கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019
மானாவாரிப் பகுதியில் கறவை மாடு வளர்ப்புக்கு அடுத்து முக்கியத் தொழிலாக விளங்குவது வெள்ளாடு வளர்ப்பு. விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயைத் தரும் சிறந்த தொழில் இது. வெள்ளாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுவதால், மானாவாரி விவசாயிகளுக்கு இலாபந்தரும் தொழிலாக உள்ளது.
மானாவாரிக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள்
ஜமுனாபாரி: இந்த ஆடுகளின் தாயகம் உத்திரப்பிரதேசம். இவை வெண்மையாக இருக்கும். கழுத்து, காதுகள் கறுப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். அனைத்து ஆடுகளிலும் தாடி இருக்கும். பின்புறத் தொடை அடர்ந்த ரோமங்களுடன் இருக்கும். இந்தியாவில் வளர்க்கப்படும் ஆட்டினங்களில் நீண்ட, வலிமையான கால்களைக் கொண்டவை ஜமுனாபாரி ஆடுகள். மூக்கின் முன்பகுதி அடர்ந்த ரோமங்களுடனும், முகமானது கிளியின் முகத்தைப் போன்றும் இருக்கும். கொம்புகள் சிறுத்து, தட்டையாக, திருகலாக இருக்கும்.
கிடா 3-4 அடி உயரம், பெட்டை ஆடானது 2½-3 அடி உயரம் வரை வளரும். காதுகள் நீளமாக கீழ்நோக்கி இருக்கும். நன்கு வளர்ந்த கிடா 60-80 கிலோ எடையும், பெட்டையாடு 45-60 கிலோ எடையும் இருக்கும். குட்டிகள் பிறக்கும் போதே 4 கிலோ இருக்கும். பெட்டையாடு 20-25 மாதங்களில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். பால்மடி நீண்டு திரட்சியான காம்புகளுடன் இருக்கும். ஓராண்டில் 250-280 லிட்டர் பாலைக் கொடுக்கும். ஒரு நாளைக்கு 2-2.5 லிட்டர் பாலைத் தரும். பாலில் 3-3.5% கொழுப்பு இருக்கும். மேய்ச்சல் முறையில் வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றவை.
பார்பாரி: இந்த ஆடுகள் தில்லி, உத்திரப்பிரதேச மாநிலங்களில் மிகுதியாக உள்ளன. இவை, இறைச்சி மற்றும் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. வெண்மையாக இருக்கும் ஆடுகளின் வால்களில் பழுப்புப் புள்ளிகள் இருக்கும். உடலில் ரோமம் குறைவாக இருக்கும். கொம்புகள் நீண்டிருக்கும். நன்கு வளர்ந்த கிடா 35-45 கிலோ எடையும், பெட்டை ஆடு 25-35 கிலோ எடையும் இருக்கும். ஒரு ஈற்றில் 2-3 குட்டிகளைப் போடும். ஒருநாளில் 1-1.5 லிட்டர் பாலைக் கொடுக்கும். பாலில் 5% கொழுப்பு இருக்கும். கொட்டகை முறையில் வளர்க்கச் சிறந்த பார்பாரி ஆடுகள் 12-15 மாதங்களில் இரண்டு முறை ஈன்று விடும்.
தலைச்சேரி: மலபாரி எனப்படும் தலைச்சேரி ஆடுகள் கேரளத்தைச் சேர்ந்தவை. இவை இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. பொதுவாக வெள்ளையாக இருக்கும். நன்கு வளர்ந்த கிடா 40-50 கிலோ எடையும், பெட்டையாடு 30-40 கிலோ எடையும் இருக்கும். நாளொன்றுக்கு 1-2 லிட்டர் பாலைத் தரும். இனப்பெருக்கத் திறனுள்ள தலைச்சேரி ஆடுகள் ஓர் ஈற்றில் 2-3 குட்டிகளைப் போடும்.
ஷிரோகி: இந்த ஆடுகள் செம்பழுப்பாக இருக்கும். இதில், வெள்ளை மற்றும் பழுப்புக் கலந்த திட்டுகள் காணப்படும். சிறியளவில் அடர்ந்த ரோமங்கள் உண்டு. நடுத்தர உயரத்தில் நெருக்கமான உடலமைப்பில் இருக்கும். சுருண்ட வாலின் நுனியில் ரோமங்கள் அடர்ந்திருக்கும். கொம்புகள் மிகவும் சிறுத்து, கூர்மையாக, பின்புறம் வளைந்திருக்கும். நன்கு வளர்ந்த கிடா 50 கிலோ எடையும், பெட்டையாடு 23 கிலோ எடையும் இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஈனும். ஓர் ஈற்றில் இரண்டு குட்டிகளைப் போடும். குட்டியின் எடை 2 கிலோ வரை இருக்கும். முதல் ஈற்றுக்கு வருவதற்கு 19 மாதங்கள் ஆகும். ஓராண்டில் 175 நாட்கள் வரையில் பாலைக் கொடுக்கும். மொத்தத்தில் 70-75 லிட்டர் பாலைத் தரும்.
கன்னி ஆடு: இந்த ஆடுகள் இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் மிகுதி. உயரமாக வளரும். கறுத்த உடலில் வெள்ளைக் கோடுகள் இருக்கும். இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இனப்பெருக்கத்துக்கு 9-10 மாதங்களில் தயாராகும். ஓர் ஈற்றில் 2-3 குட்டிகளைப் போடும். வறட்சியைத் தாங்கி வளரும். நன்கு வளர்ந்த கிடா 35-40 கிலோ எடையும், பெட்டையாடு 25-30 கிலோ எடையும் இருக்கும்.
கொடி ஆடு: இந்த ஆடுகள் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிகுதியாக உள்ளன. உயரமாக வளரும். மேய்ச்சல் முறையில் வளர்க்க ஏற்றவை. ஓர் ஈற்றில் 2-3 குட்டிகளை ஈனும். வறட்சியைத் தாங்கி வளரும். நன்கு வளர்ந்த கிடா 30-35 கிலோ எடையும், பெட்டையாடு 20-25 கிலோ எடையும் இருக்கும்.
கொட்டகை அமைத்தல்
வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை அதிகச் செலவில்லாத முறையில் கொட்டகையை அமைத்துப் பராமரித்தால், அவற்றின் உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியைப் பெருக்க முடியும். நிறைய மழை பெய்யும் பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் மண்தரைக் கொட்டகையிலேயே வளர்க்கலாம். நீர் தேங்காத மேட்டுப் பகுதியில் கொட்டகையை அமைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி, சூபாபுல், கிளைரிசிடியா, கல்யாண முருங்கை, அகத்தி, வேம்பு வாதநாராயணன், தேக்கு மரங்களை வளர்த்தால், வறட்சிக் காலத்தில் ஆடுகளுக்குத் தேவையான தீவனம் கிடைக்கும். கொட்டகையின் அருகிலேயே தூய்மையான குடிநீர் ஆடுகளுக்குக் கிடைக்க வேண்டும்.
கொட்டகையில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். கெட்டியான கட்டடமாகக் கொட்டகையை அமைத்தால், சுவர்களில் விரிசல் அல்லது ஓட்டை இல்லாமல் இருக்க வேண்டும். தரையானது தூய்மையாக, எளிதில் நீரை உறிஞ்சும் தன்மையில், நீர் வடியும் நிலையில் இருக்க வேண்டும். ஆடுகளின் வளர்ப்பு முறையைப் பொறுத்துக் கொட்டகையின் அமைப்பும் அளவும் மாறுபடும். கொட்டகையின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருந்தால், அதிகளவில் சூரிய ஒளியும் வெப்பமும் கொட்டகையில் படாமல் இருக்கும். அதே சமயத்தில் நல்ல காற்றோட்டம் இருக்கும்.
கொட்டகை அமைப்புச் செலவைக் குறைக்க, தென்னை மற்றும் பனை ஓலையால் கூரையை அமைக்கலாம். ஆனால், ஆஸ்பெஸ்டாஸ் என்னும் கல்நார் தகடுகளால் அமைத்தால், பராமரிப்புச் செலவு குறைவதுடன் நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தலாம். ஆடுகளுக்குத் தாழ்வாரமுள்ள கொட்டகையை அமைப்பது நல்லது. பகலில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் இரவில் தங்குவதற்குக் கொட்டகை மட்டுமே போதும். ஆனால், கொட்டகையில் தங்க வைத்து வளர்த்தால், ஆடுகள் காலாற நடந்து வர, கொட்டகையுடன் கூடிய திறந்தவெளி அவசியம்.
கொட்டகையின் நீளவாட்டம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கொட்டகை அகலம் 8-12 மீட்டர் இருந்தால், ஆடுகளை நன்றாகப் பராமரிக்க முடியும். பக்கவாட்டு உயரம் 2.5 மீட்டரும், நடுக்குத்து உயரம் 3.5 மீட்டரும் இருந்தால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் ஆடுகள் நன்கு வளரும். கொட்டகையைச் சுற்றி நான்கடி உயரத்தில் கம்பி வலையை அமைக்க வேண்டும். கூரையின் கீழ்ப்பகுதி கொட்டகையில் இருந்து 75 செ.மீ. முதல் 1 மீட்டர் வரை வெளியே நீட்டியிருக்க வேண்டும்.
தீவனத் தொட்டி, குடிநீர்த் தொட்டி தனித்தனியே இருக்க வேண்டும். குறிப்பாக, குட்டிகள், வளர்ந்த ஆடுகள், சினையாடுகள், கிடா ஆடுகளுக்கு என, தொட்டிகளைத் தனித்தனியாக அமைத்தால், தீவனம் மற்றும் குடிநீருக்காக அவற்றுக்குள் போட்டி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் ஆடுகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
வகைவாரியாகக் கொட்டகைகளை அமைத்தல்
ஆடுகளின் வயது, இனம் மற்றும் பருவத்துக்கு ஏற்ப, கொட்டகைகளை அமைத்தால், மிக விரைவில் நல்ல வளர்ச்சியுள்ள ஆட்டு மந்தையைப் பெறலாம்.
பெட்டை ஆடுகளுக்கான கொட்டகை: ஈனும் நிலையிலுள்ள ஆடுகளையும் மற்ற பெட்டை ஆடுகளையும் தனியறையில் வளர்த்தால், வேகமாக வளரக்கூடிய மற்றும் நோயில்லாத ஆடுகளையும் குட்டிகளையும் பெற முடியும். பெட்டை ஆடுகளைத் தனியே வளர்த்தால், இளம் வயதிலே சினைப்பிடித்தல், சினை முறிதல் போன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம். சுமார் 60 பெட்டை ஆடுகளை வளர்ப்பதற்கு 15 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரமுள்ள கொட்டகை தேவை. தரையைச் செங்கல்லால் அமைத்தால், சிறந்த வடிகால் வசதி கிடைக்கும். அதிக மழை மற்றும் தாழ்வான பகுதியில் கொட்டகை இருந்தால் அதன் தரையைச் சற்று உயரமாக அமைக்க வேண்டும். குளிர்ச்சியான பகுதியில் மரக்கொட்டகையை அமைத்தால், நல்ல தட்பவெப்ப நிலையை உருவாக்கி ஆடுகளைப் பாதுகாக்கலாம்.
கிடா ஆடுகளுக்கான கொட்டகை: இனவிருத்திக்கான கிடா ஆடுகளைத் தனியறையில் பராமரிக்க வேண்டும். இதற்காகக் கொட்டகையில் மரச்சட்டங்களால் தனிக்கூண்டை அமைக்கலாம். நன்கு வளர்ந்த மூன்று கிடா ஆடுகளை வளர்க்க 4 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரமுள்ள தனியறை வேண்டும். இதை, நீளவாக்கில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து, போயர், தலைச்சேரி, ஜமுனாபாரி, ஷிரோகி போன்ற ஆடுகளை வளர்க்கலாம். பிரிக்கும் தடுப்புச் சட்டம் ஒரு மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும்.
சினை ஆடுகளுக்கான கொட்டகை: இது, 1.5 மீட்டர் நீளம், 1.2 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும். சினையாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. தீவனத் தொட்டி, குடிநீர்த் தொட்டி கொட்டகைக்குள் இருக்க வேண்டும். குளிர் காலத்தில் கொட்டகை வெப்பநிலை குறையாமல் இருக்க, வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தலாம். இதனால், பிறக்கும் குட்டிகளுக்குச் சளி வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
குட்டிகளுக்கான கொட்டகை: பிறந்த குட்டிகள் மற்றும் வளர்ந்த குட்டிகளை நல்ல முறையில் வளர்ப்பதற்குத் தனிக் கொட்டகை அவசியம். 25 குட்டிகளை ஒரு கொட்டகையில் பராமரிக்கலாம். நல்ல வளர்ச்சி மற்றும் எடையுள்ள குட்டிகளைத் தனியறையிலும், குறைந்த எடை மற்றும் முழு வளர்ச்சியற்ற குட்டிகளைத் தனியறையிலும் பராமரிக்க வேண்டும். பெரிய ஆட்டுப் பண்ணையில் வெவ்வேறு வயதுள்ள குட்டிகளைப் பராமரிக்க, இருவித அறைகளை அமைக்கலாம்.
இந்த அறையை 7.5 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரத்தில் அமைத்தால் 75 குட்டிகளை வளர்க்கலாம். இதை அகலவாக்கில் இரண்டு பிரிவுகளாக, அதாவது, ஒரு அறையை, 5 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரத்தில் அமைத்து அதில் முழு வளர்ச்சியற்ற குட்டிகளை வளர்க்க வேண்டும். 2.5 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரத்தில் இன்னொரு அறையை அமைத்து அதில் நன்கு வளரும் குட்டிகளைப் பராமரிக்க வேண்டும். இப்படிச் செய்தால், தீவனப் பற்றாக்குறை மற்றும் நோயின்றிக் குட்டிகள் வளரும்.
நோயுற்ற ஆடுகளுக்கான கொட்டகை: நோயுற்ற ஆடுகள் மற்றும் நடக்க முடியாத ஆடுகளைத் தனிக் கொட்டகையில் பராமரித்தால் இழப்பைத் தவிர்க்கலாம். பொதுவாக வளர்க்கப்படும் ஆட்டுக் கொட்டகைக்குச் சற்றுத் தள்ளி 3 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரத்தில் ஒன்றிரண்டு கொட்டகைகளை அமைத்து, நோய் மற்றும் நோயுற்ற ஆடுகளின் தன்மையைப் பொறுத்து, தனித்தனியே வளர்த்தால், நோயிலிருந்து குணப்படுத்தி இறப்புகளைக் குறைக்கலாம்.
கொட்டகைக் கதவின் அடிப்பகுதி பலகையாலும் மேல்பகுதி கம்பி வலையாலும் இருக்க வேண்டும். மேலும், ஆடுகள் எளிதில் குணமடையும் வகையில் நல்ல காற்றோட்டம் கிடைக்க, 0.7 மீட்டர் நீளம், 1.2 மீட்டர் உயரத்தில் சன்னலையும் அமைக்க வேண்டும்.
பொதுவான கொட்டகை அமைப்பு
தரைத்தளம்: மழை அதிகமுள்ள இடங்களில் தரையைக் களிமண் அல்லது மரச்சட்டங்களால் அமைப்பது நல்லது. மரச்சட்டங்கள் தரையிலிருந்து குறைந்தது 1 மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும். சட்டத்தின் அகலம் குறைந்தது 7.5-10 செ.மீ., கனம் 2.5-4 செ.மீ. இருக்க வேண்டும். சட்டங்களின் ஓரங்கள் வட்டமாக, வழவழப்பாக இருக்க வேண்டும். சட்டங்களின் இடைவெளி 1.0-1.5 செ.மீ. இருக்க வேண்டும். ஆடுகள் ஏறி இறங்க மரச்சட்டப் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும்.
களிமண்ணால் தரையை அமைத்தால், தளத்தைச் சுற்றி 15-30 செ.மீ. உயரத்தில் சுற்றுச்சுவரை அமைக்க வேண்டும். ரோமச் சேமிப்பு அறை, தீவன அறை மற்றும் ஆட்கள் தங்குவதற்கான அறையின் தளத்தை, மேடு பள்ளம் இல்லாமல் தரமாக அமைக்க வேண்டும்.
கூரை
செவ்வக அமைப்பில் கூரை இருக்க வேண்டும். மழை அதிகமுள்ள இடங்களில் கல்நார் அல்லது துருப்பிடிக்காத இரும்புத் தகடுகளால் அமைக்கலாம். குறைவாக மழை பெய்யும் இடங்களில் தென்னை மற்றும் பனை ஓலைகளால் அமைக்கலாம்.
வாயில்
கொட்டகையில் ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருந்தால் ஆடுகளை எளிதாகப் பராமரிக்கலாம். கொட்டகையின் அமைப்பைப் பொறுத்து நீளவாக்கில் அல்லது அகலவாக்கில் வாயில்களை அமைக்கலாம். வாயிற்கதவு 0.8 மீட்டர் அகலம், 1 மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும்.
தீவனத் தொட்டி
தீவனத் தொட்டிகளை சிமிண்ட் கலவை அல்லது மரத்தால் இரு பிரிவுகளாகப் பிரித்தால், தீவனப் போட்டி, தீவனச் சேதத்தைத் தவிர்க்கலாம். தீவனத்தை ஆடுகள் எளிதில் உண்ணும் வகையில் 1-2 அடி உயரத்தில் பல அடுக்குத் தீவனத் தொட்டிகளை ஆங்காங்கே அமைத்தால், அனைத்து வகையான தீவனங்களையும் ஆடுகள் விரைவில் தின்று விடும். குடிநீர்த் தொட்டியானது சிமிண்ட் அல்லது துருப்பிடிக்கா இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தொட்டிகள், ஆடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும்.
குளியல் தொட்டி
புற ஒட்டுண்ணிகளான உண்ணி, பேன் மற்றும் தொற்று நோய்களிலிருந்து ஆடுகளைக் காப்பாற்ற, அவற்றை மாதம் ஒருமுறை மருந்துக் கரைசலில் குளிப்பாட்ட வேண்டும். இதற்குக் குளியல் தொட்டி அவசியம். சிமிண்ட் அல்லது துருப்பிடிக்காத இரும்புத் தகடுகளில் குளியல் தொட்டிகளை அமைக்கலாம். இதன் விட்டம் 4-5 அடியும், உயரம் 3 அடியும் இருக்க வேண்டும். இந்தத் தொட்டியில் ஆடுகளின் பாதி உடல் மூழ்கும் அளவில் நீரை நிரப்பிக் குளிப்பாட்டிய பின், புற ஒட்டுண்ணி மருந்துக் கரைசலை உடலில் நன்கு தேய்த்துச் சிறிது நேரம் வெளியில் உலரவிட்டு, மீண்டும் குளிப்பாட்டினால், அவற்றின் உடலிலுள்ள ஒட்டுண்ணிகள் நீங்கி விடும்.
பரண்மேல் ஆடு வளர்ப்பு
நீர் தேங்காத மேட்டுப் பகுதியில் பரண் வீடு அமைய வேண்டும். மரச்சட்டங்களைக் கொண்டு, தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில், கல்தூண் அல்லது சிமிண்ட் கட்டைகளின் மேல் பரண் வீட்டை அமைக்க வேண்டும். பரணின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருந்தால், நல்ல காற்றோட்டம், வெளிச்சம் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப விரிவுப்படுத்தும் வகையில் பரணை அமைக்க வேண்டும்.
ஒரு குட்டிக்கு 0.4 ச.மீ., கிடா ஆட்டுக்கு 2.5 ச.மீ., சினை ஆடு மற்றும் இளம் ஆட்டுக்கு 1.5 ச.மீ. இடவசதி தேவை. பத்து ஆடுகளை வளர்ப்பதற்கு, 10 அடி நீளம், 10 அடி அகலம், 8.5 அடி உயரமுள்ள பரண் வீடு போதும். மரச்சட்டங்களின் இடைவெளி 2 செ.மீ. அளவில், அதாவது, ஆட்டுச்சாணம், சிறுநீர் வெளியேறும் வகையில் இருக்க வேண்டும். சட்டங்களைச் சமமாக அமைக்க வேண்டும். பரணைச் சுற்றிக் கம்பிவலையால் அடைக்க வேண்டும்.
ஆடுகள் ஏறி இறங்க வசதியாக, பரணின் ஒரு மூலையில் மரச்சட்டங்கள் அல்லது சிமெண்ட் கற்களால் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும். அதிகளவில் ஆடுகளை வளர்க்கும் போது, பரணைச் செவ்வகமாக அமைத்து, தேவைக்கு ஏற்ப, சிறு சிறு அறைகளாகப் பிரித்து, பரணின் இருபுறமும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும். இளங்குட்டிகள், சினையாடுகள், பெட்டை மற்றும் கிடா ஆடுகள் என்று, தனித்தனியே வளர்ப்பது நல்லது. இதனால், ஆடுகளுக்குத் தேவையான உணவு, இடம் சீராகக் கிடைக்கும். தீவனப் போட்டி இருக்காது. இளம்பருவச் சினை தவிர்க்கப்படும். தாய் ஆடுகள் குட்டிகளைப் பராமரிக்கவும், சினையாடுகள் எளிதாக ஈனவும் முடியும்.
பரணின் உட்புற வெப்பநிலை, 25-30 டிகிரி செல்சியஸ் இருந்தால், ஆடுகள் நன்கு சாப்பிட்டு அதிக எடையுடன் இருக்கும். இதற்கு மேல் வெப்பம் கூடினால் உண்ணும் திறனும் எடையும் குறைந்து நோய்வாய்ப்படும். எனவே, தென்னங்கீற்று, கல்நார் அட்டை, மண் அல்லது சிமெண்ட் ஓடுகளில் கூரையை அமைப்பது நல்லது. தகரக் கூரையைத் தவிர்க்க வேண்டும்.
பரணைச்சுற்றி ஆடுகள் நடந்து திரிய 5 ஆடுகளுக்கு 1 சென்ட் வீதம் இடத்தை ஒதுக்கிக் கம்பி வேலியைப் போட வேண்டும். பரணிலும், வெளிப்பக்க வேலியிலும், 2-3 அடி அகலமுள்ள கதவுகளைப் பொருத்த வேண்டும். தீவனம் மற்றும் குடிநீர்த் தொட்டிகள் பரணுக்கு வெளியே அல்லது உள்ளே இருக்கலாம். பரணுடன் இணைத்து அமைத்தால், ஆடுகள் தலையை வெளியே நீட்டி உண்ணும் வகையில் இருக்க வேண்டும். பிறந்த குட்டிகளையும், இளங்குட்டிகளையும் பரணுக்கு வெளியே உள்ள அறைகளில் வளர்ப்பது நல்லது.
தீவன மேலாண்மை
ஆடுகள் நன்கு வளர்வதற்கு மாவு, புரதம், நார், கொழுப்பு, தாதுப்புகள், சுத்தமான நீர் ஆகியவை அவசியம். புரதம், மாவு மற்றும் கொழுப்புள்ள புண்ணாக்கு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு, தினை, தவிடு போன்றவற்றையும், நார்ச்சத்துள்ள கம்பு நேப்பியர் புல், கினியாப்புல் ஆகியவற்றையும் கலந்து கொடுக்க வேண்டும். பசும்புல், காய்ந்த தட்டை மற்றும் வைக்கோலை நறுக்கி 4:1 வீதம் கலந்து ஆட்டின் உடல் எடையில் 10% அளவில் கொடுக்க வேண்டும். இத்துடன் அடர் தீவனத்தையும் கொடுத்தால் ஆடுகள் விரைவாக வளரும், பருவத்துக்கு வரும், நல்ல குட்டிகளை ஈனும், குட்டிகள் நலமாக இருக்கும்.
ஆடுகளின் வயதிற்கேற்ப அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 3-6 மாதக் குட்டிக்குத் தினமும் 100 கிராம், 6 மாதத்துக்கு மேலான குட்டிக்கு 250 கிராம், சினையாடு மற்றும் கிடா ஆட்டுக்கு 450-500 கிராம் வீதம் அடர் தீவனத்தைக் கொடுக்கலாம். பத்துக் கிலோ அடர் தீவனத்தைத் தயாரிக்க, சோளம், மக்காச்சோளம் 4 கிலோ, புண்ணாக்கு 3 கிலோ, கோதுமைத் தவிடு அல்லது அரிசித்தவிடு 2.7 கிலோ, தாதுப்புக் கலவை 200 கிராம், சமையல் உப்பு 100 கிராம் வீதம் கலக்க வேண்டும்.
மேய்ச்சல் நிலத்தை உருவாக்குதல்
நஞ்சற்ற அனைத்து இலைதழைகளையும் ஆடுகள் உண்ணும். நடந்து திரிந்து மேயும் பழக்கமுள்ள ஆடுகளுக்கு, ஆண்டு முழுவதும் தீவனம் கிடைக்கும் வகையில் மேய்ச்சல் நிலத்தை உருவாக்க வேண்டும். புரதம் மிகுந்த பல்லாண்டுப் பயிர்களான வேலிமசால், முயல்மசால் மற்றும் சூபாபுல், கிளைரிசிடியா, கல்யாண முருங்கை, உதியன், அகத்தி, கொடுக்காய்ப்புளி, பூவரசு, வாதநாராயணன் போன்ற மரத்தழைகள் ஆண்டு முழுதும் ஆடுகளுக்குக் கிடைக்கும் வகையில் மேய்ச்சல் நிலத்தை உருவாக்க வேண்டும்.
தீவன வங்கி
ஆடுகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்கும் வகையில் தீவன வங்கியை உருவாக்க வேண்டும். 10 பெட்டை மற்றும் 1 கிடா ஆட்டுக்கு, பரண் வீட்டுக்கு அருகில் ஒரு தீவன வங்கியை உருவாக்க அரை ஏக்கர் நிலம் தேவை. இதை நன்கு உழுது 2-3 டன் மட்கிய தொழுவுரத்தைப் போட்டு, நிலத்தின் அமைப்புக்குத் தகுந்து, 20க்கு 10 மீட்டர் பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். பிறகு, 2 அடி இடைவெளியில் வரப்புகளை வடக்கு தெற்காக அமைக்க வேண்டும்.
அவற்றில் ஒரு அடி இடைவெளியில் முதல் மூன்று வரப்புகளில் கினியாப் புல்லையும், அடுத்த வரப்பில் முயல் மசாலையும், அடுத்த மூன்று வரப்புகளில் பலமுறை வெட்டக்கூடிய தீவனச் சோளத்தையும், அடுத்த வரப்பில் தீவனத் தட்டைப் பயிற்றையும், தொடர்ந்து, புல்வகைத் தீவனத்தையும், புரதம் நிறைந்த தீவனங்களையும் வளர்க்க வேண்டும். இந்தப் புல்வகைத் தீவனங்களையும், புரதத்தைத் தரும் தீவனங்களையும் பல்லாண்டுப் பயிராக வளர்த்தால், ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்கும்.
மேலும், நிலத்தைச் சுற்றிச் சூபாபுல், கிளைரிசிடியா, கல்யாண முருங்கை, அகத்தி, வாதநாராயணன், பூவரசு, குமிழ்தேக்கு, வேம்பு போன்ற தீவன மரங்களை வளர்த்தால், மழைக்காலத்தில் இந்தத் தழைகள் உணவாகப் பயன்படும். தீவனப் பயிர்களை 90 நாளில் இருந்து அறுவடை செய்யலாம். இவற்றை நறுக்கி ஆட்டின் எடையில் 10% அளவில் அளிக்க வேண்டும். மழைக்காலத்தில் தீவனப் புற்களை ஆடுகள் விரும்பி உண்ணாது. இக்காலத்தில் மரத்தழைகளை விரும்பி உண்ணும்.
ஆக, மானாவாரி விவசாயிகள் ஆடு வளர்ப்பில் புதிய உத்திகளைக் கடைப்பிடித்தால், குறைந்த நாட்களில் நிறைவான இலாபத்தைப் பெற முடியும்.
முனைவர் கு.சுதாகர்,
க.சப்பாணிமுத்து, முனைவர் எ.முருகன்,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.