கட்டுரை வெளியான இதழ்: மே 2019
பல ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வரும் நிலையில், விவசாயிகள் மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபடுவோரின் வாழ்க்கை ஆதாரமாகக் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளாடு வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாக உள்ளது. இந்த வெள்ளாடுகளை, மேய்ச்சல் முறை, கொட்டில் முறை மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை என, பல்வேறு முறைகளில் வளர்க்கலாம்.
வெள்ளாடு வளர்ப்பில் அதிக இலாபம் பெற வேண்டுமானால், அவற்றின் இனவிருத்தித் திறனை மேம்படுத்த வேண்டும். பல்வேறு சூழல்களில் மேய்ச்சல் நிலம் குறைந்து விட்டதால், ஆடுகளின் உடல் பராமரிப்புக்குத் தேவையான தாதுப்புகள் உள்ளிட்ட சத்துகள் கிடைப்பதில்லை. மேலும், ஒரு மந்தைக்குள் இருக்கும் கிடாக்களையே இனவிருத்திக்குப் பயன்படுத்துவதால், மரபு சார்ந்த குணங்கள் மங்கி விடுகின்றன. அத்துடன் பண்ணையில் குட்டிகளின் இறப்பும் அதிகரித்து விடுகிறது. எனவே, வெள்ளாடு வளர்ப்பில் அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பண்ணையை மேம்படுத்தினால் அதிக இலாபத்தைப் பெற இயலும்.
பொலி கிடாக்கள் பராமரிப்பு
வெள்ளாட்டுக் கிடாக்கள் 12-18 மாதங்களில் இனப் பெருக்கத்துக்குத் தயாராகி விடும். ஒரு கிடாவை நான்கு ஆண்டுகள் வரையில் இனவிருத்திக்குப் பயன்படுத்தலாம். ஆனால், ஒரே கிடாவைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மரபு சார்ந்த குறைகள் ஏற்படும் என்பதால், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி விடுவது நல்லது. இனப்பெருக்கத்துக்குக் கலப்பின ஆடுகளைப் பயன்படுத்துவது நல்லது. அதனால், அதிக உற்பத்தித் திறனுள்ள ஆடுகள் பண்ணையில் இருக்கும். கிடாவுக்குத் தினமும் 250 கிராம் கலப்புத் தீவனமும், 3-4 கிலோ பசுந்தீவனமும் கொடுக்கப்பட வேண்டும்.
இனப்பெருக்க ஆடுகள் பராமரிப்பு
பெட்டையாடுகள் 12-16 மாதங்களில் இனவிருத்திக்குத் தயாராகி விடும். இத்தகைய ஆடுகளுக்குத் தினமும் 150-200 கிராம் கலப்புத் தீவனமும், 3 கிலோ பசுந்தீவனமும் கொடுக்கப்பட வேண்டும். பருவ வயதை அடைந்த ஆடுகள் 19-21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவத்தை வெளிப்படுத்தும். இந்த அறிகுறிகள் 24-48 மணி நேரம் வரை இருக்கும். இந்த ஆடுகள் அடிக்கடி கத்திக்கொண்டே இருக்கும். இனப்பெருக்க உறுப்பு தடித்திருக்கும். வாலை ஆட்டிக்கொண்டே இருக்கும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து கோழை போன்ற திரவம் வழியும்.
இந்த அறிகுறிகளைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும். மந்தையாக வளர்க்கப்படும் பண்ணைகளில் சினைப்பருவத்திலுள்ள பெட்டையாடுகளை, பொலிகிடாக்கள் கண்டறிந்து இனவிருத்தி செய்யும். இதற்காக மந்தைகளில் 20 பெட்டையாடுகளுக்கு ஒரு பொலிகிடா வீதம் வளர்க்க வேண்டும். ஒருசில ஆடுகளை வளர்ப்பவர்கள் செயற்கை முறை கருவூட்டல் செய்து கொள்ளலாம். வெள்ளாடுகளில் இனவிருத்தி ஆண்டு முழுவதும் நடக்கும். கோடையில் கடும் வெப்பம் மற்றும் வறட்சியால், இனவிருத்தித் தன்மை சற்றுக் குறைவாக இருக்கும். நல்ல பராமரிப்பு இருந்தால், இனவிருத்திச் சீராக நடைபெறும்.
சினையாடுகள் பராமரிப்பு
வெள்ளாடுகளில் சினைக்காலம் 152+3 நாட்களாகும். கருவூட்டல் செய்த ஆடுகளை 60 நாட்களுக்குப் பிறகு கால்நடை மருத்துவரிடம் காட்டிச் சினையை உறுதி செய்து கொள்ளலாம். இப்போது 40 நாட்களிலேயே சினையை உறுதி செய்யும் வசதி உள்ளது. சினையாடுகளின் தீவன மேலாண்மை மிக முக்கியமானது. சினையாகி மூன்று மாதத்துக்குப் பிறகு, தினமும் 50 கிராம் கலப்புத் தீவனத்தைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.
முனைவர் ச.மனோகரன்,
முனைவர் ம.பழனிசாமி, முனைவர் த.கீதா, முனைவர் ந.கவிதா, முனைவர் க.சிவக்குமார்,
காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம், சத்தியமங்கலம், ஈரோடு-638402.