இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

நாட்டுக்கோழி

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019

ன்றைய சூழலில் வீட்டிலிருந்து கொண்டே சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அவற்றில் நாட்டுக்கோழி வளர்ப்பும் ஒன்று. ஆர்வமுள்ள அனைவரும் நாட்டுக்கோழி வளர்ப்பை, பகுதி நேரத் தொழிலாகச் செய்யலாம். ஆட்டிறைச்சி, கறிக்கோழி இறைச்சி, மீன் என இறைச்சி வகைகள் இருந்தாலும், எல்லோரும் விரும்புவது நாட்டுக்கோழி இறைச்சி, முட்டையை. ஆனால், போதுமான அளவில் உற்பத்தி இல்லை. எனவே, குறைந்த செலவில் அதிக இலாபந்தரும் இத்தொழிலை முறையாகச் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

சிறப்புகள்

நாட்டுக்கோழிகள் வீட்டுக்கொல்லையில், எஞ்சிய உணவுகளை, பூச்சி, புழுவை உண்டு வாழும். இறைச்சிக் கோழியில் இருப்பதை விட, நாட்டுக்கோழி இறைச்சியில் கொழுப்பு குறைந்து, புரதம் கூடுதலாக உள்ளது. நன்மை தரும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. எனவே, குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் பெறுதல், வீட்டுத் தேவைக்கான முட்டை, இறைச்சிக்காகப் பயன்படுத்துதல், உடனடி பணத் தேவையைச் சரி செய்தல் போன்றவற்றின் அடிப்படையில் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

நாட்டுக்கோழி இனங்கள்

இந்தியாவில் 18 கோழியினங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் அசீல், சிட்டகாங், பாஸ்ரா, கடக்நாத் என்னும் கருங்கால் நாட்டுக்கோழிகள் புறக்கடை முறையில் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன.

உயர்வகை நாட்டுக்கோழிகள்

நந்தனம் கோழி ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்ட நந்தனம்1, நந்தனம்2 கோழிகள், ஆந்திரத்தில் உருவாக்கப்பட்ட வனராஜா கோழி, பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட கிரிராஜா, சுவர்ணதாரா கோழிகள் புறக்கடையில் வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றவை.

வளர்ப்பு முறைகள்

புறக்கடையில் மேய்ச்சல் முறையில் வளர்ப்பது. இதில் போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், நீர் கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும். கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் ஒரு சென்ட் நிலத்தில் 200 கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் புழு, பூச்சி, தானியங்கள், இலைதழைகளை உண்டு வாழும். இது மிததீவிர முறையாகும். தீவிர முறை என்பது, தரைக்கூண்டு அல்லது பரண் மேல் வளர்ப்பது. இம்முறையில் ஒரு கோழிக்கு ஒரு சதுரடி இடம் தேவை.

முட்டை உற்பத்தி

நாட்டுக்கோழிகள் பெரும்பாலும் முற்பகலில் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து முட்டையிடும். இவை இரவில் அடையும் இடத்தில் அல்லது கொட்டகையில் மூங்கில் கூடைகளில் காய்ந்த உமி, மரத்தூள், வைக்கோல் போன்ற ஒன்றை, நன்கு பரப்பி வைத்தால் அங்கே முட்டைகளை இடப் பழகி விடும். முட்டையிடும் முன்பும், பின்பும் கோழிகள் ஒருவிதச் சத்தத்தை எழுப்பும். இதைக் கேவுதல் என்பார்கள். ஒரு கோழி 10-20 நாட்களுக்குத் தொடர்ந்து முட்டையிடும்.

குஞ்சுப் பொரிப்பான்

தேவையான வெப்பம், ஈரப்பதத்தை முட்டைகளுக்குக் கொடுத்து, குஞ்சுகளைப் பொரிக்கும் இயந்திரம் இது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று அடை வைப்பான், இன்னொன்று பொரிப்பான். தேவைக்கேற்ப நூறு முதல் ஒரு இலட்சம் முட்டைகள் வரையில் குஞ்சுகளைப் பொரிக்கும் இயந்திரங்கள் உள்ளன. பண்ணையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ற பொரிப்பானை வாங்கி, அதைச் செயல்படுத்தும் முறையைக் கால்நடை மருத்துவர் மூலம் அறிந்து பயன்படுத்தலாம்.

குஞ்சுகளைப் பெறுவதற்கு முன் கொட்டகையில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒரு அடைப்பானில் 250-300 குஞ்சுகளை வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்ஹீட் வெப்பமும், பின் வாரந்தோறும் 5 பாரன்ஹீட் வீதம் வெப்பத்தைக் குறைத்தும், குஞ்சுப் பருவத் தீவனத்தைக் கொடுத்து வளர்க்க வேண்டும். குடிப்பதற்கு ஆற வைத்த வெந்நீரைக் கொடுக்க வேண்டும்.

வளர் பருவக் கோழிகள் (8-18 வாரம்)

இப்பருவத்தில் கொடுக்கப்படும் தீவனத்தில் எரிசக்தியின் அளவு 2,700 கிலோ கலோரி, 8%க்கு மிகாமல் நார்ச்சத்து இருக்க வேண்டும். 17 ஆம் வாரத்தில், பேன், செல் போன்ற ஒட்டுண்ணிகள் இருந்தால், அவற்றை ஒழிப்பதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 1-2 மில்லி டெல்டா மெத்திரின் வீதம் கலந்து, கோழிகளின் தலைப்பகுதி தவிர்த்து உடலை முக்கியெடுக்க வேண்டும். கொட்டகையிலும் தெளிக்க வேண்டும். இதை வெய்யில் அடிக்கும் மதிய வேளையில் செய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்தால் கோழிகளுக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி, நோயெதிர்ப்பு மருந்தை நீரில் கொடுக்க வேண்டும்.

முட்டைப் பருவக் கோழிகள் (18 வாரம் முதல்)

ஒரு கோழி ஓராண்டில் 60-80 முட்டைகளை இடும். ஒரு பருவத்தில் 12-18 முட்டைகள் கிடைக்கும். கலப்பின நாட்டுக்கோழியான நாமக்கல் கோழி-1 240-280 முட்டைகளை இடும். இப்பருவத்தில் 18% புரதம், 2,700 கிலோ கலோரி எரிசக்தியுள்ள தீவனத்தைக் கொடுக்க வேண்டும். முட்டைக்கோழி தினமும் 240-300 மில்லி நீரைக் குடிக்கும்.

தீவனப் பராமரிப்பு

தினமும் சுத்தமான உணவையும் நீரையும் கொடுக்க வேண்டும். நீரிலுள்ள கிருமிகளை அழிக்க, 100 லிட்டருக்கு 5 கிராம் வீதம் பிளீச்சிங் பொடியைக் கலந்து 12 மணி நேரம் கழித்துக் கொடுக்க வேண்டும். புறக்கடைக் கோழிகள் வீட்டைச் சுற்றி மேய்ந்து உணவைத் தேடிக் கொள்ளும். இதனால், சில நேரங்களில் தேவையான சத்துகள் கிடைக்காமல் பாதிக்கப்படும் கோழிகளின் உடல் எடை குறையும். இந்தக் கோழிகளுக்குத் தினமும் 30-70 கிராம் அடர் தீவனத்தை அளித்தால் உற்பத்தித் திறன் கூடும். இளம் குஞ்சுகளுக்கு முதல் 2 வாரத்துக்குக் குஞ்சுப்பருவத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.

ஒரு கிலோ அடர் தீவனத்தைத் தயாரிக்க, தானியங்கள் 500 கிராம், தவிடு 300 கிராம், புண்ணாக்கு 150 கிராம், தாதுக்கலவை 20 கிராம், உயிர்ச்சத்துக் கலவை 10 கிராம், சாதா உப்பு 20 கிராம் தேவை. முட்டைக் கோழியாக இருந்தால் இந்தக் கலவையுடன் 50 கிராம் கிளிஞ்சல் தூளைச் சேர்க்க வேண்டும். எளிய முறையில், குறைந்த செலவில் பானைக் கரையான், அசோலாவை உற்பத்தி செய்து கொடுத்தும், புரதக் குறையைச் சரி செய்யலாம்.

நோய் மேலாண்மை

கோழிகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது வெள்ளைக் கழிச்சல். கோடையிலும் குளிர் காலத்திலும் ஏற்படும் பருவ மாற்றத்தால் இந்நோய் கோழிகளைத் தாக்கும். இதைக் கொக்கு நோய் என்றும் கூறுவர். இந்நோய் தாக்கிய கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். அதனால் உணவும் நீரும் எடுக்காமல், வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும். எச்சம் இடும்போது ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும். ஒரு இறக்கை செயலிழந்து தொங்கும். தலை திருகிக் கொள்ளும். இறந்த கோழியைச் சோதித்தால் இரைப்பையில் இரத்தக் கசிவு இருக்கும்.

வாய்வழிக் குருணைத் தடுப்பு மருந்து, மூலிகை மருத்துவம்

வெள்ளைக் கழிச்சல் வராமல் தடுக்கத் தடுப்பூசியைப் போட வேண்டும். தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், கோழி வளர்ப்போர் எளிதாகக் கையாளும் வகையில், வாய்வழிக் குருணை மருந்தைத் தயாரித்துள்ளது.

மூலிகை மருத்துவம் மூலமும் குணப்படுத்தலாம். சின்னச் சீரகம் 10 கிராம், கீழாநெல்லி 50 கிராம், மிளகு 5 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், வெங்காயம் 5 பல், பூண்டு 5 பல் முதலியவற்றை நன்றாக அரைத்து, தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கலாம். மிகவும் பாதித்த கோழிகளுக்குச் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொடுக்கலாம்.

விற்பனை

நாட்டுக்கோழிகளை 3-4 மாதங்களில் விற்றுவிட வேண்டும். இப்பருவத்தில் 3.5-4 கிலோ தீனியை உண்டு, 1.3-1.5 கிலோ எடையை அடையும். தரமான பெட்டைக் கோழிகளை முட்டை உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். நிலமற்ற மக்கள், நாட்டுக் கோழிகளுக்கெனத் தயாரிக்கப்படும் கூண்டுகளில் நவீன முறையில் வளர்த்து, பொருளாதார வளர்ச்சியை அடையலாம்.


நாட்டுக்கோழி Dr. Elamaran

மருத்துவர் .இளமாறன்,

உதவிப் பேராசிரியர், கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை, 

கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading