கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
வண்ணமீன் என்னும் அலங்கார மீன் வளர்ப்பு, பொழுது போக்காகவும், வேலை வாய்ப்பாகவும் உள்ளது. வண்ணமீன் வணிகம் உலகளவில் நடைபெறுகிறது. இதில் நம் நாட்டின் பங்கு ஒரு சதத்துக்கும் குறைவுதான். வண்ணமீன் வளர்ப்பு மற்றும் உற்பத்திப் பண்ணைகள் சென்னை, மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு அருகில் இருப்பதால், மகளிர் சுய உதவிக் குழுவினர், வேலையில்லா இளைஞர்கள் வண்ணமீன் வளர்ப்பிலும், வண்ண மீன் வளர்ப்புத் தொட்டிகள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டலாம்.
பண்ணைக்கான இடத்தேர்வு
மணல், களிமண், வண்டல் மண் கலந்த இடம், நல்ல நீர்ப்பிடிப்புத் திறனை உடையதாக இருக்கும். அந்த இடத்தில் ஆண்டு முழுவதும் நல்ல நீர் கிடைக்க வேண்டும். மீன்வளர்ப்புக் குளம் செவ்வக வடிவில் இருக்க வேண்டும். நீர்வரத்து, நீர் வெளியேற்றுக் கால்வாய்களில், நீர் புகுமடை, நீர் வடிமடையை அமைத்து அவற்றில் நைலான் வலைகளை, தடுப்பு வலைகளாகப் பயன்படுத்த வேண்டும்.
வளர்ப்புக்கேற்ற மீன்கள்
இனப்பெருக்க அடிப்படையில், அலங்கார மீன்களை இரு வகையாகப் பிரிக்கலாம். குட்டிகளைப் போடும் வகையில், கப்பீஸ், மோலி, பிளாட்டி ஆகிய மீன்கள் முக்கியமானவை. முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கும் வகையில், பொன்மீன், டெட்ரா, பார்ப்ஸ், டேனியோஸ், கோய்கார்ப், ஏஞ்சல், கௌராமி, போராளி, ஆஸ்கர் ஆகிய மீன்கள் அடங்கும்.
உணவு வகைகள்
வண்ண மீன்களுக்கு உயிர் மற்றும் உலர் உணவுகளைக் கொடுக்கலாம். உயிரின உணவுகளில் இன்புசோரியா, டேப்னியா, டியூபிபெக்ஸ், கொசுப்புழு, மண்புழு, இரத்தப்புழு, ஆர்டீமியா, ரோட்டிபர் ஆகியன அடங்கும். உலர் உணவைத் தயாரிக்க, அரிசித்தவிடு, கடலைப் புண்ணாக்கு, மீன்தூள், இறால் தலைத்தூள், கிழங்கு மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதன் ஈரப்பதம் 10 சதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
நீர்த்தாவரங்கள்
நீர்த்தாவரங்கள் தொட்டிகளில் அழகு சேர்ப்பதுடன், மீன்களின் சுவாசத்துக்குத் தேவையான பிராண வாயுவையும் உற்பத்தி செய்கின்றன. செரட்டோபில்லம், ஹைடிரில்லா, வேலம்பாசி, நஜாஸ், பொட்டோ மேஹிடான், கபோம்பா ஆகியன முக்கியமான நீர்த்தாவரங்கள். இனப்பெருக்கக் காலத்தில், மீன் முட்டைகள் ஒட்டிக் கொள்ளவும், குஞ்சுகள் பாதுகாப்பாக மறைந்திருக்கவும், இந்தத் தாவரங்கள் உதவுகின்றன.
இனப்பெருக்கம்
குட்டியிடும் மீன்கள்: வண்ணமீன் வளர்ப்பை முதன்முதலாகத் தொடங்குவோர், குட்டியிடும் மீன்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது நல்லது. ஏனெனில், ஆண் பெண் வேற்றுமையை எளிதாக அறிந்து அவற்றைப் பிரிக்க முடியும். ஆண் பெண் இணைகளைச் சேர்ப்பதற்கு முன், தனித்தனியாக உணவிட்டுத் தயார்ப்படுத்த வேண்டும். நீரின் கார அமிலத் தன்மை 7.2-7.5 வரை இருத்தல் நல்லது. சிமெண்ட் அல்லது கண்ணாடித் தொட்டிகளில், தேவையான அளவில் ஆண் பெண் மீன்களை இணை சேர்க்க வேண்டும்.
ஒருமுறை ஆண்மீன் மூலம் பெற்ற விந்தணுக்களை, பெண்மீன், பத்து மாதங்களுக்குத் தன் சினைப்பையில் பாதுகாப்பாக வைத்திருக்கும். அவற்றைக் கொண்டு தொடர்ந்து உற்பத்தியாகும் முட்டைகள் கருவாக்கப்படும். பெண் மீன்களில் கருவாக்கம் முடிந்ததும் ஆண் மீன்களைப் பிரித்துவிட வேண்டும். கருவின் வளர்ச்சி, மீனினங்கள் மற்றும் அவற்றின் வெப்ப நிலையைப் பொறுத்து 3 முதல் 8 வாரங்கள் வரையில் வேறுபடும்.
ஒருமுறை கருவுற்ற பெண் மீன், 5-6 வாரத்துக்கு ஒரு தடவை 8-10 குட்டிகளைப் போடும். குட்டிகளைப் போடும் மீன்களில் சில, தங்களின் குட்டிகளையே உண்ணும். ஆகையால், தாய் மீன்களை வேறு தொட்டிக்கு மாற்றிவிட வேண்டும். நீரிலுள்ள நுண்ணுயிர்கள், இன்புசோரியா, வேகவைத்த முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை, பிறந்த குஞ்சுகளுக்கு உணவாக வழங்கலாம்.
முட்டையிடும் மீன்கள்: இந்த மீன்களை, பருவமடைந்த பிறகு, நிற வேற்றுமை மற்றும் உப்பிய வயிற்றுப் பகுதியைக் கொண்டு கணிக்க முடியும். பருவமடைந்த ஆண் பெண் மீன்களுக்கு, தாவரம் மற்றும் விலங்கினப் புரதம் நிறைந்த உணவுகளை அளிக்க வேண்டும். மேலும், உயிருள்ள புழுக்களையும் வழங்கி, நீரின் தரத்தைப் பராமரிக்க வேண்டும். தொட்டியில், ஒரு பெண் மீனுக்கு இரண்டு ஆண் மீன்களை இணை சேர்க்க வேண்டும்.
பெரும்பாலான மீன்களின் முட்டைகள் ஒட்டும் தன்மையுடன் இருக்கும். அதனால், மீன்களின் மொத்த எடையில் 5-6 மடங்கு எடையுள்ள நீர்ப்பாசிகள் அல்லது பின்னல் நீக்கப்பட்ட நைலான் கயிறுகளைத் தொட்டியில் போட வேண்டும். இப்படிச் செய்த ஓரிரு நாட்களில் இனப்பெருக்கம் நடந்து, பெண் மீன்களால் சிதறப்படும் முட்டைகள் பாசியுடன் ஒட்டிக் கொள்ளும்.
பின்னர், இறந்த வெண்ணிற முட்டைகளை நீக்கிவிட்டு, கருவுற்ற ஆரஞ்சு நிற முட்டைகளுடன் கூடிய பாசி அல்லது நைலான் கயிற்றை, குஞ்சு பொரிக்கும் தொட்டிக்கு மாற்ற வேண்டும். நீரின் வெப்ப நிலையைப் பொறுத்து 60-72 மணி நேரத்தில் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்படும். அந்தக் குஞ்சுகள் தங்களிடமுள்ள கருவை உண்டு 3 நாட்கள் வரையில் வளரும். பிறகு, இன்புசோரியா, நுண்ணுயிர்களை உணவாக அளித்துக் காக்க வேண்டும். அடுத்து, பாப்னியா, இரத்தப்புழு ஆகியவற்றை அளித்து வளர்க்க வேண்டும்.
முனைவர் கி.சிவக்குமார்,
க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.