வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். சாகுபடி நிலத்துக்கு இயற்கை உரங்கள் மிகவும் அவசியம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆடு மாடுகளின் சாணம், பயிர்க் கழிவுகள், மரத்தழைகள், உரத்துக்காக வளர்க்கப்படும் பசுந்தாள் பயிர்கள் ஆகிய எல்லாமே இயற்கை உரங்களில் அடங்கும்.
இரசாயன உரங்களின் தாக்கம், எளிதாக வேலை முடிதல் போன்ற காரணங்களால், இந்த இயங்கை உரங்கள் எல்லாமே நிலத்துக்குக் கிடைத்து வந்த காலம் மாறி விட்டது. அதனால், நிலமும் விளைவிக்கும் ஆற்றலை இழந்து வருகிறது. சத்தற்ற நிலத்தில் விளையும் பயிர்கள் பல்வேறு பூச்சி, நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
இவற்றில் இருந்து மீண்டு நல்ல விளைச்சலைப் பெற வேண்டுமானால், தேவையான அளவில் இயற்கை உரங்களை நிலத்தில் இட வேண்டும். தொழுவுரம் போதியளவு கிடைக்காத நிலையில், ஒவ்வோர் ஆண்டும் பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து மடக்கி விட்டு நிலத்தில் மட்கச் செய்ய வேண்டும். இவ்வகையில், சணப்பை, தக்கைப்பூண்டு, சீமையகத்தி, சித்தகத்தி, கொளுஞ்சி போன்றவற்றைப் பயிரிடலாம். இவை நெல் வயலுக்கு ஏற்ற அருமையான உரப்பயிர்கள் ஆகும்.
இந்தப் பயிர்கள் நிலத்தில் விரைவாக மட்கும்; பயிருக்கு வேண்டிய தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தைத் தரும்; போரான், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு, மாலிப்டினம், சுண்ணாம்பு, சிலிக்கான் போன்ற நுண் சத்துகளையும் தரும்; மண்ணில் பயன்படா நிலையில் இருக்கும் மணிச்சத்தைப் பயிருக்குக் கிடைக்கச் செய்யும்.
மண்வளம் மற்றும் பௌதிகத் தன்மையை மேம்படுத்திப் பயிர்கள் சிறப்பாக வளர உதவும்; வேர் முடிச்சுகளைக் கொண்ட உரப்பயிர்கள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணுக்குக் கொடுக்கும்; பசுந்தாள் உரமிட்ட நிலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும்; மண்ணிலுள்ள நுண்ணுயிர்களை நன்கு வளர வைத்து மண்வளத்தைப் பெருக்கும்.
நிலத்தின் தன்மையை மேம்படுத்தி, பயிர்களுக்குச் சுழற்சி முறையில் சத்துகள் தொடர்ந்து கிடைக்கச் செய்யும்; மண்ணின் ஈரப்பிடிப்பைக் கூட்டும்; செயற்கை உரங்களை இடுவதால் உண்டாகும் பெரும்பாலான சிக்கல்களைத் திருத்தியமைக்கும்; களர் உவர் நிலங்களை நல்ல நிலங்களாக மாற்றும்.
தக்கைப்பூண்டில் உள்ள வேர் முடிச்சுகள், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து நிலத்தில் சேர்க்கும். விதைத்து 45 நாட்களில் இப்பயிரை மடக்கி உழுதால், எக்டருக்குச் சுமார் 25 டன் வரை பசுந்தாளும், 219 கிலோ வரை தழைச்சத்தும் கிடைக்கும்.
இவையனைத்தும் வேளாண் தகவல்களாக மட்டுமே இருந்து விடாமல் இருக்க, நாம் கடைப்பிடித்து வந்த இந்த வேளாண் உத்திகளை மீண்டும் நடப்புக்குக் கொண்டு வர வேண்டும். இது நமது எண்ணம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் வேளாண்மை செழிப்பதற்கான வழியுமாகும்.
ஆசிரியர்