கழுதை வளர்ப்பு முறை!

கழுதை Donkey breeding

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021

நீண்ட காதுகள், சிறிய கால்களைக் கொண்ட கழுதையானது குதிரை இனத்தைச் சார்ந்தது. அமைதி, அறிவுமிக்க, பழகுவதற்கு ஏற்ற நல்ல விலங்கு. எந்தப் பொருளையும் மூட்டையாகக் கட்டி முதுகில் வைத்து விட்டால், மயங்காமல் தயங்காமல் சுமந்து செல்லும் அருமையான விலங்கினம். பொதி சுமப்பதை நோக்கமாகக் கொண்டே கழுதைகள் வளர்க்கப்படுகின்றன.

குறிப்பாக, வண்டிகள் செல்ல இயலாத மலை மற்றும் ஒற்றையடிப் பாதை வழியாகப் பொருள்களை எடுத்துச் செல்வதற்குக் கழுதைகள் பயன்படுகின்றன.

குணங்கள்

குதிரை இனத்தைச் சேர்ந்தது என்றாலும், உடலமைப்பில், மனநிலையில், உணர்ச்சியில் என, பலவிதங்களில் கழுதை மாறுபடுகிறது. கழுதைக்கு மன வலிமை அதிகம். எத்தகையை வலியையும் தாங்கும் தன்மை மிக்கது. எந்த நிலையிலும் பயத்தைக் காட்டிக் கொள்ளாத விலங்கு.

மற்ற விலங்குகளுடன் சேர்ந்து வாழ விரும்பும் என்பதால், கழுதையைத் தனிமைப்படுத்தி வளர்க்கக் கூடாது. 60-80 கிலோ எடையுள்ள கழுதை, தன் முதுகில் 30-40 கிலோ பொதியைச் சுமந்து செல்லும். இதைப் போன்ற இருமடங்கு எடையுள்ள சுமையை இழுத்துச் செல்லும்.

தீவன நிர்வாகம்

ஆடு மாடுகளைப் போல மேயும் குணமுள்ளது. நார்ச்சத்து மிக்க புல், செடிகள் போன்றவற்றை மேயும். இவற்றை எளிதாகச் செரிக்கும் திறன் கழுதைக்கு இருப்பதால், இதன் எரிசக்தித் தேவை குறைவாகவே இருக்கும்.

இதன் உடல் எடையில் 1.5% அளவில் உலர் பொருளைத் தீவனமாகத் தர வேண்டும். மேய்ச்சலுக்குப் போகும் கழுதைகளுக்கு, வைக்கோலை மட்டும் தந்தால் போதும்.

நார்ச்சத்து மிகுந்த தீவனங்கள் கழுதைக்கு ஏற்றவையாக இருப்பதால், இதன் சத்துத் தேவையைப் பசும்புல் ஈடு செய்யும். கழுதைக்கு 1-2 கிலோ உளுந்து வீதம் கொடுக்கலாம். ஒரு கழுதைக்கு 25 சென்ட் மேய்ச்சல் நிலம் தேவைப்படும்.

மேய்ச்சலுக்குச் செல்லாத கழுதையின் உணவில், 75% பசும்புல்லும், 25% உலர் தீவனமும் இருக்க வேண்டும். தாதுப்புகள், வைட்டமின்கள் இருப்பதும் அவசியம். சுத்தமான குடிநீரைக் கொடுக்க வேண்டும்.

கொட்டில் நிர்வாகம்

ஒரு கழுதைக்கு 2-3 ச.மீ. வீதம் இடம் தேவைப்படும். கழுதைகளைக் கட்டி வைக்கும் இடம் சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருக்க வேண்டும். கழுதைக் கொட்டிலில் வெளிச்சம் மற்றும் வடிகால் வசதி இருப்பது மிகவும் முக்கியம்.

இனப் பெருக்கம்

இரண்டு ஆண்டுகளில் ஆண் கழுதையும் பெண் கழுதையும் இனவிருத்தி வயதை அடைந்து விடும். ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். 20-26 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவ அறிகுறிகள் தோன்றும்.

பெண் கழுதையில் இந்த அறிகுறிகள் 5-7 நாட்கள் இருக்கும் என்பதால், 3-5 நாட்களில் ஆண் கழுதையுடன் சேர்க்க வேண்டும். இந்த நாட்களில் ஒரே நேரத்தில் ஆண் கழுதையுடன் விட வேண்டும். கழுதைகளின் சினைக்காலம் 360-375 நாட்களாகும். 20-25 ஆண்டுகள் வரை குட்டிகளை ஈனும்.

சினைப்பருவ அறிகுறிகள்

பெண் கழுதை அடிக்கடி வாயைத் திறந்து மூடும். காதுகளைப் பின்புறமாக வளைக்கும். அடிக்கடி சிறுநீரைக் கழிக்கும். வாலை மேலே தூக்கும். இனப்பெருக்க உறுப்பை அசைக்கும்.

குட்டிகள் பராமரிப்பு

ஈனுவதற்கு மூன்று வாரம் இருக்கும் போதே, சினைக் கழுதையின் மடி பெருக்கத் தொடங்கும். மழைக்காலத்தில் சிவப்புக்கதிர் பெட்டி மூலம் குட்டிகளுக்கு வெப்பமளிக்க வேண்டும். ஈனுவதற்கு முன்பே வைக்கோலைப் பரப்பி வைக்க வேண்டும்.

தீனியைத் தீவனத் தட்டிலும், குடிநீரை நெகிழி வாளியிலும் வைத்துக் கொடுக்க வேண்டும். ஈனும் நேரத்தில் தீவனம் மற்றும் நீர் வாளியை அந்த இடத்தில் இருந்து அகற்றி விட வேண்டும்.

ஈனுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன், கழுதையின் மடிக்காம்புகள் பாலைச் சுரக்கும் நிலையில் இருக்கும். 30-60 நிமிடங்களில் குட்டிகளை ஈன்று விடும். அப்போது குட்டிகளின் மூக்கில் அடைத்து விடாத வகையில் சளியைத் துடைத்து விட வேண்டும்.

தொப்புள் கொடியில் டிங்சர் அயோடினைத் தடவ வேண்டும். ஒரு மணி நேரத்தில் நஞ்சுக்கொடி விழுந்து விடும்.

குட்டியின் நலத்துக்குச் சீம்பால் அவசியம் என்பதால், பிறந்து இரண்டு மணி நேரத்தில் குட்டிக்குச் சீம்பாலைத் தர வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில், சுத்தமான 60 மில்லி நீரில் 4 கிராம் குளுகோஸ் பொடியைக் கலந்து கொடுக்க வேண்டும்.

இரண ஜன்னி வராமல் இருக்க, தடுப்பூசியைக் குட்டிக்குப் போட வேண்டும். பிறந்த கொஞ்ச நேரத்தில் குட்டியானது காபி நிறத்தில் கழிவை வெளியேற்றும். 7-12 மாதங்கள் வரை தாயுடன் குட்டி சேர்ந்திருக்கும்.

ஒரு மாதத்தில் குட்டிகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஆண் குட்டி இனப்பெருக்க வயதை அடையும் போது அதைப் பராமரிப்பது சற்றுக் கடினமாகும். எனவே, 6-18 மாதங்களில் விரை நீக்கம் அல்லது கருத்தடை சிகிச்சையைச் செய்ய வேண்டும்.

நோய் நிர்வாகம்

வெறிநோய், சளிக்காய்ச்சல், விறைப்பு நோய் போன்றவை கழுதையைத் தாக்காமல் இருக்க, தடுப்பூசியைப் போட வேண்டும். வலியைத் தாங்கும் திறன் கழுதைக்கு அதிகம் என்றாலும், தீவனம் உண்ணாமை, சோர்வு, தளர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

வயிற்று வலி, இரத்தத்தில் கொழுப்புக் கூடுவது, குளம்பு நோய், சிறுநீரக நோய், சுவாச நோய், கணைய நோய், மூட்டு வீக்கம், எலும்பு வீக்கம் போன்றவை கழுதையைத் தாக்கும்.

வயிற்று வலி: குதிரைக்கு வருவதைப் போல, கழுதைக்கும் வயிற்று வலி ஏற்படும். அப்போது மண்ணில் புரண்டு உருளும். மிக மோசமான, தாங்க முடியாத வலியின் போது தான் இப்படி உருளும். வயிற்று வலியால் கழுதையின் இதயம் நிமிடத்துக்கு 44 முறை என்னும் அளவைக் கடந்து அதிகமாகத் துடிக்கும்.

நிமிடத்துக்கு 16-20 என்னும் அளவில் இருக்கும் சுவாசமும் அதிகமாகும். குடல் இறுக்கம், வயிற்றுக்குழிச் சவ்வு ஒவ்வாமை, குடற்புண், சினைப்பை ஒவ்வாமை, எலும்பு முறிவு போன்றவை, வயிற்று வலிக்கான காரணங்கள் ஆகும்.

இரத்தத்தில் கொழுப்புக் கூடுதல்: இது, கழுதையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாகும். இரத்தத்தில் சர்க்கரை குறையும் போது, உடலானது தனக்குத் தேவையான சக்தியைப் பெற, கல்லீரலில் சேர்த்து வைத்துள்ள கொழுப்பை எரிசக்தியாக மாற்றும்.

இத்தகைய வளர்சிதை மாற்றத்தால், கல்லீரலும் சிறுநீரகமும் செயலிழந்து விடும். உடல் கனம், வயது முதிர்வு, சினைக்காலத்தின் கடைசி மாதம் மற்றும் பாலூட்டும் காலம், குளம்பு ஒவ்வாமை, மனச்சோர்வு போன்றவை, இரத்தத்தில் கொழுப்புக் கூடுவதற்கான காரணிகளாகும்.

பற்களைத் தாக்கும் நோய்கள்: குதிரைக்கு இருப்பதைப் போலவே, கழுதைக்கும் பற்கள் இருக்கும். ஆனால், கழுதைக்குப் பல் முளைக்கும் வயது, குதிரையை விட அதிகமாகும். குதிரையைப் போலவே, பல் நோய்களால் கழுதையும் அவதிப்படும். எனவே, ஆண்டுக்கு இருமுறை கால்நடை மருத்துவர் மூலம் பற்களின் மேற்புறத்தைச் சமப்படுத்தி, முறையாகப் பராமரிக்க வேண்டும்.

குளம்புகள் பராமரிப்பு: குதிரையின் குளம்புகளை விட, கழுதையின் குளம்புகள் நிமிர்ந்தும், சிறுத்தும், அழுத்தமாக இருக்கும். குளம்பு ஒவ்வாமை கழுதைகளில் அதிகம் ஏற்படும். எனவே, சுத்தமான, வடிகால் வசதி மற்றும் காய்ந்த படுக்கை வசதி, கழுதைக்கு அவசியமாகும்.

அனுபவம் வாய்ந்த இலாடத் தொழிலாளி மூலம், கழுதையின் குளம்புகளை எட்டு வாரங்களுக்கு ஒருமுறை செதுக்கிவிட வேண்டும்.

குளம்பு ஒவ்வாமை கழுதையின் முக்கிய நோயாக இருந்தாலும், அது கண்டறியப் படாமல் உள்ளது. உடல் பாரத்தைக் கால்களுக்கு மாற்றுதல், கால் நரம்பில் நாடித்துடிப்புக் கூடுதல் போன்றவை, குளம்பு ஒவ்வாமையின் காரணிகளாகும்.

இவற்றை அகற்றுதல், நிற்க முடியாமல் தவிக்கும் போது உலர்ந்த படுக்கை வசதியை அளித்தல், குளம்புகளைச் சரி செய்தல் போன்றவற்றின் மூலம், குளம்பு ஒவ்வாமையைப் போக்கலாம்.

சுவாச நோய்: குதிரையில் சுவாச நோயை ஏற்படுத்தும் நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரிகள் கழுதையையும் தாக்கும். இதைக் கட்டுப்படுத்த, நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், வலிநீக்கி மருந்துகள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைக் கால்நடை மருத்துவர் மூலம் அளிக்க வேண்டும்.

புற, அக ஒட்டுண்ணிகள்: பேன், சிற்றுண்ணி, புழுப்புண், சொரி, சிரங்கு போன்றவை கழுதைகளில் இருக்கும் புற ஒட்டுண்ணிகள் ஆகும். பேன்களால் இரத்தச் சோகையும் அரிப்பும் ஏற்படும். எனவே, பேனைக் கட்டுப்படுத்த, 4% பெர்மெத்திரின் மருந்தைத் தோலில் தடவ வேண்டும். உண்ணிகள் பெரும்பாலும் கழுதையில் இருப்பதில்லை.

நீள உருளைப் புழுக்கள், நுரையீரல் புழுக்கள் கழுதையில் அதிகமாக இருக்கும். இவை அக ஒட்டுண்ணிகள் ஆகும். இவற்றைக் கட்டுப்படுத்த, கால்நடை மருத்துவர் உதவியுடன் குடற்புழு நீக்க மருந்தைக் கழுதைக்குக் கொடுக்க வேண்டும். பொதுவாக, ஐவர்மெக்டின் என்னும் மருந்தை மருத்துவர் அனுமதியுடன் தரலாம்.

கழுதைப் பால்

கழுதைப் பாலின் மருத்துவக் குணத்தை உலகுக்கு வெளிப்படுத்தியவர், பிரபல கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்ஸ் ஆவார். உடலின் நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் குழந்தைகளின் தெளிவாகப் பேசும் திறனைக் கூட்டுவதற்குக் கழுதைப் பாலைப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், முதுமையைத் தடுக்க, சளி, இருமல், மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் மற்றும் தலைவலி, உடல்வலி, தோல் நோய்கள் போன்றவற்றைத் தீர்க்க, கழுதைப் பால் பயன்படுகிறது. இது, மனிதப் பாலைப் போல இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

கழுதையைப் பாதுகாத்தல்

இப்படி, பல்வேறு பயன்களைத் தரவல்ல கழுதையினம் அழிவின் விளிம்பில் உள்ளது. இந்தியாவில் மூவகைக் கழுதை இனங்கள் மட்டுமே அறியப்பட்டு உள்ளன. ஆனால், நாடு முழுவதும் பலவகை நாட்டினக் கழுதைகள் வளர்ப்பில் உள்ளன.

அறிவியல் வளர்ச்சி மற்றும் எந்திர வண்டிகள் பயன்பாடு காரணமாக, கழுதைகளும், அவற்றை வளர்ப்போரும் குறைந்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு இடர்களைத் தாங்கி, பலவிதப் பயன்களை வழங்கும் கழுதைகளைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


கழுதை Dr Kumaravel

முனைவர் பா.குமாரவேல்,

முனைவர் ச.சரஸ்வதி, மரு.பி.ஆதிலட்சுமி, முனைவர் ந.விமல்ராஜ்குமார், மரு.ர.சுரேஷ்குமார்,

கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-07.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading