இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது துளசி. இது புனிதத் தாவரமாகக் கருதப்படுவதால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. வழக்கமான வழிபாட்டில் துளசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. காற்றைச் சுத்தப்படுத்துகிறது. நடுவெப்பக் காலநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்தில் இருந்து 2,000 அடி உயரம் வரையில் துளசி இயற்கையாக வளரும். உலகம் முழுவதும் ஈரமான மணலில் தானாக வளரும்.
தொட்டிகளில், வீட்டுத் தோட்டங்களில் மூலிகைச் செடியாக வளர்க்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் துளசியைப் பயிரிட்டு, கோயில்கள் மற்றும் வழிபாட்டு மையங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். தரிசு நிலம் மற்றும் சாலை ஓரங்களில் துளசி அதிகமாகப் பார்க்கலாம். பருவக் காலத்தில் சேகரித்து நாடு முழுவதும் விற்பனை செய்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் கிடைப்பதால், வணிக நோக்கில் சாகுபடி செய்யப்படுகிறது.
வகைகள்
இதில், பச்சை இலைகளைக் கொண்டது துளசி என்றும், நீலநிற இலைகளைக் கொண்டது கிருஷ்ண துளசி என்றும் இருவகை உண்டு.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை
இது எல்லா மண் வகைகளிலும் வளரும். அதிக உப்பு, காரத்தன்மை மற்றும் நீர்த் தேங்கும் பகுதிகளில் வளராது. அங்ககத் தன்மையுள்ள மணல் கலந்த பசலை மண்ணில் நன்கு வளரும். வெப்பம் மற்றும் மிதவெப்பக் காலநிலையில் நன்கு வளரும். உயர் வெப்ப நிலை மற்றும் நீண்ட நேரம் பகலாக உள்ள காலநிலையில் செடிகளின் வளர்ச்சியும் மற்றும் எண்ணெய் உற்பத்தியும் நன்றாக இருக்கும்.
இனப்பெருக்கம்
துளசி, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. எக்டருக்கு 300 கிராம் விதைகள் தேவைப்படும். நாற்றங்கால், அரை நிழல் மற்றும் பாசன வசதியுடன் இருக்க வேண்டும். மண்ணை 30 செ.மீ. அளவில் எடுத்து விட்டு, நன்கு மட்கிய தொழுவுரத்தை இட்டு மண்ணைப் பண்படுத்த வேண்டும். 4.5×1.0x0.2 மீட்டர் அளவுள்ள படுக்கைகளை அமைக்க வேண்டும்.
பருவமழை தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்பே, விதை மற்றும் மணலை 1:4 வீதம் கலந்து நாற்றங்கால் படுக்கைகளில் விதைக்க வேண்டும். 8-12 நாட்களில் முளைத்து விடும். நடவுக்கு ஏற்ற நாற்றுகள் 6 வாரங்களில் 4-5 இலைகளுடன் தயாராகி விடும்.
விதையில்லாப் பெருக்கம்
துளசியின் நுனிகளை வெட்டி அக்டோபர்-டிசம்பர் காலத்தில் நடவு செய்தால் 90-100% முளைத்து விடும். இதற்கு 8-10 கணுக்கள் மற்றும் 10-15 செ.மீ. நீளமுள்ள துண்டுகள் தேவைப்படும். முதல் 2-3 ஜோடி இலைகளைத் தவிர மற்றவற்றை அகற்றி விட வேண்டும்.
பிறகு, இவற்றை, நன்கு தயாரித்த நாற்றங்கால் படுக்கைகள் அல்லது நெகிழிப் பைகளில் நட வேண்டும். இப்படிச் செய்தால், 4-6 வாரங்களில் வேர்களுடன் கூடிய நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விடும். இவற்றை, 40 செ.மீ இடைவெளியில் வரிசையாக நட வேண்டும்.
உர மேலாண்மை
ஏக்கருக்கு 20-25 கிலோ தழைச்சத்து, 10-15 கிலோ மணிச்சத்து உரங்களை நடவு முடிந்து ஒரு மாதம் கழித்து மேலுரமாகக் கொடுக்க வேண்டும். இதே அளவு உரங்களை, ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் 10-15 நாட்கள் கழித்துக் கொடுக்க வேண்டும். ஏக்கருக்கு 75 கிலோ சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். நுண் சத்தான தாமிரத்தை 50 பி.பி.எம். என்னும் அளவில் தெளித்தால், எண்ணெய் மகசூல் அதிகமாகும்.
பாசன மேலாண்மை
செடிகள் நன்கு வளர, முதல் மாதத்தில் வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும். பிறகு, மழையின் அளவு மற்றும் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும்.
களை
துளசி நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. நடவு செய்த ஒரு மாதம் கழித்து, முதல் களை எடுக்க வேண்டும். அடுத்த 30 நாட்களில் இரண்டாம் களையும் எடுக்க வேண்டும். பிறகு, செடிகள் வளர்ந்து புதரைப் போல மண்ணை மூடி விடுவதால், களையெடுக்கத் தேவையில்லை. ஆனால், ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் களையெடுத்தல் அவசியமாகும்.
பயிர்ப் பாதுகாப்பு
துளசியைப் பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. சில பூச்சிகள், இலைச்சுருட்டுப் புழு போன்றவை துளசியைத் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, 0.2% மாலத்தியான் அல்லது 0.1% மெத்தில் பாரத்தியான் கரைசலைத் தெளிக்கலாம்.
துளசி போன்ற மருத்துவத் தாவரங்களுக்கு இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் அவசியமில்லை. அங்ககத் தன்மையுள்ள் வேம்பு சார்ந்த கரைசல்களைப் பயன்படுத்தினால் போதும். சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மீன் எண்ணெய்ச் சோப்புக் கரைசலைப் பயன்படுத்தலாம்.
சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, நனையும் கந்தகம் 0.3% கரைசலைத் தெளிக்கலாம். நாற்றுக் கருகல் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, நாற்றங்கால் படுக்கைகளில் 0.1% மெர்குரியல் பங்கிசைடை மண்ணில் இட வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்
நடவு செய்து 90 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம். பிறகு, ஒவ்வொரு 75 நாட்களுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த செடிகளில் 15 செ.மீ. அளவுக்கு அறுத்தெடுக்க வேண்டும். அப்போது தான், முறைப்படி செடிகள் அடுத்த அறுவடைக்குத் தயாராகும். வெய்யில் காலத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். எண்ணெய்யும் அதிகமாகக் கிடைக்கும்.
ஓராண்டில் ஓர் எக்டரில் இருந்து 10 ஆயிரம் கிலோ துளசியிலைகள் மகசூலாகக் கிடைக்கும். இந்த மூலிகையில் 0.1-0.23% வீதம் எண்ணெய்ச் சத்து இருக்கும். ஆகவே, எக்டருக்கு 10-20 கிலோ எண்ணெய் கிடைக்கும். முறையாகப் பாசனம் செய்தால், எக்டருக்கு 20 ஆயிரம் கிலோ மூலிகையும், 40 கிலோ வரையில் எண்ணெய்யும் கிடைக்கும்.
பயன்கள்
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசியிலையைச் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படும். இதய நோய் ஆபத்துக் குறையும். துளசியிலை, எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்த விழுதை, தோலில் தடவி வந்தால், நாள்பட்ட சொறி, படை, சிரங்குகள் மறையும்.
துளசியிலைச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீர்ப் பாதையில் உள்ள தொற்றுகள் அகலும். துளசியிலைச் சாற்றைப் பூசி வந்தால், வெட்டுக் காயங்கள் குணமாகும்.
துளசியிலை ஊறிய நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு உடலை நெருங்காது. துளசி இலைகளைத் தினமும் உண்டு வந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான தொல்லைகள் வாழ்நாள் முழுவதும் வராது.
முனைவர் செ.தமிழ்ச்செல்வி,
உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.