ரெண்டு நேரம் தவிட்டுத் தண்ணி குடுப்போம்!

தவிட்டு goat rearing aravakurichi farmer sanmuganandam

ரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிசெட்டிபாளையம், ப.சண்முகானந்தம், தென்னை, முருங்கை, பருத்தி, சூரியகாந்தி, மரவள்ளி, மிளகாய் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும், மேச்சேரி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரிடம் ஆடு வளர்ப்பு அனுபவங்களைக் கூறச் சொன்னோம். அப்போது அவர் கூறியதாவது:

“எங்களுக்கு இருபத்தஞ்சு ஏக்கர் நெலம் இருக்கு. ஆனா எங்க பக்கம் நீர்வளம் குறைவா இருக்குறதுனால, இந்த நெலம் முழுசும் சாகுபடி செய்ய முடியல. அதனால, எங்க நெலத்துல பெரும் பகுதியை மேய்ச்சல் நெலமா ஆக்கி, அதுல மேச்சேரி ஆடுகள வளர்க்குறோம். இது, எங்க அப்பா காலத்துல இருந்தே நடக்குது.

இப்போ எங்ககிட்ட ஒரு நாற்பது ஆடுக இருக்கு. இதுகள காலையிலயே பட்டியில இருந்து வெளியேத்தி மேய்ச்ச காட்டுல விட்டுருவோம். பொதுவா ஆடுக ரெண்டு வருசத்துல மூனு முறை ஈனும். ஆனா தெடமா தெம்பா இருக்குற ஆடுக, ஆறு மாசத்துக்கு ஒரு ஈத்துங்கிற கணக்குல, வருசத்துக்கு ரெண்டு முறை குட்டி போட்டுரும். இப்பிடி, வருசத்துல ரெண்டு போகம் ஈனக்கூடிய ஆடுக எங்க பட்டியில அஞ்சாறு இருக்கு. பராமரிப்பு நல்லா இருந்தா ஆண்டுக்கு ரெண்டு ஈத்து எடுக்கலாம்.

குட்டி போட்ட ஆடுகள வெய்யிலுல மேய்ச்சலுக்கு அனுப்பாம பத்து நாள் வரைக்கும் நிழலுல வச்சு தீனி குடுத்துப் பராமரிப்போம். எங்ககிட்ட இருக்குற எல்லா ஆடுகளையும் ஒரே பட்டியில அடைக்க மாட்டோம். இளங்குட்டி தாய் ஆடுகள ஒரு பட்டியில அடைப்போம். குட்டியில்லாத ஆடுகள இன்னொரு பட்டியில அடைப்போம். இனவிருத்திக்காக இருக்கக்கூடிய கிடாய்கள, இளங்குட்டி ஆடுக இருக்குற பட்டியில அடைப்போம்.

மேய்ச்சல் நிலத்தையும் இப்பிடித் தான் தனித்தனியா பிரிச்சு வச்சிருக்கோம். காலையில பட்டியில இருந்து ஆடுகள மேய்ச்சலுக்குக் கெளப்புறதுக்கு முன்னாடி, நெல் தவிடு கலந்த தண்ணிய குடுப்போம். அதைப் போல, சாயங்காலம் மேய்ச்சல் முடிஞ்சு ஆடுக பட்டிக்கு வந்ததும் தவிட்டுத் தண்ணிய எல்லா ஆடுகளுக்கும் குடுப்போம். புல்லு நெறயா வளரக்கூடிய காலத்துல ஒரு நேரம் மட்டும் தவிட்டுத் தண்ணிய குடுப்போம். வறட்சிக் காலத்துல இந்த தவிட்டுத் தண்ணியோட பருத்திப் பஞ்சுக் கழிவு அல்லது பருத்தி விதையை எல்லா ஆடுகளுக்கும் குடுப்போம். இதெல்லாம் குடுத்தா தான் ஆடுக சீக்கிரமா நல்ல எடைக்கு வரும்.

ஆடுக நோயில்லாம இருக்குறதுக்கு, புரட்டாசி, ஐப்பசி மாசத்துல, எல்லா ஆடுகளுக்கும் வாய்ப்புண் தடுப்பூசிய போட்டு விடுவோம். தை, மாசியில அம்மைத் தடுப்பூசிய போட்டுருவோம். இந்தத் தடுப்பூசிய போட்டு 22 நாள் வரைக்கும் அம்மை நோய் வராத ஆடுகள, அம்மை நோய் வந்த ஆட்டுப் பட்டியில விட்டாலும், அதுகள அம்மை நோய் தாக்காது. இளம் புல்லு விழுகுற காலத்துல, மூனு மாசத்துக்கு ஒருமுறை பூச்சி மருந்து குடுக்கணும்.

இப்பிடிப் பக்குவமா பராமரிச்சு வளர்த்தா, நூறு நாள்ல இருபது கிலோ அளவுக்கு ஆடுக வளர்ந்துரும். ஆனா இதுல தோலு, காலு, இரைப்பைன்னு சொல்லி, வியாபாரிக, பத்து கிலோவைக் கழிவுக் கணக்குல சேர்த்துட்டு, பத்து கிலோவுக்குத் தான் பணம் குடுப்பாக.

இந்தக் கணக்குல ஒரு ஆடு அஞ்சாயிரம் ரூபாய்க்குப் போகும். இதுல ஆடு வளர்ப்புச் செலவுன்னு ஒரு ரெண்டாயிரம் ரூபா போக, ஆட்டுக்கு மூவாயிரம் ரூபா நமக்கு இலாபமா நிக்கும்’’ என்றார்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading