குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!

பசு 11

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020

மது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், பருவமழை பொய்த்தல், விளை நிலங்கள் மனை நிலங்களாக மாறி வருதல், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால், வேளாண்மை நலிவுற்று வருகிறது. ஆகவே, தற்போது வேளாண் பெருமக்கள் கால்நடை சார்ந்த தொழில்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.

இப்போது நமது நாடு பாலுற்பத்தியில் முதன்மை நிலையை அடைந்துள்ளது. அதிக வருவாய் தரும் விவசாயப் பொருள்களின் பட்டியலில் பால் முதலிடத்தில் உள்ளது. சங்க காலம் முதல் ஒரு நாட்டின் செழிப்பு அதன் ஆவின் செல்வங்களைக் கொண்டே அமைகிறது. இவ்வகையில், நம் நாட்டின் பொருளாதாரத்தில் கறவை மாடுகளுக்கு என்றும் தனியிடம் உண்டு. 

அதனால் தான், செல்வத்தை மாடு என்னும் சொல்லால், கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை, என்று வள்ளுவர் கூறுகிறார். நாட்டில் பசுவளம் கொழித்தால் பால்வளம் கொழிக்கும். அதனால், மக்களிடம் மகிழ்ச்சி வளம் கொழிக்கும். ஏனெனில், பால் ஒரு முழு உணவாகும்.

நம் நாட்டின் பாலுற்பத்தி, எண்ணற்ற சிறு விவசாயிகள் மற்றும் கிராம மகளிரின் பங்களிப்பை ஆதாரமாகக் கொண்டுள்ளது. விவசாயத்தின் சார்புத் தொழிலாக இருந்த கறவை மாடு வளர்ப்பு முக்கியத் தொழிலாக மாறியுள்ளது. படித்த இளைஞர்களுக்குக் கால்நடை வளர்ப்பு நல்ல சுய தொழிலாகும். பாலுற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் வளமாக வாழலாம்.

எனவே, கால்நடை வளர்ப்பின் அனுகூலங்களை நன்கறிந்த தமிழக அரசு, விலையில்லாக் கறவை மாடுகள் திட்டம், விலையில்லா ஆடுகள் திட்டம், இறைச்சிக்கோழி, முட்டைக்கோழி மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பை மானிய உதவியுடன் செயல்படுத்தும் திட்டம், பசுந்தீவன உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் நோக்கம், ஒருவனுக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருதலே போற்றுதற்கு உரியது என்னும் முதுமொழியைச் செயல்படுத்துவதாகும்.

அரசின் விலையில்லாக் கறவை மாடுகள் திட்டம், செம்மையாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள், கால்நடை மருத்துவர்களுடன் சென்று தங்களுக்குத் தேவையான மாடுகளை வாங்கி வருகிறார்கள். தரமான கறவை மாடுகளைத் தேர்வு செய்து வாங்கினால் தான் நல்ல பயனை அடைய முடியும். தரமான கறவை மாடு எப்படியிருக்கும்?

தரமான கறவை மாடு

ஒரு பசுவின் உற்பத்தித் திறன் என்பது, பாரம்பரிய உற்பத்தித் திறன், தனி மாட்டின் உற்பத்தித் திறன், சந்ததியின் உற்பத்தித் திறன் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஆனால், நடைமுறையில் இவற்றை அறிவது எளிதல்ல. ஆனாலும், தரமான கறவை மாடு என்பதற்குச் சில வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

கறவை மாட்டைச் சந்தைக்குச் சென்று வாங்கக் கூடாது. ஏனெனில், உண்மையான பாலுற்பத்தியை அறிய முடியாது. தொற்று நோய் பரவும் வாய்ப்பும் உண்டு. எனவே, கறவை மாடுகள் வளரும் வீடுகள் அல்லது பண்ணைக்குச் சென்று வாங்க வேண்டும். கலப்பின ஹோல்ஸ்டேய்ன், கலப்பின ரெட்டேன், ஜெர்ஸி போன்ற பசுக்களையும், கலப்பின முர்ரா எருமைகளையும் வாங்கலாம்.

பல மாதங்களுக்குப் பாலுற்பத்தி இருக்கும் வகையில், கன்றை ஈன்று ஒரு மாதத்துக்குள் இருக்கும் மாட்டை வாங்க வேண்டும். கிடேரிக் கன்றுள்ள மாட்டைப் பார்த்து வாங்கினால், அந்தக் கன்று ஓராண்டில் இன்னொரு பசுவாக உருவாகிப் பயன்படும். பால்மடி பெருத்து மென்மையாக இருக்க வேண்டும். நான்கு காம்புகளும் சீராக, மெதுவாக, அதிகச் சதையின்றியும், காம்புத் துளைகள் சிறிதாக, பீய்ச்சும் போது பிசிராமல் பால் வருவதாகவும் இருக்க வேண்டும்.

பாலின் அளவை அறிந்து கொள்ள, காலை, மாலை, அடுத்த நாள் காலை என, மூன்று நேரம் கறந்து பார்க்க வேண்டும். தினமும் பத்து லிட்டருக்குக் குறையாமல் கறக்கும் பசுவையும், எட்டு லிட்டருக்குக் குறையாமல் கறக்கும் எருமையையும் வாங்க வேண்டும். மாட்டின் மடியிலிருந்து வயிற்றுப் பகுதியை நோக்கி ஒரு இரத்தக்குழாய் ஓடும். இது பால் இரத்தக்குழாய் எனப்படும். இந்தக் குழாய், நீண்டும், பெருத்தும், அதிக வளைவுகளைக் கொண்டும் இருக்க வேண்டும். இத்தகைய மாடு நன்கு கறக்கும்.

பால் மாட்டின் முன்னால் நின்று பார்த்தால் அதன் நெஞ்சுப்பகுதி விரிவாக இருக்க வேண்டும். இதனால், அதன் முன்னங் கால்கள் சிறிது விரிந்து நெஞ்சுக்கு அதிக இடம் தந்ததைப் போலத் தெரியும். இத்தகைய மாடு நன்கு சுவாசிக்க ஏதுவான நுரையீரலைக் கொண்டதாக இருக்கும். பால் மாட்டின் பின்னால் நின்று பார்த்தால், அதன் பின்னங் கால்கள் மடியைத் தாங்காமல் விரிந்துள்ளதைப் போல இருக்கும். இத்தகைய மாட்டில் பால் அதிகமாக இருக்கும். உதைக்காத மாடாகப் பார்த்துப் பிடிக்க வேண்டும்.

மாட்டின் வெளியில் தெரியும் இனப்பெருக்க உறுப்புப் பெரிதாகவும், அதன் இரண்டு உதடுகளும் ஒரே சீராகவும் இருக்க வேண்டும். மாட்டின் பின்புற இடுப்பு எலும்புகள் அகலமாக விரிந்திருக்க வேண்டும். இது, கருப்பையில் உள்ள கன்றின் வளர்ச்சிக்கும், ஈனும் போது கன்று எளிதாக வெளிவரவும் ஏதுவாக இருக்கும். மாட்டின் தோல் மென்மையாக, பளபளப்பாக இருக்க வேண்டும். மூக்கு வியர்வையுடனும், கண்கள் ஒளி மிகுந்தும் இருக்க வேண்டும்.

வாலின் அடிப்புறம் தடித்தும், வரவரக் குறுகியும், வாலின் நுனிமயிர் குஞ்சம் போலும் இருக்க வேண்டும். மாட்டின் முதுகு மேடு பள்ளம் மற்றும் திமிலின்றி இருக்க வேண்டும். வயிறு பெருத்து அகலமாக இருக்க வேண்டும். இது, போதுமான தீவனத்தைச் சாப்பிட்டு, செரிக்க ஏதுவாக இருக்கும். பசுவின் கொம்புகள் சிறிதாகவும், எருமைக் கொம்புகள் வளைந்தும் இருக்க வேண்டும். யாரையும் முட்டக் கூடாது. இத்தகைய பண்பு நலன்களைக் கொண்ட மாட்டை வாங்கினால் பால்வளம் பெருகும்.


பசு VISHA 1 e1628798135240

முனைவர் ப.விஷா,

மரு.அ.இளமாறன், கால்நடை மருத்துவக் கல்லூரி, 

ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading