கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020
சத்துள்ள உணவுப் பொருள் கீரை. நம் முன்னோர்கள் கீரைகளை அதிகளவில் சாப்பிட்டதால் நோயற்று வாழ்ந்தார்கள். இவ்வகையில், மணத்தக்காளி இலை, தண்டு, காய், கனி, வேர் என அனைத்துமே பயனுள்ளவை. இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையில், வைட்டமின் பி மிகுந்துள்ளது.
பயன்கள்
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் இதை, வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், வேலை செய்வதால் ஏற்படும் உள்ளுறுப்புகளின் களைப்பு நீங்கும். இதயம் வலிமையாகும். நன்றாக உறக்கம் வரும். மலச்சிக்கல் அகலும். பார்வை தெளிவாகும். வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை இருந்தால், வாரம் இருமுறை இக்கீரையை உண்ணலாம். தேங்காயைச் சேர்த்துக் கூட்டாக உண்டால், குடற்புண், மூத்திரப்பை எரிச்சல் குணமாகும்.
மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கிப் பசியைக் கொடுக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். மணத்தக்காளிப் பழம் குரலை இனிமையாக்கும். கரு வலிமை பெறவும், மகப்பேறு சுகமாகவும் உதவும். மணத்தக்காளி வேர், மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் பயன்படுகிறது.
உணவே மருந்து என்னும் அடிப்படையில், எல்லா வயதினரும் விரும்பி உண்ணும் வகையில், சத்துகள் மாறாமல் இதைப் பதப்படுத்தி, சத்துமாவுக் கலவை, ரொட்டிக் கலவை, தோசைக் கலவை, பருப்புப்பொடி, சாதப்பொடி, சட்டினிப்பொடி போன்ற உடனடி உணவுகளாகப் பயன்படுத்தலாம். ஐந்து கிராம் மணத்தக்காளிக் கீரைப்பொடியில், 50 கிராம் கீரையில் உள்ள சத்துகள் உள்ளன.
சத்துமாவுக் கலவை
தேவையான பொருள்கள்: கம்பு மாவு 35 கிராம், கொள்ளு 20 கிராம், பொரிகடலை 15 கிராம், மணத்தக்காளிக் கீரைப்பொடி 2 கிராம், சர்க்கரை 20 கிராம்.
செய்முறை: கம்பு, கொள்ளு, பொரிகடலையை நன்கு வறுத்து அரைத்துச் சலித்து, மணத்தக்காளிக் கீரைப்பொடி, சர்க்கரையைச் சேர்த்தால், சத்துமாவுக் கலவை தயார். இதை, நெய் சேர்த்து உருண்டையாக அல்லது நீரைச் சேர்த்துக் கஞ்சியாகச் சாப்பிடலாம்.
ரொட்டிக் கலவை
தேவையான பொருள்கள்: கோதுமை மாவு 30 கிராம், சோளம் 20 கிராம், கேழ்வரகு 20 கிராம், கொள்ளு 20 கிராம், மஞ்சள் தூள் 5 கிராம், மிளகாய்த்தூள் 1.5 கிராம், உப்பு 2.0 கிராம், சீரகம் 2.0 கிராம், மணத்தக்காளிக் கீரைப்பொடி 5 கிராம்.
செய்முறை: கோதுமை, சோளம், கொள்ளு, கேழ்வரகை வறுத்து அரைத்துச் சலித்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீரகம், மணத்தக்காளிக் கீரைப்பொடியைச் சேர்த்தால், ரொட்டிக் கலவை தயார்.
ரொட்டித் தயாரிப்பு
வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சிறிதாக நறுக்க வேண்டும். காரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு, ரொட்டிக் கலவையுடன் இவற்றையெல்லாம் சேர்த்து நீரை விட்டு, சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து அரைமணி நேரம் வைத்திருந்து, எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் சுட்டால், சுவையான ரொட்டி தயார்.
பருப்புப்பொடி
தேவையான பொருள்கள்: துவரம் பருப்பு 45 கிராம், கடலைப் பருப்பு 37.5 கிராம், உளுந்து 5 கிராம், மிளகுத்தூள் 1 கிராம், மிளகாய்த் தூள் 1.5 கிராம், மணத்தக்காளிக் கீரைப்பொடி 5 கிராம், உப்பு 5 கிராம்.
செய்முறை: துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்தை வறுத்து அரைத்து, அதில், மணத்தக்காளிக் கீரைப்பொடி, மிளகாய்த்தூள், மிளகுத் தூள், உப்பைச் சேர்த்தால், சுவையான பருப்புப்பொடி தயார். இதைச் சாதத்துடன் சேர்த்து, எண்ணெய் அல்லது நெய்விட்டுச் சாப்பிடலாம்.
முனைவர் ஆ.இராஜ்குமார்,
மு.வைதேகி, அ.இராமச்சந்திரன், மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி,
இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்.