அரைவயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்பதே ஒருவர் நலமாகவும் நெடுநாட்களும் வாழ்வதற்கான மந்திரம். ஒருவர் உண்ணும் உணவைப் பொறுத்தே அவரின் வயது தீர்மானிக்கப்படுகிறது.
என்னதான் காலத்தின் ஓட்டம் மனிதனைக் கலங்கச் செய்தாலும், தன்னுடைய ஞானத்தால் அதை மாற்றிவிடும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு. எனவே, முதுமை என்பது, வாழ்க்கைப் பருவங்களில் ஒன்று என்பதை புரிந்து, அதற்கேற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், உடலியக்கம் பற்றிய விழிப்புணர்வு இருந்தால், முதுமையை எளிதில் சமாளிக்கலாம்.
உடலில் ஏற்படும் இயற்பியல் மற்றும் இரசாயன மாற்றங்களே முதுமைக்குக் காரணங்களாகும். முதுமை மரபு சார்ந்த மாற்றமாகும். காலத்தைப் பொறுத்தது, உடலைப் பொறுத்தது என, இதை இருவகையாகப் பிரிக்கலாம்.
காலத்தின் செயலை யாராலும் மாற்ற இயலாது. ஆனால், உடலளவில் ஏற்படும் மாற்றங்களை, நல்ல உணவு மற்றும் அன்றாட உடற் பயிற்சியால் குறைக்க முடியும்.
உடலில் நிகழும் மாற்றங்கள்
முதுமை என்பது பலவித மாற்றங்களை உண்டாக்குவது. வயது ஏற ஏற உடலில் நிகழும் வளர்சிதை மாற்றம், உடல் திறன், செவித்திறன், பார்வைத்திறன் ஆகியன குறையும். சுவை நரம்புகள் தளர்ந்து நாக்கின் சுவை அரும்புகளின் எண்ணிக்கை குறைவதால் சுவையை உணர்வதும் குறையும்.
தசைகள் தளர்வதால் உடல் வலிமையும் குறையும். இதயத் திசுக்களும் தசையும் தளர்தல், இரத்தழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் இதயம் பாதிக்கும்.
சிறுநீரகம், இரப்பை மற்றும் கல்லீரலில் ஏற்படும் மாற்றங்கள், புதிய திசுக்களை உருவாக்கும் திறனையும், நோயெதிர்ப்புச் சக்தியையும் குறைக்கும். உடலின் வளர்சிதை மாற்றவியலில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனை உண்டாக்கும். மலச்சிக்கல் ஏற்பட்டு கழிவுப் பொருள்களை வெளியேற்றும் திறனும் குறையும்.
எலும்புகளின் வலிமை குறைவதால், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் மாற்றம் உண்டாகி, எலும்பு சார்ந்த நோய்கள் வருவதற்கு இடமளிக்கும். இப்படி, முதுமை என்பது அகத்திலும் புறத்திலும் பல மாறுதல்களை ஏற்படுத்துவதால் நோய்கள் எளிதில் தாக்கும்.
முதுமையில் உணவின் பங்கு
என்றும் இளமையாகவும் அழகாகவும் இருக்கவே எல்லோரும் விரும்புவோம். முதுமையைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது என்றாலும், இளமையை நீட்டிக்கும் உணவு முறைகளைக் கடைப்பிடிக்கலாம். சிறந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்டால் முதுமையிலும் இளமையாக வாழலாம்.
சிறந்த உணவுகளின் நன்மைகள்
நரம்பு மற்றும் திசுத்தளர்ச்சியைத் தடுக்கும். மரபணுக்களில் ஏற்படும் சிதைவைத் தடுக்கும். இயல்பான முறையில் நச்சுகளை வெளியேற்றும். இளமை மற்றும் வலிமையைக் கூட்டும். நோய்கள் மற்றும் குறைகளைத் தடுக்கும்.
அவகடோ
இதில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. புரதம், வைட்டமின் ஈ மற்றும் தாதுப்புகள் உள்ளதால், சருமத்தைப் பொலிவுடன் வைக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
பழங்கள்
பெர்ரி வகைப் பழங்கள் மற்றும் கறுப்புத் திராட்சையில் பைட்டோ அமிலங்கலான பிளேவனாய்டுகள் மற்றும் ஆன்தோசையானின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் அதிகளவில் உள்ளன. இவை திசுக்களைச் சிதைக்கும் ஃப்ரி ரேடிக்கல்லைத் தடுத்து முதுமைத் தோற்றத்தையும் தடுக்கிறது.
இவற்றிலுள்ள வைட்டமின் சி சருமத்தைப் பாதுகாக்கிறது. திராட்சையில் உள்ள ரெஷவெரடிரால், மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டினாய்டு, ஆரஞ்சு, எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி போன்றவை, உடலிலுள்ள நஞ்சை வெளியேற்ற உதவுவதுடன், சருமத்தையும் பாதுகாக்கிறது.
அடர் சாக்லேட்டுகள்
கொக்கோ கொட்டையில் எதிலும் இல்லாதளவில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இதிலிருந்து தயாராகும் சாக்லேட்டுகளிலும் இவை அதிகமுள்ளன. இதிலுள்ள பிளேவனாய்டுகள் புற ஊதாக் கதிர்களிடமிருந்து உடலைக் காக்கும். மேலும், சருமம் ஈரப்பதமாகவும், சுருக்கம் இல்லாமல் இருக்கவும் உதவுகின்றன.
காய்கறிகள்
முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ராக்கோலி, கேல், முள்ளங்கி போன்ற காய்கறிகள் உடலிலுள்ள நச்சுகளை எதிர்த்து புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும். கேல்-லூடின் மற்றும் ஸிகஸாக்தைன், ப்ராக்கோலி, தக்காளி லைக்கோபைன், வைட்டமின் ஏ, சி, கால்சியம், போலேட் போன்றவை, எலும்புகளின் நலம், பார்வைத் திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்.
மசாலாப் பொருள்கள்
பச்சை அல்லது சமைத்த பூண்டை தினமும் உண்டால் புற்றுநோய் மற்றும் இதய நோயிலிருந்து விடுபடலாம். மஞ்சளில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளன. இஞ்சி, செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். பட்டை, இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும்.
கொட்டைகள்
முந்திரி, பாதாம் கொட்டைகளில், குறிப்பாக அக்ரூட்களில் இருக்கும் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், செம்பு, செலீனியம் ஆகியன, செரிமானம் மற்றும் நோயெதிர்ப்புத் திறனையும் சருமத்தையும் மேம்படுத்தும்.
சோயா
இது, மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் இதய நோய், மறதி, எலும்பு சார்ந்த சிக்கல்களைத் தடுக்கும். சத்துள்ள நொதித்த சோயாப் பொருள்கள் எளிதில் செரிக்கும்.
தர்ப்பூசணி
இதன் சதையும் விதையும் சத்து மிக்கவை. இதிலுள்ள வைட்டமின் ஏ,பி,சி மற்றும் செலீனியம், துத்தநாகம் போன்றவை ஆக்ஸிஜனேற்றிகளாக இயங்கி, முதுமையைத் தடுக்கும்.
ஆலிவ் எண்ணெய்
இது தோலில் ஏற்படும் ஒவ்வாமையை அகற்றிப் புத்துணர்வைத் தரும். கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயநோய் மற்றும் வயது சார்ந்த நினைவாற்றல் குறையைத் தடுக்கும்.
மீன் மற்றும் முட்டை
மீனிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மூளை இயங்கத் தேவை. இது உடல் ஒவ்வாமை மற்றும் அல்சைமர் நோயைத் தடுக்கும். முட்டையிலுள்ள லூடின், சருமம் மற்றும் கண்களின் நலனுக்குத் தேவை.
யோகர்ட்
இதிலுள்ள லாக்டிக் அமிலம், புரதம், வைட்டமின் டி, கால்சியம் ஆகியன, சருமத்தின் நலனுக்குத் தேவை.
தேநீர்
பச்சைத் தேநீரிலுள்ள எப்பிகாலக்டோசின் காலேட் சக்திமிகு ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்படுகிறது.
நெடுநாட்கள் இளமையுடன் வாழ, உணவில் கவனம் வேண்டும். வயதைக் குறைப்பதாகக் கூறும் சிகிச்சைகளை நம்பி ஏமாறாமல், இயற்கை முறையில் கிடைக்கும் உணவுகளை உண்டு வந்தால், முதுமையால் ஏற்படும் உடல் மாற்றங்களிலிருந்து விடுபடலாம்.
நம்மால் முதுமையைத் தடுக்க முடியாது. ஆனால் உள்ளத்தில் மகிழ்ச்சி, உணவில் கட்டுப்பாடு, நல்ல உடற்பயிற்சி இருந்தால், முதுமையால் ஏற்படும் தொய்விலிருந்து விடுபடலாம். மேலும், விருந்தும் வேண்டாம் விரதமும் வேண்டாம் எனவும், உணவையே மருந்தாக உண்டும் வாழ்ந்தால் இளமையுடன் இருக்கலாம்.
பொறிஞர் வா.திவ்யா,
முனைவர் க.சு.ஞானலெட்சுமி, த.பாஸ்கரன், உணவு மற்றும் பால்வளத்
தொழில்நுட்பக் கல்லூரி, கோடுவெளி, சென்னை-600052.