1. தொடர் விக்கல்
நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
2. வாய் நாற்றம்
சட்டியில் படிகாரத்தைப் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து நாள்தோறும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
3. உதட்டு வெடிப்பு
கரும்புச் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்யைக் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்புக் குணமாகும்.
4. சிறுநீரகக் கோளாறு சரியாக!
காரட் சாறு 15 மில்லி, தேன் 10 மில்லி, எலுமிச்சைச்சாறு 5 மில்லி. இந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறு அகலும்.
5. தோல் அரிப்பு நீங்க!
வினிகர் 50 மில்லி, ரோஸ் வாட்டர் 40 மில்லி. இந்த இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு தோலில் அரிப்புள்ள இடங்களில் பூசி வந்தால் எப்படிப்பட்ட தோலரிப்பும் தீரும். காலையில் பூசி மாலையில் குளிக்கலாம். இரவில் பூசி காலையில் குளிக்கலாம். இப்படிச் செய்து வந்தால் தோலரிப்பு நீங்கும்.
6. இரத்தக் கொதிப்புச் சரியாக!
நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லி, தேன் 15 மில்லி. இரண்டையும் கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்; இரத்தக்கொதிப்புக் குணமாகும்.
7. முதுகுவலி குணமாக!
நான்குமுகக் கற்றாலை 50 கிராம், சுக்கு 5 கிராம், மிளகு 10, திப்பிலி 20 கிராம், பனை வெல்லம் போதுமான அளவு. பனை வெல்லத்தைத் தவிர மற்ற பொருள்களை அடுப்பிலிட்டு நன்குக் காய்ச்சி கஷாயமாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கஷாயம் சற்றுக் கசப்பாக இருக்கும். அதனால் கசப்பைப் போக்கத் தேவையான அளவுக்குப் பனை வெல்லத்தைச் சேர்த்து இந்தக் கஷாயத்தைக் குடித்து வந்தால் முதுகுவலி குணமாகும். தினந்தோறும்கூட இதைக் குடித்து வரலாம்.
8. மாலைக்கண் குணமாக!
வாழைப்பூவையும் முருங்கைப்பூவையும் சம பாகமாக எடுத்துக்கொண்டு நல்லெண்ணெய்யில் வதக்கி 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் கண் நரம்புகள் பலமடையும். கண் பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோய் குணமாகும்.
9. விதை வீக்கம் அகல!
சிறுநீரகங்களைக் காக்கும் விசயத்தில் தொட்டால் சிணுங்கியின் பங்கு மகத்தானது என்று சொல்லலாம். தொட்டால் சிணுங்கியைக் கஷாயமாக்கிக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் வெளியேறும். இதை நன்கு அரைத்துப் பத்துப் போட்டால் விதை வீக்கம் அகலும். விதை வீக்கத்தை அகற்றக் கருஞ்சீரகத்தையும் அரைத்துப் பத்தாகப் போடலாம்.
10. கீழ்வாதம் அகல!
காசுக்கட்டிப்பொடி 2 தேக்கரண்டி, வசம்புப்பொடி ஒரு தேக்கரண்டி. இந்த இரண்டையும் நீர் விட்டு அரைத்து விழுதாக்கிப் பூசி வர கீழ்வாதம் ஓடிப்போகும்.
11. ஆறாத புண் ஆற!
சீத்தாப்பழ இலைகளைப் பறித்து வந்து நன்றாகக் கழுவி விட்டு, நீர் சேர்க்காமல் அம்மியிலோ மிக்ஸியிலோ இட்டு அரைத்துப் புண்ணில் வைத்துக் கட்டினால் ஆறாத புண், நாள்பட்ட புண், நாற்றமெடுக்கும் புண் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
12. சர்க்கரை நோயாளிகள் புத்துணர்வைப் பெற!
வல்லாரைப்பொடி, சீரகப்பொடி, சுக்குப்பொடி, தணியாத்தூள் ஆகியவற்றைத் தலா அரைத் தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, இவற்றுடன் ரோஜா இதழ்கள், நன்னாரி வேர், கொஞ்சம் வெல்லம், பால் ஆகியவற்றை 300 மில்லி நீரிலிட்டு நன்கு காய்ச்சி எடுத்து வடிகட்டிச் சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் போதும்.
13. பித்தம், நீர்க்கடுப்பு நீங்க!
சந்தனத்தூள், கோரைக்கிழங்கு, பனங்கற்கண்டு ஆகியவற்றைத் தலா கால் தேக்கரண்டி எடுத்துக்கொண்டு இவற்றுடன் வெட்டி வேர் 5கிராம், சுக்கு ஒரு துண்டு ஆகியவற்றையும் சேர்த்து 200 மில்லி நீரிலிட்டு 100 மில்லியாகச் சுண்டக்காய்ச்சிப் பத்து நாளைக்கு ஒருமுறை குடித்து வந்தால் பித்தம், சிறுநீர்க் கடுப்பு ஆகியவை அகலும்.
14. நீர் வேட்கைக் காய்ச்சல் தீர!
தாமரைக் கிழங்கு, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நெல்லி வற்றல், கொத்தமல்லி, சீரகம் ஆகியவற்றைத் தலா 5கிராம் எடுத்து 100மில்லி நீரில் நன்கு கொதிக்க விட்டுக் குடித்து வந்தால் நீர் வேட்கைக் காய்ச்சல் தீரும்.
15. மாலைக்கண் நோய் குணமாக!
முருங்கைக்கீரை, வெங்காயம், பெருங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், ஆகியவற்றை வாணலியிலிட்டு நல்லெண்ணெய், கடுகு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்தக் கலவையுடன் கேழ்வரகு மாவைச் சேர்த்து நீர் விட்டுப் பிசைந்து, நல்லெண்ணெய்யைத் தடவி ரொட்டியாகச் சுட்டுச் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
16. உள்ளுறுப்புகள் பலம் பெற!
கிராம்பைப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதில், 2 கிராம் அளவுக்கு எடுத்துத் தேனில் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் என அனைத்து உள்ளுறுப்புகளும் பலமடையும். குறைந்தது ஒரு மண்டலம், அதாவது 48 நாட்களாவது சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
17. மஞ்சள் காமாலை அறவே நீங்க!
கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் மிக்ஸியிலோ அம்மியிலோ இட்டு துவையல் பதத்தில் நன்கு அரைக்க வேண்டும். இப்படி அரைத்த கலவையை நெல்லிக்காயளவு எடுத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளைக்குச் சாப்பிட மஞ்சள் காமாலை அறவே நீங்கும்.
18. சிறுநீரகக்கல், பித்தக்கல் அகல, இரத்த அழுத்தம் நீங்க!
ஒருபிடி தர்ப்பைப் புல்லை 300 மில்லி நீரிலிட்டு 150 மில்லியாகக் காய்ச்சினால் தர்ப்பைப்புல் கஷாயம் தயார். இதை ஒரே தடவையிலோ மூன்றாகப் பங்கிட்டுக் காலை, பகல், இரவு என மூன்று தடவையோ குடித்து வந்தால் சிறுநீரகக்கல், பித்தக்கல் அகலும். சிறுநீரைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதனால், இந்தக் கஷாயத்தை வாரம் ஒருமுறை குடித்து வரலாம்.
19. சிறுநீரகம் சீராக இயங்க!
பாகற்காய்த் துண்டு 5, பீட்ரூட் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு கால் தேக்கரண்டி, இஞ்சி, தக்காளித் துண்டுகள் 4 ஆகியவற்றை, தேவையான அளவு உப்பைச் சேர்த்து 300 மில்லி நீரிலிட்டு 150 மில்லியாகக் காய்ச்சிப் பத்து நாளைக்கு ஒருமுறை குடித்து வந்தால் சிறுநீரக இயக்க சீராக இருக்கும்.
20. வெண்புள்ளிகள் குணமாக!
தேவையான பொருள்கள்: பூண்டு, நவச்சாரம். பூண்டை இடித்து 30 மில்லி அளவுக்குச் சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இடித்துத் தூளாக்கிய 10 கிராம் நவச்சாரத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை வெண்புள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு மண்டலத்துக்கு அதாவது 48 நாட்களுக்குத் தடவிவர வெண்புள்ளிகள் மறைந்து அந்த இடங்களில் உள்ள தோல்பகுதி இயல்பு நிலைக்கு மாறும். இதைப்போல, அறுகம்புல் தலத்தைத் தடவி, சூரியக்குளியல் செய்து வந்தாலும் வெண்புள்ளிகள் அகலும். மேலும் சிவனார்வேம்புப் பொடியை 5 கிராம் வீதம் காலை, மாலையில் சாப்பிட்டு வர வெண்புள்ளிகள் அகலும்.
21. பாத எரிச்சல் குணமாக!
தேவையான பொருள்கள்: புதினாக்கீரை, கல்லுப்பு. புதினாக்கீரையுடன் போதுமான அளவுக்குக் கல்லுப்பைச் சேர்த்து வாணலியிலிட்டு வதக்கிகொள்ள வேண்டும். பின் இந்தக் கீரையை நூல் துணியில் முடிந்து இளஞ்சூட்டுடன் எரிச்சல் உள்ள பாதத்தில் ஒத்தடம் கொடுத்தால் எரிச்சல் குணமாகும். பாகல் இலைகளைக் கசக்கிப் பாதத்தில் தேய்த்தாலும் எரிச்சல் அடங்கும்.
22. மூளைக்கட்டி, இதயநோய், புற்றுநோய் குணமாக!
கல்கண்டைப் பொடியாக்கி அதில் உலர் திராட்சையைக் கலந்து அவ்வப்போது உண்டு வந்தால் மூளைக்கட்டி வராமல் தடுக்கலாம். புற்றுநோய் வேதனையைக் குறைக்கலாம். இதய நோயிலிருந்தும் விடுபடலாம். எனவே, கல்கண்டு உலர் திராட்சைக் கலவையைத் தொடர்ந்து நம் உணவில் சேர்த்து வந்தால் மூளைக்கட்டி, இதயநோய், புற்றுநோய் ஆகியவை நம்மை அண்ட விடாமல் தடுக்கலாம். இதேபோல நெல்லிக்காயில் மஞ்சளைச் சேர்த்து உண்டுவர புற்றுநோய்ச் சிக்கலும், வல்லாரையை உணவில் சேர்த்து வந்தால் மூளைக்கட்டி போன்ற பாதிப்பும் ஏற்படுவதைத் தடுக்கலாம். கையளவு துளசியை மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் கையளவு இதயத்துக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். மிளகைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வர, இரத்த அடைப்பு அகலும்.
23. குடல் புண்
மஞ்சளைத் தணலில் இட்டுச் சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். இப்படி எரித்த மஞ்சள் கரிச் சாம்பலைத் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
24. வாயுத் தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தித் தூளாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
25. சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
மு.மகேஷ்வரி