நமது நாடு உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ், வணிக நோக்கிலான காப்புரிமை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட பிறகு; பயிர் இனப்பெருக்கம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உழவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு, பயிர் இரகப் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமைச் சட்டத்தை 2001 ஆம் ஆண்டில் உருவாக்கி, 2007 ஆம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகளும், தாங்கள் உருவாக்கிய அல்லது பாதுகாத்து வரும் இரகங்களைப் பதிவு செய்ய முடியும். முதலில், நமது பாரம்பரிய வேளாண் நுண்ணறிவு, அறிவுசார் சொத்து உரிமையாகக் கருதப்படவில்லை. வளர்ந்த நாடுகள், வணிகம் மற்றும் தீர்வுக்கான பொது உடன்பாட்டுக் குழு (GATT) மற்றும் உலக வர்த்தக நிறுவனம் போன்ற அமைப்புகள், 1980 ஆண்டிலிருந்து இந்தியாவை வலியுறுத்தியதால், பயிர் இரகங்களும் அறிவுசார் சொத்து உரிமையின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்தச் சட்டத்தின் மூலம் ஒரு விவசாயியோ அல்லது பல விவசாயிகளோ குழுவாக இணைந்து, தங்களது பயிர் இரகத்தைப் பதிவு செய்ய உரிமை கோரலாம்.
உலக வர்த்தக நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்து உரிமையின் கீழ், காப்புரிமை, வணிகச் சின்னம், படைப்புரிமை போன்ற அனைத்தும் உலகளவில் கட்டாயமாக்கப்பட்டன. இந்தச் சட்டத்தின் 27.3 இன் கீழ், பயிர் இரகங்களும் கொண்டு வரப்பட்டன. பிறகு, ஒவ்வொரு நாடும் அதனதன் தேவைக்கேற்ப, பயிர் இரகங்களைக் காப்புரிமையாக அல்லது அதனதன் சமுதாயத்துக்கான தனிச் சட்டமாக அல்லது இரண்டையும் சேர்த்துக் காத்துக் கொள்ளலாம் என மாற்றி அமைக்கப்பட்டது.
இவற்றில், இரண்டாவது வழியான, சமுதாயத்துக்கான தனிச்சட்டம் என்னும் முறையை இந்தியா தேர்ந்தெடுத்தது. இது, பயிர் வல்லுநர்க்கான உரிமை என்னும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
இதற்கான சட்ட வரைமுறை 1993 ஆம் ஆண்டில் தொடங்கி பலமுறை மாற்றி அமைக்கப்பட்டது. பிறகு, 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிர் இரகங்களைப் பாதுகாத்தல் மற்றும் விவசாயிகளின் உரிமை என்னும் சட்டமாக இயற்றப்பட்டது. 2007 ஆம் ஆண்டு சட்டமாக நடைமுறைக்கு வந்த பின், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பயிர் இரகங்களைப் பதிவு செய்யும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முக்கிய நோக்கங்கள்
புதிய பயிர் இரகங்களை உருவாக்கத் தேவையான மரபணுப் பயிர்களைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்தி, சரியான காலத்தில் தருவதற்கான உரிமைகளை வழங்குவது; அந்த உரிமைகளைப் பாதுகாத்தல். புதிய பயிர் இரகங்களை உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்துதல். தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதற்கு ஊக்கப்படுத்துதல்.
விதைத் தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தி தரம் மிகுந்த விதைகளை, தகுந்த காலங்களில் விவசாயிகளுக்கு வழங்குதல். நம் நாட்டின் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துதல்.
செயல்பாடுகள்
புதிய பயிர் இரகங்கள் உருவாக்கத்தை ஊக்கப்படுத்தல். அவற்றை உருவாக்கும் வல்லுநர்களுக்கு உரிய உரிமத்தை வழங்குதல். உழவர்கள் மற்றும் இரக இனப்பெருக்க ஆய்வாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது. சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடப்பிலுள்ள புதிய பயிர் இரகங்களைப் பதிவு செய்தல்.
பதிவு செய்யப்பட்ட இரகங்களுக்கு (Characterization) பண்புருவாக்கம் செய்தல் மற்றும் (Documentation) ஆவணப்படுத்துதல். உழவர்களின் இரகங்களை ஆவணப்படுத்தல், தொகுப்பு அட்டவணை மற்றும் பெயர்ப் பட்டியல் அமைத்தல். அனைத்துப் பயிர் இரகங்களுக்கும் கட்டாயப் பெயர்ப் பட்டியல் அமைக்க வழிவகை செய்தல். இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இரகங்களின் விதைகள் உழவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்தல்.
இரக விதைகளை உற்பத்தி செய்வதற்குச் சட்டப்படி உரிமை கொண்ட இனப்பெருக்காளர் அல்லது வேறு எவரேனும் இரக விதை உற்பத்திக்கும், விற்பனைக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், மற்றவர்களுக்கு அந்த இரகங்களின் விதைகளை உற்பத்தி செய்யக் கட்டாய உரிமை வழங்குதல்.
பயிர் இரகங்கள் குறித்து, இந்தியாவில் அல்லது வேறு நாடுகளில் உள்ள இரகங்களைப் படிப்படியாகத் தோற்றுவித்தல். பயிர் இரகம் உருவாக்கத்தில் எவரேனும் எப்போதாவது பங்களிப்புச் செய்திருந்தால், அந்தத் தகவல்களைச் சேகரித்து, தொகுத்துப் பதிப்பித்தல். பயிர் இரகப் பதிவேட்டை ஏற்படுத்தி அதனைப் பராமரித்தல்.
இரகங்களைப் பதிவு செய்வதற்கான தகுதிகள்
பதிவு செய்யப்பட வேண்டிய பயிர் இரகங்கள் புதுமையாக, தனித்தன்மை வாய்ந்ததாக, சமச்சீர்த் தன்மையுடன், நிலையானதாக இருக்க வேண்டும். இவ்வகையில், புதிய பயிர் இரகம், நடப்பிலுள்ள இரகம், உழவர்களின் இரகம், மரபு மாற்றப்பட்ட இரகம், அடிப்படையாகத் தருவிக்கப்பட்ட இரகம் ஆகியன பதிவு செய்யப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்
இரக இனப்பெருக்காளர் என உரிமை கொண்டாடுபவர் அல்லது இரக இனப்பெருக்காளரின் வாரிசுதாரர்கள் அல்லது விண்ணப்பம் செய்வதற்காக இரக இனப் பெருக்காளரிடம் இருந்து உரிமை மாற்றம் பெற்றவர் அல்லது இரக இனப்பெருக்காளர் என உரிமை கொண்டாடும் உழவர் அல்லது உழவர்களின் குழு அல்லது உழவர்களின் சமூகம் அல்லது குறிப்பிட்ட நபரிடம், அவர் சார்பாக விண்ணப்பிக்க அதிகாரம் பெற்றவர் அல்லது இரக இனப்பெருக்காளர் உரிமை கொண்டாடும் பல்கலைக் கழகம் அல்லது பொது நிதி உதவியுடன் இயங்கும் வேளாண் நிறுவனம். இவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ சேர்ந்து விண்ணப்பிக்கலாம்.
இப்படி இரகங்கள் பதிவு செய்யப்படுவதால், பதிவு செய்பவர்கள் சிறந்த பயிர் வல்லுநராகவும், ஆராய்ச்சியாளராகவும் அங்கிகாரம் பெறுகின்றனர். அறிவுசார் சொத்து உரிமைகள், காப்புரிமை போன்ற சட்டங்கள் மத்தியில் விவசாயிகளை, இரகங்களைப் பாதுகாக்க, இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டு இருப்பது மிகவும் அவசியமானது ஆகும்.
குறிப்பு: தாவர வகைப் பயிர் இரகங்களுக்கான பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கான உரிமைச் சட்டம் 2001 -பயிற்சி மற்றும் விளக்கக் கையேடு -அவினாசிலிங்கம் வேளாண்மை அறிவியல் நிலையம், கோயமுத்தூர்.
முனைவர் ஆ.தங்க ஹேமாவதி,
பயறுவகைத் துறை, முனைவர் ச.கவிதா, விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் -641 003.