இராஜபாளையம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், பருத்தி சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி திருவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில், இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் வீரபத்திரன், பருத்தி சாகுபடி முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.சுரேஷ், பருத்திச் செடிகளைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய்ப்புழுத் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளை எடுத்துக் கூறினார்,
பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.ஆனந்த், பருத்தி இரகங்கள் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்கமாக எடுத்துரைத்தார். விதை ஆய்வு வேளாண்மைத் துணை இயக்குநர் விஜயா, பருத்தி விதைகளை வாங்கும் போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.
மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கணேசன், பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் வகைகள், அவற்றில் உள்ள சத்துகள் மற்றும் மண்ணாய்வு முடிவின்படி உரமிடுவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறினார். இராஜபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) தனலட்சுமி, பருத்தி சாகுபடித் திட்டங்கள் மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் இடுபொருள்களைப் பற்றி விளக்கிக் கூறினார்.
மேலும் இப்பயிற்சியின் போது, விவசாயிகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, வயல்வெளி பிரச்சினைகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் உத்திகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டன.
நிறைவாக, இராஜபாளையம் வட்டாரத் துணை வேளாண்மை அலுவலர் விநாயகமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜீவா, முனியப்பன், அட்மா தொழில் நுட்ப மேலாளர் வனஜா ஆகியோர் செய்திருந்தனர்.
இராஜபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.