நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

Pachai boomi Cultivation of pulses in paddy field

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018

யறு வகைகள் உடல் வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் தேவையான புரதத்தைக் கொண்டுள்ளன. தானியங்களில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு புரதம் உள்ளது. ஒரு மனிதனுக்கு அன்றாடம் 80 கிராம் புரதம் தேவையென, உலகச் சுகாதார அமைப்புக் கூறுகிறது. ஆனால் 40 கிராமுக்கும் குறைவாகவே கிடைக்கிறது.

காவிரிப் பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன்பு, மெழுகு பதத்தில் பயறு வகைகள் விதைக்கப் படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது தொடர் பயிர்கள் (Relay cropping) என்று பெயர். நெல் தரிசு ஈரம் மற்றும் சத்துகளைப் பயன்படுத்திப் பயிரிடுவதால், அதிகச் செலவின்றிக் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் சுமார் 5.94 இலட்சம் எக்டரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு, 3.10 இலட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பயறுவகைத் தேவை 7 இலட்சம் டன் எனவும், 3.9 இலட்சம் டன் பற்றாக்குறை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. காவிரிப் பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் 1.46 இலட்சம் எக்டரில் உளுந்தும் பாசிப்பயறும் பயிரிடப்பட்டு, 32,000 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. பயறுவகை உற்பத்தி இந்தியளவில் எக்டருக்கு 623 கிலோ எனவும், தமிழகத்தில் 516 கிலோ எனவும் உள்ளது.

சாகுபடி நுட்பங்கள்

மண்வகை: களிமண் கலந்த இருமண் நிலம் மிகவும் உகந்தது. களர் மற்றும் உவர் நிலத்தில் பச்சைப்பயறு நன்கு விளையும். ஏடிடீ 3, 5, டிஎம்வி 1, கோ 4 ஆகிய உளுந்து வகைகளும், ஏடிடீ 3, கேஎம் 2 ஆகிய பாசிப்பயறு வகைகளும் நல்ல மகசூலைத் தரும். சான்று பெற்ற விதைகளை விதைக்க வேண்டும்.

பட்டம்: தைப்பட்டம் மிகவும் ஏற்றது. எனவே ஜனவரி 15இல் தொடங்கி பிப்ரவரி 15க்குள் விதைத்துவிட வேண்டும். ஏனெனில், அந்தக் காலத்தில் வயலில் காணப்படும் ஈரப்பதமும், பனி ஈரமும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

விதையளவு: ஏக்கருக்கு 10 கிலோ விதை போதும். இயந்திரம் மூலம் அறுவடை நடக்கும் இடங்களில் 12 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். சங்கிலி வடிவ இயந்திரம் மூலம் அறுவடை நடக்கும் வயல்களில் பயிர்கள் நன்கு வளரும்.

விதைநேர்த்தி: ஆறிய அரிசிக் கஞ்சியில், விதைகளுடன், ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா, 100 கிராம் சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலந்து நேர்த்தி செய்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும்.

விதைப்பு: சம்பா, தாளடி அறுவடை, ஆட்கள் மூலம் நடக்கும் இடங்களில், அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன்பும், இயந்திரம் மூலம் அறுவடை நடக்கும் இடங்களில் 4-6 நாட்களுக்கு முன்பும், மெழுகு பதத்தில் விதைக்க வேண்டும். இந்தப் பதம் இல்லையெனில் பாசனம் செய்து மெழுகு பதம் வந்ததும் விதைக்க வேண்டும்.

பயிர் எண்ணிக்கை: ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்க வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில் முளைகட்டிய விதைகளை மீண்டும் விதைத்துப் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். விதைத்த 20ஆம் நாள் ஏக்கருக்கு 400 மில்லி குயிஸலாபாய் ஈதைல் களைக்கொல்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைவழி ஊட்டம் அளித்தல்: அடியுரம் இடமுடியாத இடங்களில் 2 சத டிஏபி கரைசல், பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயறு ஒண்டரைத் தெளிக்க வேண்டும். பூக்கும் காலமான 25, காய்கள் பிடிக்கும் காலமான 45 ஆகிய நாட்களில், 2 சத டிஏபி கரைசல், ஒரு சத பொட்டாசியம் குளோரைடு, 40 பிபிஎம் பிளானோபிக்ஸ் கலந்த கரைசலை, காலையில் அல்லது மாலையில், இலைகளில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

2 சதக் கரைசல் தயாரிப்பு

ஒரு ஏக்கருக்குத் தயாரிக்க 4 கிலோ டிஏபி தேவை. இதை 10 லிட்டர் நீரில் முதல்நாள் இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தெளிந்த கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் 2 கிலோ பொட்டாசியம் குளோரைடு மற்றும் 160 மில்லி பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பயறு ஒண்டர்

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகப் பயறு ஒண்டர் தேவை. இதை ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் தருணத்தில் தெளித்தால், செடிகள் வறட்சியைத் தாங்கி அதிகளவில் காய்த்து, 20-25 சதம் வரையில் கூடுதல் மகசூலைக் கொடுக்கும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளைஈ, தத்துப்பூச்சி, இலைச்சிலந்தி ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, 3 சத வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது 5 சத வேப்பம் பருப்புக் கரைசலைத் தெளிக்கலாம். அல்லது ஏக்கருக்கு டைமெத்தயேட் 30 ஈசி 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்கலாம்.

காய்களைத் துளைத்துப் பருப்பைத் தின்னும் பச்சைக்காய்ப் புழு, பூ மற்றும் மொக்குகளைத் துளைத்துத் தின்னும் காய்ப்புழு, இலைகளைத் தாக்கிப் பெருஞ் சேதத்தை உண்டாக்கும் புகையிலை வெட்டுப் புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளையும், ஒரு விளக்குப் பொறியை வைத்து, தாய் அந்துப் பூச்சிகளையும் கவர்ந்து அழிக்க வேண்டும்.

இவற்றின் தாக்குதல் பொருளாதாரச் சேதநிலையைத் தாண்டினால், தயோடிகார்ப் 75 டபிள்யூபி மருந்து 250 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் 20ஈசி மருந்து 500 மில்லி அல்லது டைகுளோர்வாஸ் 76ஈசி மருந்து 400 மில்லியை, 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். மேலும், இதைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, டைமெத்தயேட் 30 ஈசி மருந்து 200 மில்லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்எல் 200 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து, மாலையில் தெளிக்க வேண்டும்.

அறுவடை

80 சதத்துக்கும் அதிகமான காய்கள் முற்றியதும் தரை மட்டத்துக்குச் சற்று மேலே செடிகளை அறுவடை செய்ய வேண்டும். இதனால், மண்ணுக்குள் இருக்கும் வேர்கள் மண்வளத்தைப் பெருக்க உதவும்.


பயறு வகை RAJA RAMESH N

முனைவர் இராஜா ரமேஷ்,

உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading