கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021
ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் பெருநெல்லி, மருத்துவக் குணமிக்க பழமாகும். நூறு கிராம் நெல்லியில் மாவுச்சத்து 14 கிராம், புரதம் 0.5 கிராம், இரும்புச்சத்து 12 கிராம், உயிர்ச் சத்துகள் பி 0.3 கிராம், சி 0.8 கிராம் உள்ளன. உயிர்ச்சத்து சி அதிகமாக இருப்பது உடல் நலனுக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஆயுர்வேத மருந்துகள், கூந்தல் தைலம், ஊறுகாய், நறுமணப் பாக்கு, மிட்டாய் போன்ற பொருள்கள் தயாரிப்பில் நெல்லி பயன்படுகிறது.
இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா போன்ற நாடுகளில் அதிகப் பரப்பில் நெல்லி விளைகிறது. இந்தியாவில், உ.பி., தமிழ்நாடு, மராட்டியம், குஜராத், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் நெல்லி அதிகளவில் சாகுபடியில் உள்ளது. தமிழ்நாட்டில், திண்டுக்கல், ஈரோடு, தேனி, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை போன்ற மாவட்டங்களில் அதிகமாக விளைகிறது.
உ.பி.யில் வணிக நோக்கில் நெல்லி பயிரிடப்படுகிறது. இறவையிலும் மானாவாரியிலும் நெல்லியைப் பயிரிடலாம். கடும் வறட்சியைத் தாங்கி வளரும். அதனால், உவர், கார அமிலத் தன்மை அதிகமுள்ள பகுதிகளிலும் நெல்லியைப் பயிரிடலாம்.
மண் மற்றும் தட்பவெப்பம்
நெல்லி மரம் வறட்சியான சூழலில் வளரும் பழமரமாகும். மண்கண்டம் ஆழமாக உள்ள வண்டல் கலந்த மணற்சாரி மற்றும் களிமண் நிலத்தில் வளரும். மண்ணின் கார அமில நிலை 6-8 இருத்தல் நல்லது. நீர்த் தேங்கும் நிலத்தில் நெல்லி மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். சரிவான பகுதியிலும் பயிரிடலாம். இதனால், மண்சரிவு, அரிப்பு உண்டாவதைத் தடுக்கலாம்.
நெல்லி மரம் சீராக வளர, மிதவெப்ப மண்டலத் தட்பவெப்பம் தேவைப்படும். ஆயினும் வறட்சியைத் தாங்கி வளர்வதால் பல இடங்களில் நெல்லி சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 600 மி.மீ.க்கு மேல் மழை பெய்தால் நல்லது. குளிர் நிறைந்த சூழல் நெல்லி மரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
இரகங்கள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட பி.எஸ்.ஆர்.1, வட இந்தியாவில் நரேந்திரதேவ் வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட, என்.ஏ.4, என்.ஏ.7, கிருஷ்ணா, காஞ்சன், சக்கையா, பனாரசி போன்ற நெல்லி இரகங்கள் இந்தியாவில் உள்ளன.
பி.எஸ்.ஆர்.1 இரகத்தின் சிறப்புகள்
நன்கு வளர்ந்த பவானிசாகர்1 நெல்லி மரம் ஆண்டுக்கு 155 கிலோ பழங்களைக் கொடுக்கும். இவ்வகையில், எக்டருக்கு 42,952 கிலோ பழங்கள் கிடைக்கும். நாட்டு மரம் 123 கிலோ பழங்களைக் காய்க்கும். இதை ஒப்பிட்டால், பி.எஸ்.ஆர்.1 இரகம் மூலம் 26% மகசூல் கூடுதலாகக் கிடைக்கும். இந்த மரம் பெரியளவில் படராது என்பதால் அதிக மரங்களை வளர்க்க முடியும்.
பழம் நடுத்தரக் கனத்தில் இருக்கும். பின்பருவத்தில் காய்ப்பதால் நல்ல விலை கிடைக்கும். அஸ்கார்பிக் அமிலம், உயிர்ச்சத்து சி நிறைந்து இருப்பதால், மூலிகை மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது. பெரிய பழங்கள் கிடைக்க, என்.ஏ.7 இரகத்தை வளர்க்கலாம். 2-3 இரகங்களைப் பயிரிடுவது நல்ல மகரந்தச் சேர்க்கைக்கு வழிவகுக்கும்.
ஒட்டுச்செடிகள் தயாரிப்பு
ஒட்டுச்செடிகளைத் தயாரிக்கத் தேவையான அடிக்கன்றுகள், நன்கு முற்றிய பழங்களின் விதைகள் மூலம் வளர்க்கப்படுகின்றன. ஓராண்டு வளர்ந்த கன்றுகளைத் தான் அடிக்கன்றுகளாகப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கன்றுகளின் தண்டுகள் பென்சில் கனத்தில் இருக்கும். அதிக விளைச்சலைத் தரும் மரங்களின் மேல் பகுதியைக் கொண்டு (Scion) ஒட்டுக் கட்டலாம்.
பிளவு ஒட்டு முறை தான் பெரும்பாலும் கையாளப்படுகிறது. இதற்கு, ஆகஸ்ட் கடைசி முதல் செப்டம்பர் 15 வரை ஏற்ற காலமாகும். ஒட்டுக்கட்டிய பிறகு, செடிகளை நெகிழி உறையால் 10-15 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும். இது, விரைவில் செடிகள் தளிர்த்து வளர ஏதுவாக இருக்கும்.
நடவு
நன்கு உழுது பண்படுத்திய நிலத்தில் ஆறு மீட்டர் இடைவெளியில் ஒரு மீட்டர் நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுத்து, குழிக்கு 10-15 கிலோ தொழுவுரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு வீதம் கலந்து இட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் நடுவது நல்லது. கன்றுகளைச் சுற்றி 15 செ.மீ. உயரத்தில் வட்டமாகக் கரையை அமைத்தும், நீர் உள்ளே வர வழியமைத்தும் வைத்தால், மழைநீரைச் சேமித்துக் கன்றுகளுக்குக் கொடுக்கலாம். கன்றுகளைச் சுற்றி வைக்கோல் மற்றும் காய்ந்த தழைகளை மூடாக்காக இட்டால், நீர் ஆவியாகி வீணாகாமல் தடுக்கலாம்.
உரம்
இளம் மரங்களுக்கு ஆண்டுதோறும் 10 கிலோ தொழுவுரம், தலா 200 கிராம் தழை, மணி, சாம்பல் சத்தைத் தரும் உரங்களை இட வேண்டும். தழைச்சத்தில் பாதியை மட்டும் இந்த உரங்களுடன் கலந்து மழை பெய்யும் போது இட வேண்டும். மீதியை ஆகஸ்ட் கடைசியில் இட வேண்டும். காய்ப்பில் உள்ள மரங்களுக்கு 40 கிலோ தொழுவுரம், 1.5 கிலோ யூரியா, 1 கிலோ சூப்பர் பாஸ்பேட், 1 கிலோ பொட்டாசை எடுத்து, இரு பாகமாகப் பிரித்து, ஜூன் மற்றும் அக்டோபரில் இட வேண்டும்.
காய்களில் கரும்புள்ளி, பழுப்புத் திட்டு தோன்றினால் நல்ல விலை கிடைக்காது. போரான் பற்றாக்குறையால் இப்படி ஏற்படும். இவற்றைத் தவிர்க்கவும், காய்களைப் பெரிதாக்கவும், 0.6% போராக்ஸ் கரைசலை, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் தெளிக்க வேண்டும்.
கவாத்து
தரையில் இருந்து 80-100 செ.மீ. உயரத்தில் 3-4 கிளைகளை நல்ல இடைவெளியில் வளரவிட வேண்டும். பிறகு, ஆண்டுதோறும், காய்ந்த, நோயுற்ற, மெலிந்த, குறுக்கே வளரும் கிளைகளை நீக்க வேண்டும். எந்தச் சூழலிலும் முக்கியத் தண்டிலிருந்து வளரும் பக்கக் கிளைகளை அதிகளவில் கவாத்து செய்யக் கூடாது.
ஊடுபயிர்கள்
வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி நல்ல இடைவெளி இருப்பதாலும், குறைந்த கிளைகள் சிறிய இலைகளுடன் மெதுவாக வளர்வதாலும், நெல்லி மர வரிசையில் தக்கைப்பூண்டு அல்லது சணப்பையையும், மற்ற வெளியில் கத்தரி, வெங்காயம் போன்ற பயிர்களையும் இடலாம். இதனால், களைகளும் கட்டுப்படும்.
களை நீக்கம்
ஊடுபயிர் இடாத நிலையில், காய்களைப் பறித்த பிறகு இடையுழவு செய்ய வேண்டும். பண்ணைக் கழிவுகளை மூடாக்காக இட்டுக் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பயிர்ப் பாதுகாப்பு: பூச்சிகள்
தண்டு வீக்கப் புழுக்கள்: இவை, நுனிக்கிளைகளைத் தாக்கும். இதனால், கிளைகள் மற்றும் தண்டில் வீக்கம் ஏற்படும். இவற்றைக் கட்டுப்படுத்த, தாக்குண்ட பகுதிகளை நீக்கி விட்டு, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டைமெத்தேயேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.
தண்டின் பட்டைக்கு அடியில் ஊறும் புழுக்கள்: இவை பட்டைக்குள் சென்று சுரங்கம் போலத் துளைக்கும். மழைக்காலத்தில் இவற்றின் சேதம் அதிகமாக இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, தாக்குண்ட கிளைகளை நீக்கி விட்டு, துளைகளில் மண்ணெண்ணெய்யைச் சில துளிகள் வீதம் விடலாம்.
மாவுப்பூச்சி
வெப்பம் மிகுந்த மார்ச், ஏப்ரல், ஜூன், ஜூலையில் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இளங்குருத்து, முற்றிய கிளைகளைப் பாதிக்கச் செய்யும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வேப்பெண்ணெய், 1.5 மில்லி பெப்ரோனில், 5 மில்லி காதி சோப் நீர் வீதம் கலந்து தெளிக்கலாம்.
நோய்கள்
துருநோய்: வட்டமாகவும், சிவப்பாகவும் இலைகள் மற்றும் காய்களில் தோன்றிச் சேதப்படுத்தும். இதனால், காய்களின் அளவும் தரமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இது செப்டம்பர் அக்டோபரில் தோன்றும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் வீதம் கலந்து தெளிக்கலாம்.
அறுவடை
ஐந்தாண்டு மரத்தில் இருந்து காய்களைப் பறிக்கலாம். ஏழாண்டுக்கு மேலான மரங்களில் இருந்து அதிக மகசூலைப் பெறலாம். ஒட்டுச்செடிகளில் மூன்றாம் ஆண்டிலிருந்து மகசூலை எடுக்கலாம். சராசரியாக ஒரு மரம் 100 கிலோ மகசூலைக் கொடுக்கும். செப்டம்பர், டிசம்பர், ஜனவரியில் அறுவடை செய்யலாம்.
முனைவர் சி.இராஜமாணிக்கம்,
முனைவர் ஆ.பியூலா, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை.