வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். குறைந்த நீரைக் கொண்டு, குறிப்பாக மழைநீரை மட்டுமே பயன்படுத்தி, நிறைந்த வருமானத்தை விவசாயிகள் ஈட்ட முடியும். இது இயலுமா என்று நினைக்கத் தோன்றும் தான். ஆனால் முடியும் என்பதே உண்மை நிலை. தொடக்கம் சற்றுக் கடினமாக இருந்தாலும் முடிவு சுகமாகத் தான் இருக்கும்.
ஒரு ஏக்கர் போதும். இதைச் சுற்றி, செலவில்லாத, பயனுள்ள இயற்கை வேலி. இதற்குச் சீமையகத்தி, கல்யாண முருங்கை, சூபாபுல், கொடுக்காய்ப் புளி, மருதாணி போன்றவை பயன்படும். இந்த வேலிப் பயிர்கள் ஆடுகளுக்குத் தீவனம்; மூலிகை. கொடிவகைக் காய்கறிகளை இதன்மீது படர விடலாம். இப்படிப் பல வழிகளில் இதன் பயன்பாடு இருக்கும்.
அடுத்து, கொய்யா, எலுமிச்சை, மா, நெல்லி, சப்போட்டா, புளி, நாவல், கொடுக்காய்ப்புளி போன்ற பழவகைக் கன்றுகளை நட்டால், ஓராண்டில் நிழலைக் கொடுத்து விடும். அடுத்து இரண்டு மூன்று ஆண்டுகளில் பழங்களைக் கொடுக்கத் தொடங்கி விடும். கிளையோடாத தேக்கு போன்ற மரங்களையும் இதற்குள் வளர்க்கலாம். பலவகைப் பழ மரங்களை வளர்த்தால், தொடர் வருமானம் கிடைக்கும்; விற்பனையை விவசாயிகளே மேற்கொள்ள முடியும்.
இப்போது உள்ளே சிறிய முதலீட்டில் ஐந்து நாட்டுக் கோழிகளையும் ஒரு சேவலையும் வாங்கி விட்டால், இரண்டு அடைக்காலத்தில் குறைந்தது நூறு கோழிகளை உருவாக்கி விடும். இந்தக் கோழிகளுக்கான தீவனமாக, அங்கிருக்கும் புல் பூண்டுகள், செடி கொடிகள், புழு பூச்சிகள், கரையான்கள் பயன்படும். இந்த நூறு கோழிகள் மூலம் அன்றாடம் ஐம்பது முட்டைகள் கிடைத்தாலும் போதும். அன்றாடம் ஒரு கிலோ காளான் கிடைக்கும் வகையில் காளான் குடிலை அமைத்து விட்டால் அதிலும் வருமானம்.
காடைகளை வளர்த்தால் 25 நாளில் வருமானம். இந்த நிலத்துக்குள் நன்கு இனப்பெருக்கம் செய்யும் நான்கைந்து வெள்ளாடுகளை வாங்கி விட்டால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல ஆயிரங்கள் வருமானம். இவற்றுக்கான தீனியை வேலிச்செடிகளே கொடுத்து விடும். சினைப் பருவத்தில் இரண்டு கிடேரிகளை வாங்கிச் சினைப்படுத்தி விட்டால், பத்தே மாதத்தில் ஆண்டு வருமானம் பல ஆயிரங்கள். இன்னும் வான்கோழி, கினிக்கோழி, முயல் எனப் பயனுள்ள உயிரினங்களை வளர்த்தால் வருமானம் கூடிக்கொண்டே இருக்கும்.
இங்கே தேவைப்படுவது இந்த உயிர்களுக்கான குடிநீர் மட்டுமே. வாய்க்காலில் பாய்ச்ச நீரில்லை என்னும் கவலை வேண்டாம். தொட்டியில் பெருக நீரிருந்தால் போதும், பொருளாதார வசதியுடன் வளமாக வாழலாம். இங்கே கூறப்பட்டிருப்பது, விவசாயிகள் பொருளாதாரத் தன்னிறைவை அடைவதற்கான முன்னுரை மட்டுமே. இதை அடிப்படையாகக் கொண்டு முயன்றால், முன்னேற்றம் மட்டுமே முன்னே நிற்கும். கலப்புப் பண்ணையம்; உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம்.
ஆசிரியர்