கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
டிஸ்கஸ் அல்லது பாம்படொர் என்பது, தென்னமெரிக்க அமேசான் ஆற்றில் காணப்படும் சிச்சிலிட் மீனாகும். இவை நான்கு வகைப்படும். அவற்றில் Symphysodon Discus பிரபலமானது. S.Tarzoo என்னும் பச்சை டிஸ்கஸ், S.Haradi என்னும் நீல டிஸ்கஸ், S.Aequifasciatus என்னும் பழுப்பு டிஸ்கஸ் ஏனையவை. உடல் மற்றும் வண்ணங்களின் இணைப்பால் இம்மீன்கள் சிறப்பைப் பெறுகின்றன. இவை பெரும்பாலும் இணையதளம் மூலம் விற்கப்படுகின்றன. இவற்றை வளர்க்க, அமிலத்தன்மை வாய்ந்த, கடினத்தன்மை குறைந்த நீர் தேவை. இதில், சிறிதளவு மாற்றமிருந்தாலும் மீன்கள் பாதிக்கப்படுவதுடன், இறந்து விடவும் நேரும்.
உயிரியல் அமைப்பு
டிஸ்கஸ் மீன்கள் கூட்டமாக வாழும். இனவிருத்திக்குத் தயாராகும் மீன்கள் மட்டும் கூட்டத்தை விட்டுப் பிரிந்திருக்கும். தாயும் தந்தையும் சேர்ந்து குஞ்சுகளைப் பாதுகாக்கும். தாய் மீன் தன் தோலில் ஒருவகைச் சுரப்பை உற்பத்தி செய்து, இரண்டு வாரங்கள் வரையில் குஞ்சுகளுக்குக் கொடுக்கும். அடுத்து, குஞ்சுகளே உணவைத் தேடிக்கொள்ளும். இக்குஞ்சுகள் ஒரு வயதில் முதிர்ச்சியடையும். இவை, பூச்சிகள், தாவர உணவுகள் மற்றும் மட்கும் பொருள்களைச் சாப்பிடும் அனைத்துண்ணியாகும்.
வளர்ப்புத் தொட்டிப் பராமரிப்பு
டிஸ்கஸ் மீன்கள் வேகமாகச் செழித்து வளர்வதற்கு, தொட்டி நீரை அடிக்கடி மாற்ற வேண்டும். இதனால், கரிமக் கலவையில்லா நீர் கிடைக்கும். நச்சு, இரசாயனம், குளோரின் மற்றும் தீய பாக்டீரியாக்கள் இல்லாத நீரைப் பயன்படுத்த வேண்டும். தொட்டி நீரில் காற்றைச் செலுத்தினால் நீரிலுள்ள குளோரின் அகலும். நவீனக் கருவிகள் மூலம் நீரின் தன்மையைச் சரி செய்த பின் சில நாட்கள் கழித்துத் தொட்டியில் மீன்களை விடலாம்.
தொட்டியின் அளவு
சிறிய டிஸ்கஸ் மீன்கள் வேகமாக வளரும். அதனால் அவற்றைப் பெரிய தொட்டிகளில் வளர்க்க வேண்டும். நன்கு வளர்ந்து இனப்பெருக்க நிலையை அடைய 200 லிட்டர் தொட்டி தேவை. இதில் 4-5 மீன்கள் வரை விடலாம். இப்படிச் செய்தால் 8 அங்குல நீளம் வரை வளரும்.
அலங்கார நீர்த் தாவரங்கள்
இயற்கையில், அமேசான் ஆற்றுப்படுகையில் பி.எச்.6.5 வரை இருக்கும். அதாவது மென்னீர். எனவே, தாவரங்கள் வளரும் தொட்டியில் டிஸ்கஸ் மீன்களை வளர்க்கலாம். குறிப்பாக, சிஓ2 அளிக்கப்படும் தொட்டியில் குறைந்த பி.எச். இருப்பதால் டிஸ்கஸ் மீன்கள் நன்கு வளரும். தொட்டியில் கட்டைகளை வைப்பது, தொட்டிக்குக் கூடுதல் அழகைத் தருவதுடன், நீரின் கார அமிலத் தன்மையையும் குறைக்கும். கட்டைகளை வைக்காமலும் மீன்களை வளர்க்கலாம். இனப்பெருக்க நிலையில் உள்ள மீன்களை இவ்வகைத் தொட்டியில் வளர்ப்பதே சிறந்தது. இதனால் மீன் குஞ்சுகளை நன்கு பராமரிக்கலாம்.
டிஸ்கஸ் மீன்களுடன், மெதுவாக நகரும் டெட்ரா, கார்டினங்கள் போன்ற மீன்களையும் வளர்க்கலாம். மென்னீரும் அதிக வெப்பமும் தேவை. இந்நீரில் அமேசான் வாள் ஆலை, அனுபியாஸ் நானா, வாட்டர் ஸ்ப்ரைட், ஜாவா பெரணிகள் போன்ற சிலவகைத் தாவரங்கள் மட்டுமே வளரும். இவை வளர்வதற்கு ஃபுலுரைட் போன்ற மூலக்கூறும் தேவை.
நீரைச் சுத்திகரித்தல்
இயந்திரம் மற்றும் உயிரியல் வடிகட்டிகளைப் பயன்படுத்தலாம். ஏனெனில், டிஸ்கஸ் மீன் மெதுவாக நகரும் நீரில் இருந்து வருகிறது. இந்த மீன்களுக்குக் கீழே ஜல்லி வடிகட்டியைப் பயன்படுத்தவே கூடாது. கொள்கலன் வடிகட்டி டிஸ்கஸ் மீன் தொட்டிகளுக்குச் சிறந்தது. ஆனால், இவ்வகைச் சுத்திகரிப்பு இயந்திரத்தின் விலை அதிகம். எனவே அதிகளவில் பயன்பாட்டில் இல்லை.
ஒளி
டிஸ்கஸ் மீனின் சிறந்த வண்ணங்களை இரசிப்பதற்குச் சரியான ஒளி அவசியம். நீர்த் தாவரங்களை வளர்க்கும் தொட்டிகளில் சரியான ஒளி தேவைப்படுகிறது. ஒவ்வொரு 5 லிட்டர் நீருக்கு 2-5 வாட் ஒளித்திறன் அவசியம். ஆனால் டிஸ்கஸ் மீன்களுக்கு மிதமான ஒளி போதுமானதால், பெரிய தாவரங்களை வளர்த்தால், அவை மறைவாகத் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்கும்.
டிஸ்கஸ் மீன்களின் ஊட்டம்
டிஸ்கஸ் மீன் ஊனுண்ணி. ஆனாலும் பலவகையான உணவுகளை விரும்பி உண்ணும். உறைந்த இரத்தப் புழுக்கள், ஆர்டீமியா, செயற்கை உணவுகளை ஏற்றுக்கொள்ளும். இவற்றின் குடல் சிறிதாக இருப்பதால், உணவை ஒரே தடவையில் அளிக்காமல், அதை 2-3 தடவையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். பலவகை உணவுகளைக் கொடுத்தால், இவை சிவப்பாக வளரும்.
இனவிருத்தி
இந்த மீன்களில் இனப்பெருக்கம் நடக்க, பெரிய மற்றும் ஆழமான தொட்டி தேவை. குறைந்தது 36 x 18 x 18 அங்குலத் தொட்டி வேண்டும். இவை சிறிய தொட்டிகளில் இனப்பெருக்கம் செய்வதில்லை. நீர் மேலாண்மை டிஸ்கஸ் மீன்களின் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தகுந்த கருவி மூலம் அல்லது தொடர்ந்து நீரை மாற்றுவதன் மூலம் நீரைச் சரி செய்யலாம். இனப்பெருக்கக் காலத்தில் நீரின் தட்பவெப்ப நிலையைச் செயற்கையாக மாற்றியமைத்தால் இனப்பெருக்கம் சிறப்பாக இருக்கும்.
தொட்டி நீரானது மென்மையாக இருக்க வேண்டும். கார அமிலத் தன்மை 5.0-7.0, கடினத் தன்மை 17-65 பிபிம் மற்றும் வெப்பநிலை 28-30 டிகிரி செல்சியஸ், நைட்ரேட் 2 பிபிஎம் இருக்க வேண்டும். வாரம் ஒருமுறை 30-50% நீரை மாற்ற வேண்டும்.
இனப்பெருக்கக் காலத்தில் டிஸ்கஸ் மீன்களுக்குப் புரதம் நிறைந்த உணவு தேவை. பலவகை உணவுகளைச் சரிவிகிதத்தில் அளித்தால், மீன்கள் செழித்து வளர்ந்து, எளிதில் இனவிருத்தி நிலையை அடையும். இந்த மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வோர், தாய் மீன்களுக்கு மாட்டிறைச்சியைத் தருகின்றனர். மேலும், உணவில் வைட்டமின் அளவைக் கூட்ட, இரத்தப் புழுக்கள், காய்கறிகள், கீரைகளைச் சேர்க்கிறார்கள். மீன்கள் நலமாக இருப்பதற்கு, தரமான சத்துகள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய உணவை வாரம் இருமுறை கொடுக்க வேண்டும்.
டிஸ்கஸ் மீன் முட்டை ஒட்டும் தன்மையில் இருக்கும். தாய்மீன், தான் இடும் முட்டைகளை, ஏதேனும் கல் அல்லது இலை மீது ஒட்டிவிடும். ஆகையால், முட்டைகளை இடுவதற்கு வசதியாக இனவிருத்திக் கூம்பு அல்லது களிமண் பானையைத் தொட்டியின் மத்தியில் கவிழ்த்து வைக்க வேண்டும். பிளாஸ்டிக் கூம்புகள் கடைகளில் கிடைக்கின்றன. கூம்பின் மேலுள்ள அழுக்கை உறிஞ்சிச் சுத்தம் செய்து பெண் மீன் முட்டைகளை இட்டதும், ஆண் மீன் தன் விந்தைச் செலுத்தி முட்டைகளைக் கருவுறச் செய்யும். பின் இரண்டு மீன்களும் முட்டைகளைப் பாதுகாக்கும்.
கூம்புப் பொருளை மீன்கள் சுத்தம் செய்யவில்லை என்றால், நீரின் தரத்தைச் சரிபார்த்து, மீன்களுக்குத் தொடர்ந்து உணவளிக்க வேண்டும். இந்த நிலையில் தான் தொட்டிநீர் மென்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், அந்தநீர் கடினமாக இருந்தால், முட்டையோடுகள் குஞ்சுகளால் உடைக்க முடியாத அளவில் இறுக்கமாகி விடும். எனவே, முட்டையோடுகள் மென்மையாக இருக்க மென்னீர் அவசியம்.
நீரின் தட்பவெப்பம் மற்றும் உணவில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தினால், டிஸ்கஷ் மீன்கள் ஆண்டுக்கு இருமுறை இனப்பெருக்கம் செய்யும். இனப்பெருக்கக் காலத்தில் 15 வாரங்கள் வரை முட்டைகளை இடும். இந்த மீன்கள் குட்டிகளைப் பாதுகாக்கும் குணமுடையவை. நோய் பரவாமல் இருக்க, கருவடையாத முட்டைகளைத் தாய் மீன்கள் நீக்கி விடுகின்றன.
இந்தக் குஞ்சுகள் நெடுநாட்கள் வரையில் தாயுடன் இருக்கும். சில நேரங்களில் இவை சினத்துடன் தாய்மீனின் செதில்களையும் நீக்கும். அதனால் ஒருவாரம் கழித்து இக்குஞ்சுகள் வேறு தொட்டியில் விடப்படும். மீன் குஞ்சுகள் 2 அங்குலம் வளர்ந்ததும் விற்கலாம். நன்கு வளர்த்தால், 70% டிஸ்கஸ் மீன் குஞ்சுகள் உயிருடன் இருக்கும்.
சா.ஆனந்த்,
பொ.கார்த்திக் ராஜா, வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம்,
பவானிசாகர், ஈரோடு மாவட்டம்-638451.