
முறையாகக் கையாளடப்படாத, சேமிக்கப்படாத பழங்கள், காய்கறிகள், வெட்டு, கனிதல், வெடிப்பு, விரிசல் உண்டாகி, பூசணம் மற்றும் நுண்ணுயிர்களால் பாதிக்கப்பட்டு அழுகி விடுகின்றன. மேலும், உடற் செயலியல் சார்ந்த இழப்புகளால் காய்கறிகள், பழங்களின் நிறம், சுவை, மணம் குறைந்து விடுகின்றன.
இழப்புகளைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
குறிப்பிட்ட பருவத்தில் விளையும் பழங்கள் நீண்ட நாட்களுக்குச் சந்தையில் கிடைக்கும். விவசாயிகளின் நிகர இலாபம் அதிகரிக்கும். நுகர்வோர்க்குக் குறைந்த விலையில் கிடைக்கும் சத்துப் பொருள்கள் நிறையக் கிடைக்கும்.
இழப்புகளுக்கான காரணங்கள்
பழங்கள் விரைவில் அழுகக் காரணம், அவற்றிலுள்ள 80-95% ஈரப்பதம், அதிகளவு செல் சுவாசம், அதிகளவு மேற்பரப்பு மற்றும் மெல்லிய திசு அமைப்பு ஆகியனவாகும். மேலும், அறுவடைக்கான கருவிகள் இல்லாமை, மிகுந்த உற்பத்தியுள்ள இடங்களில் சேமிப்பு நிலையங்கள் இல்லாமை, சரியான கொள்கலன்கள் இல்லாமை, வணிக நோக்கிலான வைப்பு நிலையங்கள் இல்லாமை, முழுமையான குறை வெப்பநிலைச் சேமிப்புக் கிடங்கு இல்லாமை போன்றவற்றாலும் காய்கள், பழங்கள் சேதமாகின்றன. கீழ்க்கண்ட காரணிகளாலும் அறுவடைக்குப் பின்பு இழப்புகள் உண்டாகின்றன.
வளர்சிதை மாற்றக் காரணிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகள் தாவரங்களின் உயிருள்ள உறுப்புகள் ஆகும். இயற்கையாக இவற்றிலுள்ள சத்துகள், செல் சுவாசத்தால் சிதைவடைகின்றன. இதனால், பழங்கள் விரைவில் முற்றிச் சேதமாகின்றன.
இயக்கச் சிதைவு: பழங்கள் மற்றும் காய்கறிகளின் மெல்லிய அமைப்பு மற்றும் அதிக ஈரப்பதத்தில் கையாளும் போது எளிதில் சேதமடைகின்றன. முறையற்றுக் கையாளுதல், முறையற்ற கொள்கலன்கள், முறையற்ற பையகப்படுத்துதல் மற்றும் போக்குவரத்தால் எளிதாகச் சேதமடைகின்றன.
வளர்ச்சிக் காரணிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகள் முளைத்தல், வேர் வளருதல் மற்றும் விதைகள் முளைப்பதால் அவற்றின், தரமும் சத்து மதிப்பும் பாதிக்கப்படுகின்றன.
ஒட்டுண்ணி நோய்கள்: பூசணம், நுண்ணுயிர்கள், பூச்சிகள் மற்றும் மற்ற கிருமிகளால் இழப்பு அதிகமாகிறது. புதிதாக விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைத் தாக்கி நுண்ணுயிர்கள் எளிதில் பரவுகின்றன. ஏனெனில், இவற்றில் இயற்கையான எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளது. மேலும், அதிகளவில் இருக்கும் சத்தும் ஈரப்பதமும் நுண்ணுயிர்கள் பரவக் காரணமாகின்றன.
உடற்செயலியல் சார்ந்த காரணிகள் (Physiological): பழங்கள் மற்றும் காய்கறிகள் உயிருள்ள உறுப்புகளாக அறுவடைக்குப் பின்பும் செயல்படுகின்றன. நொதிகளின் செயல்பாடு, அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவற்றால், மிகுதியாகப் பழுத்துக் கனிந்து விடுகின்றன.
சந்தையில் தேவை இல்லாமை: அதிகளவில் அறுவடை செய்த பழங்கள் மற்றும் நொதிகள் மற்றும் காய்கறிகளைத் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்ல, போக்குவரத்து வசதியின்மை மற்றும் சேகரிக்கும் வசதிகள் குறைவாக இருக்கும் போது, அறுவடை செய்யப்பட்ட பொருள்கள் அழுகி வீணாகின்றன. மேலும், வீடுகளில் முறையாகச் சேகரித்து வைக்காத போதும், சமைக்கும் போதும் பெருமளவில் வீணாகின்றன.
இழப்புகளைக் குறைக்கும் நுட்பங்கள்
அழுகக் கூடிய காய்கனிகளை, அறிவியல் சார்ந்த முறைகளில் கையாண்டால், சேதமடைதல், அழுகுதல், பூச்சித் தாக்குதல், நுண்ணுயிர்களால் பாதிப்பு போன்றவற்றைத் தவிர்க்கலாம். முறையான வெப்பநிலை, ஈரப்பத்தில் சேமித்து வைக்கலாம். முறையான குளிர் வெப்பநிலை, சேகரிப்பைப் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு மிகவும் அவசியம்.
காய் கனிகள் கெடாமல் இருக்க
இரசாயனச் சிகிச்சை: இரசாயனங்களான வளர்ச்சிக் கட்டுப்படுத்திகள் மற்றும் பூசணக்கொல்லிகளை அறுவடைக்கு முன்னும் பின்னும் அளிப்பதால் பழங்கள் கெடாமல் இருக்கும் காலம் அதிகரிக்கும். எடுத்துக்காட்டு: கிப்பர்லிக் அமிலம், சைட்டோகைனின் மற்றும் எத்திரில்.
மெழுகு மற்றும் எண்ணெய்க் கரைசல்: பல்வேறு மெழுகு மற்றும் எண்ணெய்க் கரைசலைப் பயன்படுத்துவதால் கெடாமல் இருக்கும் காலம் அதிகரிக்கும்.
வெந்நீர்ச் சிகிச்சை: இது பழங்கள் பழுப்பதைக் கட்டுப்படுத்தி, பூச்சிகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால், பழங்கள் கெடாமல் இருக்கும் காலம் மிகும்.
ஊடுகதிர்ச் சிகிச்சை: இச்சிகிச்சை நுண்ணுயிரிகள் வளர்வதைக் கட்டுப்படுத்தும். மேலும், அவற்றின் உடற்செயலியல் முறைகளையும் மாற்றும். கதிர்வீச்சின் அளவு மற்றும் அளிக்கும் கால நேரம் பழத்துக்குப் பழம் மாறுபடும்.
கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டலச் சேகரிப்பு முறை: அதிகக் கரிவளி மற்றும் குறைந்த ஆக்சிஜன் உள்ள வளி மண்டலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் சுவாசம் கட்டுப்படுத்தப்படுவதால், அவை முதிர்வதில் தாமதமாகிறது. இதைக் குறைந்த வெப்ப நிலையில் செய்யும் பொழுது, பழங்களும் காய்களும் கெடாமல் இருக்கும் காலம் நீடிக்கும்.
இப்படி, விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற வகையில், அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பங்களை, வேளாண் வல்லுநர்களின் உதவியுடன் பயன்படுத்தினால், இலாபத்தை ஈட்டுவதுடன் உணவுப் பொருள்கள் வீணாவதையும் தவிர்க்கலாம்.
முனைவர் சு.ஸ்ரீவிக்னேஷ்,
முனைவர் த.துர்காதேவி, ஐ.ஆறுமுக பிரவீன்,
உயிரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.