எருவை மட்க வைக்கும் முறை!

எரு Compost

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

யிருக்கான உரத்தில், லிக்னின், செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், பாலிசாக்கரைடுகள், புரோட்டீன்கள், லிப்பிடுகள் மற்றும் பல உயிர்ப் பொருள்கள் உள்ளன. இவற்றை மட்க வைக்காமல் பயன்படுத்த முடியாது. இந்தப் பொருள்களை மண்ணுக்குக் கிடைக்கும் சத்தாக மாற்ற, மட்கு எரு உத்தி உதவுகிறது. இதன் மூலம் பயிருக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கலாம். இந்தச் சத்துகளில், நுண்ணுயிர்களின் செயல்கள், பயிர்களின் நோயெதிர்ப்புத் திறன், வறட்சியைத் தாங்கும் திறன் ஆகியன மிகுதியாக உள்ளன.

மட்குரத்தின் நன்மைகள்

குப்பையின் அளவு குறையும். மட்கு உரமாக்குதலில் வெப்பநிலை மிகுவதால், நோய்க்கிருமிகள், களை விதைகள் அழியும். மண்ணில் சமநிலை ஏற்படும். மட்குரத் தயாரிப்பில் எண்ணற்ற கழிவுகள் கலக்கப்படும். மண் பக்குவமடையும். மாசடைதல் குறையும். வருமானம் கூடும். இரசாயன உரத்தேவை குறையும். காடுகள் மறு அமைப்பு, நிலவளத்தைப் பராமரித்தல், சூழல் மறுவாழ்வு, குப்பைகளால் ஏற்படும் மாசு குறைதல் என, மட்குரம் பல வகைகளில் பயன்படும்.

மட்கு எரு உத்தியில் பண்ணைக் கழிவுகளைச் சேகரித்தல், 2-2.5 செ.மீ. துண்டுகளாக நறுக்குதல், பச்சை மற்றும் பழுப்பு நிறக் கழிவுகளை ஒன்றாகக் கலக்குதல் மற்றும் கழிவுகளை மட்க வைத்தல் ஆகியன அடங்கும்.

கோழிக்கழிவை உரமாக்குதல்

புதிய கோழியெச்சத்தைச் சேகரித்து 25-30% தழைச்சத்து உள்ள வகையில், 2 செ.மீ.க்கும் குறைவான வைக்கோல் துண்டுகளில் கலக்க வேண்டும். பிறகு, ஒரு டன் கழிவுக்கு 1.250 கி.கி. சிப்பிக்காளான் விதை வீதம் கலந்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். குவியலின் ஈரப்பதம் 40-50% இருக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை நீரைத் தெளிப்பதுடன், 21, 35, 42 ஆகிய நாட்களில் கலவையை நன்றாகக் கிளறிவிட வேண்டும். இப்படிச் செய்தால் 50 நாட்களில் கோழியெச்சம் நன்கு மட்கிய உரமாகும்.

இதில் தழைச்சத்து 1.89%, மணிச்சத்து 1.83% சாம்பல் சத்து 1.34%, கரிமமும் தழைச்சத்தும் 12:20 அளவிலும் உள்ளன. இது பயிருக்கு ஏற்ற சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை அளிக்கிறது. பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகளில் வைப்புத்திறன் கூடவும் உதவுகிறது.

மண்புழு உரம் தயாரிப்பு

மண்புழுக்கள் அங்ககக் கழிவுகளில் அதிகளவிலும் எல்லாச் சூழலிலும் வளர வேண்டும். புழுக்களை அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வகையில், சிவப்புப் புழு, ஆப்பிரிக்கப் புழு, மட்கும் புழு ஆகியன உள்ளன. மண்புழுப் படுக்கை 75-90 செ.மீ. கனத்தில், வடிகால் வசதியுள்ள இடத்தில் இருக்க வேண்டும். படுக்கையின் அகலம் 1.5 மீ.க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

மண்புழுப் படுக்கை

மண்புழு உரத் தொட்டியில் காய்ந்த புற்கள், கரும்புத்தோகை, இலை, தென்னைநார்க் கழிவு போன்றவற்றை முதலில் பரப்ப வேண்டும். இவற்றின் மீது மட்கிய சாணத்தை முக்கால் முதல் ஒரு அடி உயரம் வரை பரப்ப வேண்டும். படுக்கையில் 40% ஈரப்பதம் இருக்குமாறு நீரைத் தெளிக்க வேண்டும். பிறகு ஒரு டன் கழிவுக்கு ஒரு கிலோ மண்புழு வீதம் விட வேண்டும். தினமும் படுக்கை மீது நீரைத் தெளித்து ஈரப்பதத்தைக் காக்க வேண்டும். சணல் சாக்கால் மூடினால் படுக்கை காயாமல் இருக்கும்.

ஊட்டமேற்றுதல்

ஒரு டன் கழிவுக்கு, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியா கலந்த ஒரு கிலோ அசோபாஸ் வீதம் கலந்து ஊட்டமேற்றி, இருபது நாட்களுக்குப் பின் படுக்கையில் சேர்க்கலாம்.

உரச் சேகரிப்பு

30-45 நாட்களில் அங்ககக் கழிவுகள் மண்புழு உரமாக மாறிவிடும். இது அடர் பழுப்பு நிறத்தில் சீரான குருணைகளாக இருக்கும். இந்த நேரத்தில் 2-3 நாட்களுக்கு நீர்த்தெளிப்பை நிறுத்தி விட வேண்டும். இதனால் 80% புழுக்கள் படுக்கையின் அடியில் சென்று விடும். சல்லடை அல்லது வலையால் உரத்தைப் பிரித்து எடுக்கலாம். புழுக்களும் தடித்த பொருள்களும் வலையில் நின்று விடும். இவற்றைக் குழியில் கொட்டித் திரும்பவும் பயன்படுத்தலாம். மண்புழு உரத்தை ஒருபுறம் குவித்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் உரத்தில் எஞ்சியுள்ள மண்புழுக்கள், முட்டைகள் பொரிந்து வெளிவந்த மண்புழுக்கள் சாணத்தில் சேர்ந்து விடும்.

இந்தப் புழுக்களை விற்கலாம் அல்லது புதிய படுக்கையில் விடலாம். பிறகு மண்புழு உரத்தை 2 மி.மீ. சல்லடையில் சளித்துச் சேகரிக்கலாம். இது 6-9 மாதங்கள் வரை தரம் குறையாமல் இருக்கும்.

மண்புழுக்களைப் பிரித்தல்

உரத் தயாரிப்பு முடிந்ததும் கருவுருதல் முறையில் புழுக்களை உரத்திலிருந்து பிரிக்கலாம். அதாவது, சிறிய சாணப் பந்துகளை உரக்குழியில் ஆங்காங்கே இட்டால், மண்புழுக்கள் இவற்றில் வந்து சேர்ந்து விடும். பிறகு சாணப் பந்துகளை நீரில் போட்டால் சாணம் கரைந்து மண்புழுக்கள் தனியாகப் பிரிந்து விடும். இவற்றை அடுத்த உரத் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.


எரு SUGANTHI e1629915824578

முனைவர் மு.சுகந்தி,

முனைவர் அ.இளங்கோ, முனைவர் த.பாலசுப்பிரமணியன், 

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading