வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வேலைகளை விரைவாக முடிக்கவும், உழவடைச் செலவுகளைக் குறைக்கவும் ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்குக் கொடுத்து, உணவு உற்பத்தியை உயர்த்த உதவுகிறது. இந்த நல்ல வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புல்டோசர்
முட்புதர்களை அகற்ற, நிலத்தைச் சமன்படுத்த, ஏரிகளை, கால்வாய்களைத் தூர்வார, தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற, புல்டோசர் பயன்படுகிறது. இதற்கான வாடகை, மணிக்கு 1,230 ரூபாயாகும்.
டிராக்டர்
உழவு முதல் அறுவடை வரையும், அறுவடைக்குப் பிறகு நடைபெறும் அனைத்து விவசாயப் பணிகளுக்கும் தேவையான விவசாயக் கருவிகளை இயக்குவதற்கு டிராக்டர் பயன்படுகிறது. இதற்கான வாடகை, மணிக்கு 500 ரூபாயாகும்.
சக்கர வகை அறுவடை இயந்திரம்
இந்த இயந்திரத்தின் மூலம், நெல், சிறுதானியம் மற்றும் பயறுவகைப் பயிர்களை அறுவடை செய்யலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம் குறித்த நேரத்தில் அறுவடை செய்வதுடன், தானிய இழப்பைத் தவிர்க்கலாம். மேலும், அறுவடைச் செலவைக் குறைக்கலாம். இதற்கான வாடகை, மணிக்கு 1,160 ரூபாயாகும்.
டிராக் வகை நெல் அறுவடை இயந்திரம்
இந்த அறுவடை இயந்திரம், ஈரம் அதிகமாக உள்ள நெல் வயல்களில் அறுவடை செய்யப் பயன்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் நெற்பயிர்களில் இருந்து நெல் மணிகளைப் பிரித்தெடுத்து, சுத்தம் செய்து, சாக்கு மூட்டைகளில் சேகரிக்க இயலும். மேலும், இப்பணிகளை ஒரே நேரத்தில் இந்த இயந்திரம் செய்வதால், சரியான காலத்தில் அறுவடை செய்து, நெல் வீணாவதைக் குறைக்கலாம். இதற்கான வாடகை, மணிக்கு 1,880 ரூபாயாகும்.
டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம்
இந்த மண்ணள்ளும் இயந்திரம், மண்ணை அள்ளவும், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், நிலங்களில் உள்ள புதர்களை அகற்றி நல்ல விவசாய நிலங்களாக மாற்றவும், ஆறுகளைத் தூர்வாரி ஆழப்படுத்தவும் பயன்படுகிறது. இதற்கான வாடகை, மணிக்கு 1,910 ரூபாயாகும்.
சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம்
இந்த மண்ணள்ளும் இயந்திரம், மண்ணை அள்ளவும், குழிகளைத் தோண்டவும், முட்புதர்களை அகற்றி தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றவும் பயன்படுகிறது. இதற்கான வாடகை, மணிக்கு 890 ரூபாயாகும்.
மினி டிராக்டர்
இந்த டிராக்டர், குறைந்த இடைவெளிப் பயிர்களான, கரும்பு, வாழை போன்றவற்றில், ரோட்டோவேட்டர் மூலம் நிலத்தை உழுவதற்குப் பயன்படும். மேலும், கரும்புத் தோட்டங்களில் மண் அணைக்கவும், தோகைகளை உரிப்பதற்கும் பயன்படும். இதற்கான வாடகை, மணிக்கு 460 ரூபாயாகும்.
கரும்பு அறுவடை இயந்திரம்
இந்த இயந்திரம், கரும்பின் வேர் மற்றும் மேல் தண்டுப் பகுதியை வெட்டி, பிறகு கோர்வைப்படுத்தி சிறிய துண்டுகளாக நறுக்கி, தேவையற்ற தோகைக் குப்பையை நீக்கி, அருகில் வரும் இன்பீல்டர்களில் கொட்டும் திறன் கொண்டது. இதற்கான வாடகை, மணிக்கு 5,120 ரூபாயாகும்.
வாகனத்துடன் இயங்கும் தேங்காய்ப் பறிப்பு இயந்திரம்
இந்த இயந்திரம் மூலம், அதிகளவிலான தென்னை மரங்களில் தேங்காய்களைப் பறிக்க இயலும். இந்த இயந்திரம் வேலையாட்கள் மூலம் தேங்காய்களைப் பறிப்பதை விடப் பாதுகாப்பானது. இதற்கான வாடகை, மணிக்கு 450 ரூபாயாகும்.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் இந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலங்களுக்குச் சென்று முன்பதிவு செய்யலாம். அல்லது அங்கு செல்லாமல், தங்கள் வீடு அல்லது வயல்களில் இருந்தே இ-வாடகை ஆன்லைன் செயலியின் மூலமும் முன்பதிவு செய்யலாம்.
வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.