கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020
பசுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறி, கொடிக்காய்கறி, கொய்மலர் மற்றும் பிற பயிர்களில் வேர்முடிச்சு நூற்புழுத் தாக்குதல் அதிகளவில் உள்ளது. அதாவது, திறந்த வெளியில் பயிரிடப்படும் பயிர்களைத் தாக்குவதை விட, பசுமைக்குடில் பயிர்களை அதிகமாகத் தாக்குகிறது. இதற்கான காரணங்களை அறியலாம்.
காரணங்கள்
பசுமைக்குடிலின் படுக்கை அல்லது நெகிழிப்பைகளில் நிரப்பப்படும் மண் கலவை, ஏற்கெனவே நூற்புழுக்களால் பாதிக்கப்பட்டிருத்தல். தேவையான அளவில் அங்ககப் பொருள்கள் மண்கலவையில் இல்லாதிருத்தல். கோடையுழவு செய்யாமல் தரிசாக விடுதல் மற்றும் பயிர்ச் சுழற்சியைப் பின்பற்ற முடியாத சூழல். பசுமைக்குடிலில் நூற்புழுக்களுக்குத் தேவையான ஈரப்பதம் தொடர்ந்து இருத்தல்.
வெளியில் இருந்து பாசனநீர் மூலம் பசுமைக் குடிலுக்குள் பரவிய நூற்புழுக்கள் பல்கிப் பெருகுதல். படுக்கை அல்லது நெகிழிப்பைகளின் குறுகிய இடத்தில் வேர்களின் வளர்ச்சி அதிகமாகி, நூற்புழுக்கள் எளிதாக, விரைவாகத் தாக்கும் சூழல் ஏற்படுதல். நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட நாற்றுகள் மற்றும் நடவுப் பொருள்களைப் பயன்படுத்துதல். நூற்புழுக்களைத் தாங்கி வளர இயலாத இரகங்களைப் பயிரிடுதல். இடைவெளி இல்லாமல் ஒரே பயிரையே தொடர்ந்து பயிரிடுதல்.
நூற்புழுவைக் கட்டுப்படுத்தும் வேப்பம் புண்ணாக்கு, உயிரியில் மற்றும் இராசயனக் கொல்லிகளை இடாதிருத்தல். பூசணம் மற்றும் பாக்டீரியாவுடன் நூற்புழுக்கள் இணைந்து செயல்படும் போது ஏற்படும் கூட்டுநோயால் பாதிப்பு தீவிரமடைதல். அறுவடைக்குப் பிறகு, நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட வேர், கிழங்கு போன்றவற்றைச் சரிவர அகற்றாமல் இருத்தல்.
மேலும், பசுமைக்குடிலில் நிலவும் இயல்பற்ற வெப்பநிலை, அதனால் பயிர்களில் ஏற்படும் வினையியல் மாற்றம், நூற்புழுக்களின் செயல்பாடு மற்றும் இனப்பெருக்கத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றுக்கும், பயிர்களை நூற்புழுக்கள் மிகுதியாகத் தாக்குவதற்கும் இடையேயான தொடர்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
கட்டுப்படுத்துதல்
சாகுபடிக்குத் தேவையான மண்கலவையை நூற்புழு ஆய்வுக்கு உட்படுத்துதல். சூரிய மண் வெப்பமூட்டல் மூலம் மண்கலவையில் உள்ள நூற்புழுக்களை அழித்தல். நூற்புழுக்களின் எதிர் உயிரினங்கள் நிறைந்த மட்கிய தொழுவுரத்தை மண்கலவையுடன் எக்டருக்கு 12.5 டன் அளவில் கலந்து இடுதல். காய்கறி சாகுபடிக்கு முன் கேந்தி மலர்ச் செடிகளைப் பயிரிட்டு, 1-3 மாதங்களுக்குப் பிறகு மடக்கி உழுதல். சாகுபடிக்கு 2-3 வாரங்களுக்கு முன், ஈரப்பதத்தில் எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட்டு நன்கு கலக்குதல்.
மண்கலவையில் எக்டருக்கு 2.5 கிலோ வீதம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடித் தூளை இடுதல். நூற்புழுக்கள் இல்லாத வகையில் பாசனநீரை வடிகட்டி விடுதல். வெளியில் இருந்து கொண்டு வரும் பண்ணைக் கருவிகளில் ஒட்டியிருக்கும் மண், வேர்த்துகள்கள், பணியாட்களின் காலணி போன்றவற்றின் மூலம் நூற்புழுக்கள் பரவாமல் தடுத்தல். ஏற்கெனவே பயன்படுத்திய நெகிழிப்பைகளைப் பயன்படுத்தாமல் இருத்தல்.
வேர்களில் முடிச்சு அல்லது உருமாற்றம் அடைந்த நாற்றுகளைத் தவிர்த்தல். பயிர்கள் வளர்ந்த நிலையில் அவற்றைச் சுற்றிக் கேந்தியைப் பயிரிடுதல். நூற்புழுக்களைத் தாங்கி வளரும் இரகங்களைப் பயிரிடுதல்.
முனைவர் வீ.விஜிலா,
முனைவர் இராஜா.இரமேஷ், முனைவர் மு.இராமசுப்பிரமணியன்,
வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம்-614404.