வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆண்டுகளைக் கடந்து கொண்டே இருக்கிறோம்; இதன் மூலம் புதுப்புது படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டே இருக்கிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்திக் கொண்டிருந்த நச்சுக் கிருமியின் தாக்கம் குறைந்து விட்டது என்றிருந்த நிலையில், மீண்டும் பெருவேகம் எடுத்துப் பரவி வருகிறது. இதிலிருந்து மீளும் முறைகளைக் கவனத்தில் கொண்டு நாம் இயங்க வேண்டும்.
அதைப்போல, கடந்த பருவமழைக் காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், நிலத்தடி நீர் மட்டம் பரவலாக உயர்ந்துள்ளது. நிறைய நீர் இருக்கிறது என்பதற்காக அதை அதிகளவில் செலவழித்து வீணாக்காமல், அளந்து செலவழித்து விவசாயத்தில் நல்ல மகசூலை எடுக்க வேண்டும்.
பாசனநீரைத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டுமானால், நவீனப் பாசன உத்திகளை விவசாயிகள் அனைவரும் செயல்படுத்தியாக வேண்டும்.
சொட்டுநீர், தெளிப்பு நீர் போன்ற நவீனப் பாசன வசதிகளை நிலத்தில் அமைக்க, அரசாங்கம் மூலம் நிதியுதவி கிடைக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டால், சீரான மற்றும் தரமான மகசூலைப் பெற முடியும். மேலும், பல்லாண்டுப் பயிர்களைப் பயிரிட்டால் உழவடைச் செலவுகளைக் குறைக்க முடியும்.
ஏனெனில், போதியளவில் வேலையாட்கள் கிடைக்காத இன்றைய நிலையில், பல்லாண்டுப் பயிர் சாகுபடி மிகவும் அவசியமாகும்.
குறிப்பாக, நிலத்தின் ஒரு பகுதியில் அல்லது நிலம் முழுவதும் மரங்களை வளர்த்தால், அங்கே ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைத்து விடலாம். இன்றைய விவசாயத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது ஒவ்வொரு விவசாயிக்கும் இலக்காக இருக்க வேண்டும்.
ஆடு, மாடு, கோழி, மீன், முயல், வாத்து, வான்கோழி, கினிக்கோழி, நாய் என, அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப இவற்றை ஒன்றாக வளர்க்கும் போது, நாள் வருவாய், வார வருவாய், மாத வருவாய், ஆண்டு வருவாய் என்று பல வழிகளில் வருவாயை விவசாயிகள் அடைய முடியும்.
நமது முன்னோர்கள் காலத்தில் கோழியில்லாத வீடு இருக்காது, ஆடு இல்லாத வீடு இருக்காது, பசு, எருமை இல்லாத வீடு இருக்காது, உழவு மாடுகள் இல்லாத வீடு இருக்காது. குறைந்தது ஒரு மாமரம் அல்லது கொடுக்காய்ப்புளி மற்றும் புளியமரம் இல்லாத தோட்டம் இருக்காது.
மீன்கள் இல்லாத விவசாயக் கிணறுகள் இருக்காது. கால ஓட்டத்தில் இவை அனைத்தையும் செய்ய மறந்ததனால் நமது தற்சார்பு வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம். இவற்றை மீண்டும் நடப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்பதைத் தான், ஒருங்கிணைந்த பண்ணையம் என்னும் புதிய பெயரில் நவீன அறிவியல் வலியுறுத்துகிறது. செயலுக்குக் கொண்டு வருவோம்; செழிப்பாக வாழ்வோம்.
ஆசிரியர்