கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018
நலிந்தவனைக் கண்டால் நாலுபேர் சீண்டுவார்கள். பாவம், இந்த அப்பாவி ஆடுகளும் அப்படித்தான். ஆடுகள் பொதுவாகச் சாமானிய மக்களால் வளர்க்கப் படுவதால், இவற்றை நன்கு பேணுவதற்கான நுட்பங்கள் கையாளப்படுவதில்லை.
இந்த நிலையைத் தவிர்க்க, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மரபுசார் மூலிகைவழி மருத்துவத்தை, கால்நடைகளை வளர்ப்போரிடம் பிரபலப்படுத்தி வருகிறது.
மருத்துவ பொருள்கள் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதாலும், மருத்துவச் செலவும், பக்கவிளைவு இல்லாததாலும் இந்த மருத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கே ஆடுகளுக்கு மூலிகை மருத்துவம் எவ்வளவில் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
கழிச்சல்
கழிச்சலால் பாதிக்கப்படும் ஆடுகளில் நீர்த்த, துர்நாற்றமுள்ள வயிற்றுப்போக்குக் காணப்படும். பின்னங் கால்களில் கழிந்த சாணம் படிந்திருக்கும். உடலிலுள்ள நீர்ச்சத்து மற்றும் தாதுப்புகள் அதிகமாக வெளியேறுவதால் ஆடுகள் சோர்ந்து காணப்படும்.
நான்கு ஆடுகளுக்கான மூலிகைப் பொருட்கள்: கலவை 1: சின்ன சீரகம் 15 கிராம், கசகசா 15 கிராம், வெந்தயம் 15 கிராம், மிளகு 5 எண்ணம், மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம். இந்தப் பொருட்களை நன்கு கருகும் வரை வறுத்து இடித்துக்கொள்ள வேண்டும்.
கலவை 2: வெங்காயம் 10 கிராம், பூண்டு 6 பல், புளி 200 கிராம், பனை வெல்லம் 250 கிராம். இந்தப் பொருட்களை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாய்வழிச் சிகிச்சை: இந்த இரு கலவைகளையும் கலந்து சிறிய உருண்டைகளாக்கிக் கல் உப்பில் தோய்த்தெடுத்து, நாக்கின் சொரசொரப்பான மேல்பகுதியில் மெதுவாகத் தேய்த்த வண்ணம் உள்ளே கொடுக்க வேண்டும்.
காய்ச்சல்
நான்கு ஆடுகளுக்கான மூலிகைப் பொருட்கள்: நிலவேம்பு இலை 2 கைப்பிடி, சின்ன வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம், மிளகு 20 எண்ணம், மஞ்சள் 1 தேக்கரண்டி, வெற்றிலை 10 எண்ணம், பிரண்டை 10 கொழுந்து.
வாய்வழிச் சிகிச்சை: மிளகு மற்றும் சீரகத்தை இடித்தும் மற்ற பொருட்களையும் அரைத்தும் ஒன்றாகக் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
விஷக்கடி
ஆடுகள் மேயும்பொழுது எதிர்பாராத விதமாகத் தேனீக்கள் அல்லது குளவிகள் கூட்டை நெருங்குவதால் அவற்றின் தாக்குதலுக்கு உள்ளாக நேரும். விஷத் தன்மையுள்ள குளவி, தேள், பூரான், சிறு பாம்பு மற்றும் அரணைக் கடியால் வயிறு உப்புசம், மூச்சுத் திணறல், வாயில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் ஆடுகளுக்கு ஏற்படும்.
நான்கு ஆடுகளுக்கான மூலிகைப் பொருட்கள்: தும்பை இலை 15 எண்ணம், நில வேம்பு 15 எண்ணம், மிளகு 10 எண்ணம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 10 பல், வெற்றிலை 5 எண்ணம், வாழைத்தண்டு சாறு 50 மில்லி, உப்பு 15 கிராம்.
வாய்வழிச் சிகிச்சை: சீரகம் மற்றும் மிளகை இடித்தும், மற்ற பொருட்களை அரைத்தும் சேர்த்த கலவையுடன் 100 கிராம் பனை வெல்லத்தைச் சேர்த்து வாயின் வழியாக உள்ளே கொடுக்க வேண்டும்.
கோ-சஞ்சீவி மூலிகை மருந்து தயாரிப்பு
ஒரு கிலோ கோ-சஞ்சீவி மூலிகை மருந்தைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலிகைப் பொருட்கள்: அஸ்வகந்தா எனப்படும் அமுக்கிரா கிழங்கு 300 கிராம், உசிலை இலை 300 கிராம், வேப்பிலை 300 கிராம், அமிர்தவல்லி என்னும் சீந்தில் இலை 50 கிராம், நில வேம்பு 50 கிராம்.
வாய்வழிச் சிகிச்சை: இந்தப் பொருள்களை நிழலில் காயவிட்டு, நன்றாக அரைத்துக் காற்றுப்புகாத புட்டிகளில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம். வெள்ளாடுகளுக்கு ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் கோ-சஞ்சீவி மூலிகை மருந்தை வாரம் ஒருமுறை கொடுப்பதன் மூலம் குட்டிகளுக்கும், ஆடுகளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
முடிவாக மூலிகை மருத்துவம் என்பது கால்நடைகளுக்கு அளிக்கப்படும் முதல் உதவியே. இந்த முதலுதவி மூலிகை மருத்துவம் குணப்படுத்தாத நிலையில், உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகிச் சிகிச்சையளிக்க வேண்டும்.
அ.இளமாறன்,
பெ.செந்தில்குமார், வ.ரங்கநாதன், ந.புண்ணியமூர்த்தி,
கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.