வறட்சியில் கால்நடைகளைக் காக்கும் ஊறுகாய்ப் புல்!

ஊறுகாய்ப் புல் Murghas 1 1024x768 1

கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் முக்கியமானது. இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள் உற்பத்திப் பெருக உதவும். எனவே, கால்நடைகளுக்குப் போதிய பசுந்தீவனத்தை அளித்தால், சீரான உற்பத்தையைப் பெறலாம்.

மேய்ச்சல் மூலம், சோளம், மக்காச்சோளம், கோ.3, கோ.4, கோ.எஃப்.எஸ்.29 போன்ற ஒட்டுப்புல் வகைகள் மூலம் பசுந்தீவனத்தைப் பெறலாம். மழைக்காலத்தில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை முறையாகப் பதப்படுத்திச் சேமித்தால், கோடையில் பயன்படுத்தலாம்.

ஊறுகாய்ப்புல்

பசுந்தீவனங்களை அவற்றின் இயல்புகள் மாறாமல், குறைந்த சத்திழப்புடன் பதப்படுத்திச் சேமிக்கும் முறை, ஊறுகாய்ப்புல் அல்லது பதனத்தாள் தயாரிப்பு எனப்படுகிறது. இதற்கு, சோளம், மக்காச்சோளம், கம்பு நேப்பியர் மற்றும் வீரிய ஒட்டுப்புற்கள், வேலிமசால், குதிரைமசால், காராமணி போன்ற பயறுவகைத் தீவனங்கள் ஏற்றவை. சோளம், மக்காச்சோளம், கம்பு நேப்பியர் மற்றும் வீரிய ஒட்டுப்புல் வகைகளுடன், பயறுவகைத் தீவனங்களை 3:1 அல்லது 4:1 என்னுமளவில் கலந்து ஊறுகாய்ப்புல்லைத் தயாரிக்க வேண்டும்.

பயறுவகைத் தீவனங்களை மட்டும் பயன்படுத்தினால், அவற்றிலுள்ள புரதங்கள் சிதைந்து விடும். சோளம், கம்பு போன்றவற்றை, கதிர்கள் பால் பிடிக்கும் போதும், ஒட்டுப்புல் வகைகளைப் பூக்கும் போதும், பயறு வகைகளை 25-30% பூக்கும் போதும், மக்காச்சோளத்தைப் பால் பிடித்த பிறகும் அறுவடை செய்து பயன்படுத்த வேண்டும்.

பதனக்குழி அல்லது சைலோ

ஊறுகாய்ப் புல்லைத் தயாரிக்க உதவும் காற்றுப் புகாத இடம், பதனக்குழி அல்லது சைலோ எனப்படும். இதைப் பல வகைகளில் அமைக்கலாம். இதன் அளவானது, பசுந்தீவன இருப்பு, கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் நீர் புகாத மேட்டுப் பகுதியில் இருக்க வேண்டும். பக்கவாட்டில் மண்சரிவு ஏற்படக் கூடாது. குழியின் ஆழம், விட்டத்தின் அளவைப் போல இரு மடங்காக இருக்க வேண்டும்.

பதனக்குழிகளின் வகைகள்

கோபுரப் பதனக்குதிர், சரிவுப் பதனக்குழி என இருவகைகள் உள்ளன.  பெரிய பண்ணைகளுக்குக் கோபுர வகை உகந்தது. இதில், செலவு அதிகமாகும். தரைக்கு மேல் உயரமாகக் குதிரைப் போல அமைத்து, காங்கிரீட் போட வேண்டும். சரிவுப் பதனக்குழி, ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சாய்வாக அமைக்கப்படும். இம்முறையில், தீவனத்தை எளிதாக வெளியே எடுக்கலாம்.

தயாரிப்பு முறை

முதலில் பசுந்தீவன ஈரப்பதத்தை 75-80 சதத்திலிருந்து 60-70 சதமாக்க, 2-3 மணி நேரம் வெய்யிலில் உலர்த்த வேண்டும். பிறகு, 2-3 அங்குல அளவில் நறுக்கி, குழியில் அடுக்க வேண்டும். 20-30 செ.மீ. வரையில் அடுக்கிய பின் நன்கு அழுத்தி, தீவன அடுக்கிலுள்ள காற்றை அகற்ற வேண்டும். அடுத்து, அதன் மீது 2% சர்க்கரைக் கரைசல், 1% அயோடின் கலந்த உப்புக் கரைசலை நன்கு தெளிக்க வேண்டும்.

பிறகு இதைப்போல மீண்டும் மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்கி, சர்க்கரை மற்றும் உப்புக் கரைசலைத் தெளித்து, அடுக்கின் உயரம், குழியின் மேல்மட்டத்தை விட 1-1.5 மீட்டர் உயரம் வரை நிரப்ப வேண்டும். அதன் பிறகு மேற்பகுதியை வைக்கோல் போன்ற கழிவுகள் அல்லது பாலித்தீன் பைகளால் மூடி, அதன் மேல் ஈர மண்ணைப் பூசி, காற்றும் நீரும் புகாமல் பாதுகாக்க வேண்டும்.

இப்படிச் செய்து 30-45 நாட்களில் தரமிக்க ஊறுகாய்ப்புல் கிடைக்கும். குழியைத் திறப்பதற்கு முன் மேற்பகுதியிலுள்ள தரம் குறைந்த தீவனத்தை அகற்ற வேண்டும். தரமான ஊறுகாய்ப் புல்லானது பச்சையாக, பழ வாசத்துடன், சாறு மிகுந்து 3.5-4.2 அமிலத் தன்மையுடன் இருக்கும்.

சிறிய பதனக்குழி

தானியங்களைச் சேமிக்கப் பயன்படுத்தும் மண் குதிர்களைப் பதனக் குழிகளாகப் பயன்படுத்தலாம். அவற்றில் நுண் துளைகள் இருப்பின் அவற்றை வெளிப்புறத்தில் களிமண் அல்லது சாணத்தால் மெழுகிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

காங்கிரீட் வளையங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோபுரப் பதனக்குதிரை அமைக்கலாம். நீர் மற்றும் அமிலக் கரைசல் வெளியேற, அடி வளையத்தில் சில துளைகளை இடலாம். 90 செ.மீ. அகலம், 1 மீட்டர் உயரம் மற்றும் 600 காஜ் தடிமனுள்ள பாலித்தீன் பையில் 12.5 கிலோ ஊறுகாய்ப் புல்லைத் தயாரிக்கலாம். இதைப்போல, 20-30 செ.மீ. உயரக் கோணிப் பைகளையும் பயன்படுத்தலாம். இவற்றைக் கையாளும் போது ஓட்டைகள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தரமான வைக்கோல் மற்றும் ஊறுகாய்ப்புல்லை அளித்தால், பாலுற்பத்தி மிகும். அன்றாடத் தேவைக்கான புல்லை மட்டுமே குழியிலிருந்து எடுக்க வேண்டும். கூடுதலாக எடுத்துக் காற்றோட்டமாக வைத்தால், ஊறுகாய்ப்புல் விரைவில் கெட்டு விடும்.

20-30% நார்த்தீவனத்துக்குப் பதிலாக ஊறுகாய்ப்புல்லை கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். பூஞ்சையால் பாதித்த மற்றும் புளிப்புச் சுவை மிகுந்த ஊறுகாய்ப் புல்லைக் கால்நடைகளுக்கு, குறிப்பாக ஆடுகளுக்கு வழங்கக் கூடாது. அன்றாடம் கறவை மாட்டுக்கு 15-20 கிலோ, வளர்ந்த கன்றுக்கு 4-5 கிலோ, கிடாய்க்கு 5-8 கிலோ, வளர்ந்த ஆட்டுக்கு 500 கிராம்-1கிலோ ஊறுகாய்ப் புல்லைக் கொடுக்கலாம்.

தரமுயர்த்தல்

பயறுவகைத் தீவனங்களைக் கொண்டு தயாரிக்கும் ஊறுகாய்ப் புல்லுடன், சோளமாவு, மக்காச்சோள மாவு, உருளைக்கிழங்கு மாவு மற்றும் பழக்கழிவுகளைச் சேர்த்தால், அதன் தரம் உயரும். 0.5-1% சுண்ணாம்பைச் சேர்த்தாலும் புல்லின் தரம் உயரும். புரதச்சத்துள்ள பிற தாவர மற்றும் புல் வகைகளையும் ஊறுகாய்ப் புல்லாகத் தயாரிக்கலாம். 


JEYANTHI

ரா.ஜெயந்தி,

ஆய்வு மாணவி, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை. 

ம.பூபதிராஜா, உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading