கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
இந்தியாவில் ரோஜா, முல்லை, சம்பங்கிக்கு அடுத்த இடத்தில் கனகாம்பரம் உள்ளது. குரசான்ட்ரா இன்பன்டிபுளிபார்மிஸ் என்னும் தாவரப் பெயரையும், அகான்தேசியே என்னும் தாவரக் குடும்பத்தையும் சார்ந்தது. இந்தியாவில் 4,000 எக்டரில் கனகாம்பரம் பயிராகிறது. தமிழகத்தில் 1,317 எக்டரில் உள்ள கனகாம்பரச் செடிகள் மூலம் 2,500 டன் பூக்கள் கிடைக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்ப் பகுதிகளில் கனகாம்பரம் அதிகப் பரப்பில் உள்ளது. மழைக்காலம் தவிர்த்து ஆண்டு முழுவதும் பூக்கும். மற்ற முக்கிய மலர்கள் குறைந்துள்ள மாதங்களிலும் பூப்பதால் நல்ல விலை கிடைக்கும்.
பயன்கள்
பெண்கள் தலையில் சூடும் மலராகவே இங்கே கனகாம்பரம் பயன்படுகிறது. இம்மலர் மணமற்று இருப்பினும் இதன் கவர்ச்சியான நிறம், குறைந்த எடை, மற்ற மலர்களை விட வாடாமல் இருக்கும் சிறப்புத் தன்மையால், வணிக முக்கியத்துவம் பெறுகிறது. தனியாகவும் மற்ற மலர்களுடன் சேர்த்தும், மாலை, மலர்ச்சரங்களைத் தொடுக்க இம்மலர்கள் உதவுகின்றன.
இரகங்கள்
கனகாம்பர மலர்களின் நிறத்தைப் பொறுத்தே இரகங்கள் அமைகின்றன. ஆரஞ்சு, லூட்டியா மஞ்சள், செபாக்குலிஸ் சிவப்பு, டெல்லி கனகாம்பரம், அர்கா அம்பரா, அர்கா கனகா, அர்கா ஸ்ரேயா, அர்கா ஸ்ரவயா ஆகிய இரகங்கள் சாகுபடியில் உள்ளன. இவற்றில் டெல்லி கனகாம்பரம் மட்டும் வேர்க்குச்சிகள் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் இரகங்களில் அதிகளவில் விதைகள் கிடைப்பதால், அவை விதைகள் மூலம் சாகுபடி செய்யப்படுகின்றன. கனகதாரா, விஜயகனகாம்பரம், இராஜ், சுபாசு, இலட்சுமி, நீலாம்பரி, மருவூர் அரசி ஆகியன தனியாரால் வெளியிடப்பட்டவை.
சாகுபடியும் நாற்றங்காலும்
விதைகள், வேர்விட்ட குச்சிகள் மூலம் கனகாம்பரம் சாகுபடி செய்யப்படுகிறது. எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவை. இவற்றை விதைக்க நான்கு சென்ட் நிலம் தேவை. மேட்டுப் பாத்திகளில் 1 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைத்து, மணலால் மூடி பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். முளைக்கும் வரை காய்ந்த இலைகள், வைக்கோல் மூலம் பாத்திகளை மூடி வைக்க வேண்டும். இந்த விதைகள் விரைவில் முளைப்புத்திறனை இழந்து விடுவதால், விதைகளைப் பிரித்ததும் விதைத்துவிட வேண்டும்.
டெல்லி கனகாம்பரத்தில் விதைகள் வராது. ஆகையால், இது வேர்க்குச்சிகள் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. மழைக்காலத்தில் நுனிக்குச்சிகளை 1,000 பி.பி.எம். அளவில் ஐ.பி.ஏ. வளர்ச்சி ஊக்கியில் நனைத்து நட்டால் வேர்ப்பிடிப்புத் தன்மை மிகும்.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை
வடிகால் வசதியுள்ள, நீர் தேங்காத மணல் கலந்த வண்டல் மண், செம்மண்ணில் கனகாம்பரம் நன்கு வளரும். நிலத்தின் அமில- காரத்தன்மை 6-7.5 இருக்க வேண்டும். இதில் கூடவோ குறையவோ இருந்தால், செடிகள் நன்கு வளராமல் வெளிரி விடும். அதனால் மண்ணை ஆய்வு செய்து நூற்புழுத் தாக்குதல் இல்லாத நிலத்தில் சாகுபடி செய்ய வேண்டும்.
செடிகள் ஓரளவு நிழலைத் தாங்கி வளரும். எனினும், குறைந்த வெப்பம் மற்றும் பனியைத் தாங்காது. இப்பயிரின் நல்ல வளர்ச்சிக்கு 30-35 டிகிரி செல்சியஸ் வெப்பம் உகந்தது. இரவு வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ்க்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
நிலத் தயாரிப்பும் நடவும்
நிலத்தை 4-5 முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 50 டன் தொழுவுரத்தை இட வேண்டும். பின்னர் 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகளை அமைக்க வேண்டும். இவற்றில் 45-50 நாள் நாற்றுகளை பிடுங்கி 30 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். இந்த இடைவெளிப்படி ஒரு எக்டருக்கு 22,000 நாற்றுகள் தேவைப்படும். நாற்றுகளைப் பூசண நோய் தாக்காமல் இருக்க, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் எமிசான் வீதம் கலந்த கரைசலில் வேர்களை நனைத்து நட வேண்டும். ஜுலை-நவம்பர் காலம் கனகாம்பரச் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. நடவு நீரைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர் நீர் கொடுக்க வேண்டும். பிறகு தேவைக்கேற்ப நீர் விடலாம்.
உரம்
50 கிலோ யூரியா, 100 கிலோ சூப்பர் பாஸ்பேட், 60 கிலோ பொட்டாஷை, நட்ட 3, 9, 15 ஆகிய மாதங்களில் இட வேண்டும். களையெடுப்பு, உரமிடுதல், மண்ணணைப்பு ஆகிய வேலைகளை ஒரே நேரத்தில் செய்தால் சாகுபடிச் செலவு குறையும். டெல்லி கனகாம்பரச் செடிகளுக்கு, நட்ட 30 நாட்கள் கழித்து எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 40 கிலோ தழைச்சத்தை இட வேண்டும். பிறகு 90 நாட்கள் கழித்து, 40:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இட வேண்டும். நிலத்தில் களை இருக்கக் கூடாது. உரமிடும் முன் களைகளை நீக்குதல் நல்லது.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சிகள்: வெள்ளை ஈக்கள், செதில் பூச்சிகள் கனகாம்பரச் செடிகளைத் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 0.01 % அளவில் பாசலோன் மருந்தைத் தெளிக்கலாம். சிறியளவில் தாக்கும் பூங்கொத்துத் துளைப்பான், காய்ப்புழு, நாவாய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்த, 0.1% கார்பரில் கலவையைத் தெளிக்கலாம். அசுவினிகள் அதிகமாக இருந்தால் அல்லது தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமீத்தோயேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.
நூற்புழுக்கள் தாக்கிய செடிகள் மஞ்சள் இலைகளுடன் வளர்ச்சிக் குன்றியிருக்கும். முற்றிய நிலையில், இலைகளும் பூக்களும் சிறிதாகி மகசூல் பெருமளவில் குறையும். வேர்களில் முடிச்சுகள் இருக்கும். எனவே, நூற்புழுத் தாக்கமுள்ள நிலத்தைத் தவிர்க்க வேண்டும். நாற்றங்காலில் நூற்புழுக்களின் அறிகுறிகள் தென்பட்டால், சதுர மீட்டருக்கு 25 கிராம் போரேட் வீதம் இட வேண்டும். நிலத்தில் எக்டருக்கு 25 கிலோ பியூரிடான் குருணையை இட வேண்டும். வேப்பம் புண்ணாக்கையும் இடலாம்.
நோய்கள்
வாடல் நோய்: இந்தப் பூசண நோயால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் மஞ்சளாகி வாடி உதிர்ந்து விடும். மேலும், இச்செடிகள் நூற்புழுத் தாக்குதலுக்கும் உள்ளாகும். எனவே, நோய் அறிகுறிகள் தெரிந்ததும் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் எமிசான் வீதம் கலந்த கலவையைச் செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
அறுவடை
70-75 நாட்களில் பூக்கத் தொடங்கி விடும். மலர்க்கொத்தின் அடியிலிருந்து பூக்கும். ஒரே மட்டத்தில் எதிரெதிரே உள்ள மலர்களை ஒரே நாளில் பறிக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பூக்களைப் பறிக்க வேண்டும். இரண்டு நாட்கள் வரை பூக்கள் வாடாமல் இருக்கும். ஒரு பூங்கொத்து மலர்ந்து முடிய 15-20 நாட்களாகும். பூத்து முடிந்த பழைய மலர்க்காம்புகளை அகற்றிவிட வேண்டும். மலர்களை அதிகாலையில் பறிப்பது நல்லது. ஒரு கிலோவில் 15,000 பூக்கள் இருக்கும். பக்கக் கிளைகளில் புதிய பூங்கொத்துகள் உருவாகும். 2-3 ஆண்டுகள் பலன் கொடுக்கும். அதன் பின் மகசூல் குறைவதால் அகற்றிவிட வேண்டும்.
மகசூல்
எக்டருக்கு 2,000 கிலோ ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு மலர்கள் கிடைக்கும். டெல்லி கனகாம்பரம் 2,800 கிலோ பூக்களைக் கொடுக்கும்.
மேலும் விவரங்களுக்கு: 94437 78075.
முனைவர் சி.இராஜமாணிக்கம்,
முனைவர் ஆ.பியூலா, முனைவர் வே.சுவாமிநாதன், தோட்டக்கலைத் துறை,
வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.