கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?

கொய்யா Red Guava e1611944850477

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

ழைகளின் ஆப்பிள் கொய்யா. இந்திய பழ உற்பத்தியில் கொய்யா நான்காம் இடத்தை வகிக்கிறது. தனிச்சுவை, மணம், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த கொய்யாவின் தேவை, உலகச் சந்தையில் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அதிகளவில் உள்ளது. பழனி, மதுரை, கோயம்பேடு போன்ற சந்தைகளில் கொய்யா விற்கப்படுகிறது.

கொய்யாவின் பயன்கள் 

கொய்யாவில், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அஸ்கார்பிக் அமிலம், பென்டோதெனிக் அமிலம், ரிபோபிளேவின், தயாமின், நியாசின் போன்ற தாதுப்புகளும், உயிர்ச் சத்துகளும் உள்ளன. விதையில் இரும்புச்சத்து நிறைய உள்ளது. இதைக் காயாகவும், பழமாகவும் உண்ணலாம். பழத்திலிருந்து பழச்சாறு, பழப்பாகு, பழக்கூழ், பாலாடைக் கட்டி, பழப்பொடி போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம். மலச்சிக்கலுக்குக் கொய்யாப்பழம் சிறந்த மருந்தாகும். பழத்தோலிலிருந்து எடுக்கப்படும் பெக்டின் எனப்படும் நொதி, ஜெல்லி எனப்படும் பழக்கூழைத் தயாரிக்க உதவுகிறது. கொய்யா இலைச்சாறு, வலி மருந்தாகவும், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது.

தட்பவெப்பம், மண்வளம்

அனைத்துக் கால நிலைகளிலும் கொய்யா வளர்ந்தாலும், அதிக வெப்பம் கொய்யா விளைச்சலைப் பாதிக்கும். மிதமான குளிர்ப் பகுதியில் நல்ல மகசூல் கிடைக்கும். எனினும், மற்ற பழப்பயிர்களைக் காட்டிலும் கொய்யா அதிக வெப்பத்தைத் தாங்கி வளரும். 15-46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பகுதிகளில் கொய்யாவைச் சாகுபடி செய்யலாம். 23-28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, பூக்கள், பிஞ்சுகள் உருவாக உகந்தது. 7 டிகிரி செல்சியசுக்குக் குறைவான வெப்பநிலையில் கொய்யாவின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டு,  இலைகள் நீலமாக மாறி விடும். தேவையான வெப்பம் கிடைக்காத போது விளைச்சல் குறையும். இதனால், பூக்கும் காலத்துக்கும் அறுவடைக் காலத்துக்குமான இடைவெளி அதிகமாகும்.

வகைகள்

சதையின் நிறத்தைக் கொண்டு கொய்யாப் பழங்களை, சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா என இரு வகைகளாகப் பிரிக்கலாம்.  கொய்யாவில் பல்வேறு வகைகள் இருந்தாலும் அலகாபாத் சபேதா மற்றும் சர்தார் கொய்யா அல்லது லக்னோ-49 ஆகிய இரண்டும் வணிக நோக்கில் பயிரிட மிகவும் ஏற்றவை. இப்போது சிவப்புக் கொய்யாவுக்கு நல்ல விலை கிடைப்பதால், லலித், அர்கா கிரண் மற்றும் அர்கா ரேஷ்மி போன்ற வகைகளை விவசாயிகள் விரும்பிப் பயிரிடுகின்றனர். திருச்சி வேளாண்மைக் கல்லூரியிலிருந்து திருச்சி-1 கொய்யா வெளியிடப்பட்டுள்ளது. இது உப்பு நிலத்தில் பயிரிட ஏற்றது.

இனப்பெருக்கம்

முன்பு விதைகள் மூலம் உருவான நாற்றுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், மரத்தின் உருவம், பழத்தின் தரம் ஆகிய பண்புகள் மாறுபடுவதுடன், விளைச்சல் காலமும் அதிகமாகும். ஆனால், விதையில்லா இனப்பெருக்கம் மூலம் உருவாக்கப்படும் மரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதுடன், குறைந்த காலத்திலேயே விளைச்சலையும் தந்து விடும். எனவே, இந்தக் கன்றுகளை அனைவரும் விரும்புகின்றனர். மேலும், பாலிலா இனப்பெருக்கக் கன்றுகள், தாய் மரத்தின் குணங்களுடன் இருக்கும்.

கொய்யாவில், நெருக்க ஒட்டுமுறை, சதுரத்துண்டு மொட்டுக் கட்டும் முறை, பதியமிடுதல் ஆகிய முறைகள் பெருமளவில் பயனில் உள்ளன. தென் மாநிலங்களில், தொடக்கத்தில் பதியன் முறை நிறையப் பயனில் இருந்துள்ளது. மொட்டுக்கட்ட மற்றும் ஒட்டுக்கட்டப் பயன்படும் வேர்ச்செடி, அதே தாய் மரத்திலிருந்து பெறப்பட்ட விதைகள் அல்லது ஏனைய பழங்களிலிருந்து கிடைக்கும் விதைகள் மூலம் உருவாக்கப்படுகிறது. நன்கு பழுத்த பழங்களில் விதைகளை எடுத்து, நன்கு கழுவிச் சுத்தம் செய்து விதைத்து நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன. 8-10 செ.மீ. வளர்ந்த செடிகள், மண் தொட்டிகள் அல்லது பாலிதீன் பைகளுக்கு மாற்றப்பட்டு, மொட்டு அல்லது ஒட்டுக்கட்டப் படுகின்றன. இந்தச் செடிகள் 8-12 மாதங்களில் ஒட்டுக் கட்டத் தயாராக இருக்கும்.

நடவு முறைகள்

நிலத்தை 3-4 முறை நன்கு உழ வேண்டும். நிலம் சதுரமாக அல்லது செவ்வகமாக இருந்தால் நடவுக்கு வசதியாக இருக்கும். குழிகளை 75 செ.மீ. நீள, அகல, ஆழத்தில், 6×6 மீ. அல்லது 5×5 மீ. இடைவெளியில் எடுத்தால், ஒரு எக்டரில் 400 மரங்களை நடலாம். வடக்கு தெற்கில் வரிசையாக நட்டால் சூரியவொளி நன்றாகக் கிடைக்கும். 15-20 நாட்களுக்குப் பின், குழியில் மண்ணுடன் 30-40 கிலோ மட்கிய தொழுவுரம் மற்றும் ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட்டைக் கலந்து இட வேண்டும்.

குழிக்கு 50 கிராம் வீதம் குளோர்பைரிபாஸ் பூச்சிக்கொல்லிப் பொடியை இட்டு நட்டால், கரையான் தாக்குதல் இருக்காது. குழிகளின் நடுவில் கன்றுகளை நட்டதும் அடியில் மண்ணை அணைத்துப் பாசனம் செய்ய வேண்டும். கன்றுகள் காற்றினால் பாதிக்காமல் இருக்க, குழிக்கு ஒரு குச்சியை ஊன்றிக் கன்றுடன் கட்டிவிட வேண்டும். ஜுலை-அக்டோபர் காலம் நடவுக்கு மிகச் சிறந்தது.

அடர் நடவு

கொய்யாவில் அடர் நடவு முறை நல்ல இலாபத்தைத் தரும். ஏனெனில், குறைந்த பரப்பில் அதிக மகசூலைத் தருவதால், நல்ல வருமானத்தை அடையலாம். இதைச் சோதனை முயற்சியாக, பைசாபாத், ராஞ்சி, பாஸ்தி போன்ற இடங்களில் இரு அடுக்கு வரிசையில், அலகாபாத் ச்பேதா இரகத்தை எக்டருக்கு 800-900 கன்றுகள் வீதம் நடவு செய்து பார்த்ததில் நல்ல விளைச்சல் கிடைத்தது. மேலும் லக்னோவில் 2×2 மீ. அல்லது 2×1 மீ. இடைவெளியில் 2,500-5,000 அலகாபாத் ச்பேதா கன்றுகளை நட்டதிலும் நல்ல விளைச்சல் கிடைத்தது.    

கொய்யா உற்பத்தி உத்திகளில் மர மேலாண்மை முக்கியம். குறிப்பாக உயரத்தைக் கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியம். ஏனெனில், கொய்யா வணிகத்தில், உற்பத்திச் செலவு, விளைச்சல், பழத்தின் தரம் ஆகிய மூன்றும் முக்கியம். ஆகவே, தொடக்கத்திலேயே மேல் நோக்கி வளரும் கிளைகளை வெட்டி உயரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அடர் நடவுக் கொய்யாவில் கவாத்து முக்கியமான செய்முறை. ஏனெனில், கொய்யாவைப் பொறுத்த வரையில், புதிய கிளைகளில் மட்டுமே பூக்களும் பிஞ்சுகளும் பிடிக்கும்.

உர மேலாண்மை

பேரூட்டங்களான தழை, மணி, சாம்பல் சத்தைப் போலவே, சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் ஆகிய இரண்டாம் நிலைச் சத்துகளும் பயிர்களுக்குத் தேவை. காய்ப்பு மரங்களுக்கு ஆண்டில் இருமுறை உரங்களை இட வேண்டும். மார்ச்சில், 1 கிலோ யூரியா, 3 கிலோ சூப்பர், 750 கிராம் பொட்டாஷ் வீதம் ஒவ்வொரு கன்றுக்கும் இட வேண்டும். மீண்டும் இதேயளவு உரங்களை அக்டோபரில் இட வேண்டும்.

துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, போரான், மாலிப்டினம், குளோரின் ஆகிய நுண்ணூட்டங்களின் தேவை மிகக் குறைவு தான். இவை குறைந்தால், பேரூட்டங்கள் உள்ளிட்ட மற்ற சத்துகள் போதியளவில் இருந்தாலும், மரங்களின் வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கும். நுண்ணூட்டக் குறையைச் சரி செய்ய, துத்தநாக சல்பேட் 0.5%, மக்னீசிய சல்பேட் 0.5%, மாங்கனீசு சல்பேட் 0.5%, காப்பர் சல்பேட் 0.25%, பெரஸ் சல்பேட் 0.25% வீதம் கலந்து, புதிதாகத் துளிர்கள் வரும் போது, பூக்கும் போது, பூத்து ஒரு மாதம் கழித்து, காய்கள் பிடிக்கும் போது இட வேண்டும்.

மகசூல் பருவங்கள்

ஆண்டில் மூன்று முறை பூக்கும். முதலாவதாக, மார்ச்-மே பருவத்தில் பூத்து, மழைக்காலமான, ஜுலை இறுதியிலிருந்து அக்டோபர் பாதி வரையில் காய்க்கும். அடுத்து, ஜுலை, ஆகஸ்ட்டில் பூத்து, அக்டோபரிலிருந்து அறுவடைக்குத் தயாராகும். மூன்றாவதாக, அக்டோபரில் பூத்துக் காய்க்கும். மழைக்காலத்தில் தோன்றும் பழங்கள் கடினமாக, சுவையற்று, நீர் மிகுந்து, சத்துக் குறைந்து இருக்கும். மழைக்காலப் பழங்கள் வேகமாக அழுகி விடும். ஏனெனில், பழங்கள் வெளிரி, தோல் பளபளப்பாகி விடும். இதைத் தொடர்ந்து, சிறியளவில் பழத்தில் கறை படிதல், வெம்புதல், சுருக்கம் விழுதல், அறுவடைக்குப் பின் வைட்டமின் சி குறைதல் போன்ற மாற்றங்களும் உண்டாகும். குளிர் காலத்தில் தோன்றும் பழங்கள் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதால் நெடுந்தொலைவுக்கு அனுப்பலாம்.

தரமான பழங்களை உருவாக்குதல்

டிசம்பர் முதல் ஜுன் வரை அல்லது மழைக்காலம் தொடங்கும் வரை, நீர் பாய்ச்சக் கூடாது. அதிகமாகப் பூக்கும் காலத்தில், பூங்கொத்தில் இருந்து, நான்கில் மூன்று பங்கு பூக்களை நீக்கிவிட வேண்டும். இதைப் போல் புதிய துளிர்கள் வரும்போது, அதிகத் துளிர்களை விடும் கிளைகளில், நான்கில் மூன்று பங்கு துளிர்களை நீக்கிவிட வேண்டும். இப்படிச் செய்தால் மழைக்காலத்தில் பிஞ்சு உருவாதல் குறையும். மே மாதத்தில், மரத்தின் மொத்த உயரத்தில் பாதியளவுக் கிளைகளை வெட்டி விட்டால், புதிய கிளைகளின் உயரம் குறைவாக இருக்கும். மேலும், குளிர்கால விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

அறுவடை

பதியன்கள் இரண்டாம் ஆண்டிலிருந்தே காய்க்கத் தொடங்கி விடும். பிப்ரவரி முதல் ஜுன் வரையும், செப்டம்பர் முதல் ஜனவரி வரையும் காய்க்கும். பூத்ததிலிருந்து 5 மாதங்கள் கழித்துப் பழங்களை அறுவடை செய்யலாம்.

மகசூல்

எக்டருக்கு 25 டன் வரை கிடைக்கும். இந்த விளைச்சல், இரகம் மற்றும் அப்பகுதியில் நிலவும் காலநிலையைப் பொறுத்தது. பதியமிட்டு நட்ட இரண்டாம் ஆண்டுக் கடைசியில் அல்லது மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில், மரங்களைக் காய்க்க விடலாம். மூன்றாம் ஆண்டில் 8 டன்னும், ஏழாவது ஆண்டில் எக்டருக்கு 25 டன்னும் கிடைக்கும். நன்கு பாதுகாத்தால் 40 ஆண்டுகளுக்குப் பயனளிக்கும். 20 ஆண்டுகள் வரையில் நல்ல விளைச்சல் இருக்கும். பிறகு, கொஞ்சம் குறையும். 


PACHAI BOOMI DR.C.RAJA MANICKAM

முனைவர் சி.இராஜமாணிக்கம்,

தோட்டக்கலை உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading