கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019
ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும் அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால் சாகிறார். இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் வெறிநோயால் இறக்கின்றனர்.
உலகளவில், தெரு நாய்களை விட வளர்ப்பு நாய்கள் தான் அதிகமாகக் கடிக்கின்றன. காரணம், தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டுவது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் கடைசி முயற்சியாகவே நாய் கடிக்கிறது. போதிய பயிற்சிகளைக் கொடுத்தல் மற்றும் பழகும் விதத்தைக் கற்றுக் கொடுத்தால் நாய்க்கடியைத் தவிர்க்கலாம்.
நாய்க்கடியைத் தவிர்க்க 4 வழிகள்
நாய்க்குப் பயிற்சி அளித்தல். யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தல். நாயின் உடல்மொழியை அறிந்து கொள்தல். நம்மிடம் நாய் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைப்போல, நாயிடம் நாமும் நடந்து கொள்தல்.
பயிற்சி அளித்தல்
பயிற்சி என்பது நமது எண்ணங்களை நாயைப் புரிந்து கொள்ளச் செய்வது. நம்மிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்வதுடன், மற்றவர்களிடமும் அதைப்போல நடந்து கொள்ளச் செய்வது. குட்டியாக இருக்கும் போதே கட்டளைச் சொற்களைக் கற்றுத்தர வேண்டும்.
பயிற்சியைச் சரியாகச் செய்யவில்லை என்பதற்காகத் தண்டிக்கக் கூடாது. மேலும், பயிற்றுநரிடம் நாயை அனுப்பி விட்டு, நீங்கள் வேறு வேலையில் இருப்பதால் பயனில்லை. பயிற்சியின் போது, நீங்களும் நாயுடன் இருக்க வேண்டும்.
பழகும் விதம்
நம்மிடம் நடந்து கொள்ளும் முறையை நாய்க் குட்டிக்குக் கற்றுக் கொடுத்து விட்டால், அது தன்னுடைய உலகம் பாதுகாப்பாக இருப்பதாகப் புரிந்து கொள்ளும். கீழ்ப்படிதல் பயிற்சியைக் கற்றுத் தந்த பிறகு, வீட்டிலுள்ள மற்றவர்களிடம், பூனை, கோழி மற்றும் வீட்டுக்கு வருவோரிடம் பழகும் விதத்தைக் கற்றுத்தர வேண்டும்.
இதைப்போல, சமூகத்தில் எல்லோரிடமும் பழகும் முறையைச் சொல்லிக் கொடுத்து விட்டால், உங்கள் வீட்டுச் செல்லம் யாரையும் கடிக்க முயலாது.
நாயின் உடல் மொழியை அறிதல்
நமது எண்ணங்களை வெளிப்படுத்த, நமக்கு மொழி உதவியாக இருக்கிறது. ஆனால் பேச முடியாத நாய்க்கு அதன் உடல் அசைவுகளே மொழியாகும். அவற்றின் மூலம் தன் எண்ணங்களை நமக்குத் தெரிவிக்கிறது. பேசும் நமக்கே சில நேரங்களில் அங்க அசைவுகள், குரல் மாற்றம் தேவைப்படுகின்றன.
நாயின் அங்க அசைவுகளை நுட்பமாகக் கவனிக்க வேண்டும். முதலில், தனது வாலைப் பின்னங் கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, தனக்கு விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கும். பின்பு நாக்கால் தனது உதடுகளை நக்கித் தெரிவிக்கும்.
அடுத்து, நமது கண்களையே உற்றுப் பார்க்கும். பிறகு, தனது வாலை இருபக்கமும் ஆட்டிக் காட்டும். எனவே, நாயின் அசைவுகளைக் கவனித்துச் செயல்பட்டால், அது கடிப்பதைத் தவிர்க்கலாம்.
நாயிடம் நடந்து கொள்ளும் விதம்
நம்மிடம் நமது நாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படியே நாமும் நாயிடம் பழக வேண்டும். நாய் தூங்கும் போதும், உண்ணும் போதும் அதற்குத் தொல்லை தரக்கூடாது.
வாலைப் பிடித்து இழுப்பது, காதைப் பிடித்து இழுப்பது, தன்மீது குழந்தைகள் உட்கார்வது, அடிப்பது போன்றவற்றை நாய் விரும்புவதில்லை. அதைப்போல, தன் வாயில் வைத்திருக்கும் பந்து, பொம்மை போன்ற பொருள்களைப் பிடுங்குவதும் அதற்குப் பிடிக்காது. எனவே, நாம் பாசத்துடன் வளர்க்கும் நாய், நம்மிடம் நன்றியுடன் இருக்கும். அதனால் நாமும் நாயிடம் அன்போடு இருப்போம்.
மரு.ஏ.ஆர்.ஜெகத் நாராயணன்,
முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, சேலம்.