கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020
தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947-இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. பின்னர் கேரளத்தில் குமரக்கோம் மற்றும் பலராமபுரத்தில் மண்டல ஆய்வு மையங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடகத்தில் அரிசிக்கரை, ஆந்திரத்தில் அம்பாஜிப்பேட்டை, மராட்டியத்தில் இரத்தினகிரி ஆகிய இடங்களில் மண்டல ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. தமிழகம் வேப்பங்குளத்தில் 1958-இல் மண்டலத் தென்னை ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, கோவை மாவட்டம் ஆழியாரில் தென்னை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது. இங்குத் தென்னை உழவியல், மரபியல் மற்றும் நோய், பூச்சிகள் சார்ந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.
தென்னை இரகங்கள்
நெட்டை இரகம்: இது பருத்த தண்டுடன் நீண்டு வளரும். தூர் சற்றுப் பெரிதாக அதிக வேர்களுடன் இருக்கும். ஓலைகள் தடித்து நீண்ட மட்டைகளுடனும், ஓலை இணுக்குகள் சற்றுப் பெருத்தும் இருக்கும். 4-5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஆண் பூக்களும் பெண் பூக்களும் வெவ்வேறு காலத்தில் முதிர்வதால், அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே இனப்பெருக்கம் நடக்கும். பருப்பு அதிகக் கனத்தில் கடினமாக இருக்கும். 66-70% எண்ணெய் இருக்கும். இது 60-70 ஆண்டுகள் காய்க்கும்.
இது வளரும் நாடுகளின் பெயரால் அழைக்கப்படுகிறது. எ.கா: மலேசிய நெட்டை, சிலோன் நெட்டை, அந்தமான் நெட்டை. இந்தோனேஷியாவில் தோன்றியதாகக் கருதப்படும் ஒருவித நெட்டை இரகத்தின் பூங்குலைகள் பனம்பாளையைப் போலவே நீண்டு உருண்டிருக்கும். இந்தப் பாளையில் நுங்குகளைப் போலத் தேங்காய்கள் அடுக்கப்பட்டிருப்பதால், இது பனைத் தென்னை அல்லது பெண் தென்னை எனப்படுகிறது. பிலிப்பைன்சில் உள்ள ஒருசில நெட்டை மரங்களின் பருப்பு, வெண்ணெய்யைப் போலப் பசுமையாகவும் இனிப்பாகவும் உள்ளது. எனவே, இந்தத் தென்னை மேக்கபுனா அல்லது தயிர்த் தேங்காய் மரம் எனவும் அழைக்கப்படுகிறது.
குட்டை இரகம்: இது, சற்றுக் குட்டையாக வளரும். தண்டு, ஓலை, தூர் ஆகியன சற்றுச் சிறுத்து இருக்கும். வேர்கள் நெட்டை இரகத்தை விடக் குறைவாக இருக்கும். 3-3.5 ஆண்டுகளில் பூக்கும். பூங்குலைகளில் நெட்டை இரகத்தைக் காட்டிலும் அதிகமான பெண் பூக்கள் இருக்கும். இதன் ஆண் மற்றும் பெண் பூக்கள் ஏறக்குறைய ஒரே நேரத்தில் முதிர்வதால், பெரும்பாலும் தன்மகரந்தச் சேர்க்கையே நடக்கிறது. தேங்காயின் நார்ப்பகுதி சிறுத்து இருக்கும். பருப்பும் கனமின்றி இருப்பதால், எண்ணெய்ச் சத்தும் குறைவாகவே இருக்கும். இது 30-40 ஆண்டுகள் காய்க்கும். இளநீருக்காக அதிகளவில் பயன்படுவதால், இளநீர் இரகம் எனவும் இது அழைக்கப்படும்.
இதன் ஓலை மட்டைகள் மற்றும் தேங்காயின் நிறம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பாக இருப்பதால், இந்த இரகம் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. மலேசியன் பச்சை, இலங்கை இராத்தெம்புலி, இந்திய சவ்காட் குட்டை போன்ற இரகங்களில், நெட்டை மற்றும் குட்டை இரகக் குணங்கள் கலந்துள்ளன.
வீரிய ஒட்டு இரகம்: தென்னையின் விரைவான வளர்ச்சி, அதிக விளைச்சல் ஆகியவற்றைச் செயற்கையாகக் கருவொட்டுச் செய்து, பெறப்படும் காய்களிலிருந்து உருவாக்கப்படுவது வீரிய ஒட்டு இரகமாகும். மரபியல் கொள்கைப்படி வீரிய குணங்கள் அமைந்திட, இரண்டு மாறுபட்ட குணங்கள் தேவை. ஆகவே, ஆண், பெண் தென்னையில் இவ்விதக் குணங்கள் அமையுமாறு தாய்மரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
கருவொட்டுக் கன்று உற்பத்திக்கு, கலப்பற்ற நெட்டை மற்றும் குட்டை இரக மரங்கள் அவசியம். ஆனால், நெட்டை மரங்களில் பெரும்பாலும் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் இனப்பெருக்கம் நடப்பதால், கலப்பற்ற நெட்டை மற்றும் குட்டை இரகங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே, தற்போது உருவாக்கப்படும் ஒட்டுத் தென்னையில், எல்லா வீரிய குணங்களும் இணைந்து கிடைப்பதில்லை.
நெட்டைxகுட்டை மற்றும் குட்டைxநெட்டை ஒட்டுக் கன்றுகள்: நெட்டை இரகத்தைத் தாயாகவும் குட்டை இரகத்தைத் தந்தையாகவும் வைத்து, மகரந்தச் சேர்க்கை மூலம் இணைத்து உருவாக்கும் ஒட்டுக்கன்று, நெட்டைxகுட்டை எனப்படும். குட்டை இரகத்தைத் தாயாகவும், நெட்டை இரகத்தைத் தந்தையாகவும் வைத்து, மகரந்தச் சேர்க்கை மூலம் இணைத்து உருவாக்கும் கன்று, குட்டைxநெட்டை எனப்படும். நெட்டை இரகத்தைத் தாயாகவும் தந்தையாகவும் இணைத்து உருவாக்கும் கன்று, நெட்டைxநெட்டை எனப்படும்.
தென்னை மரத்தில் ஆண் பூக்களும், பெண் பூக்களும் இருப்பதால், ஒரே மரத்தைப் பெண்ணாகவும் ஆணாகவும் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட நெட்டை மற்றும் குட்டை மரத்தை, நெட்டைxகுட்டை மற்றும் குட்டைxநெட்டை ஒட்டுக்கன்றுகள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் போது, இவற்றின் மூலம் தோன்றும் இருவித ஒட்டுக் கன்றுகளின் வளர்ச்சியிலும், காய்ப்புத்திறனிலும் மாறுதல்கள் இருப்பது இயல்பாகும்.
உள்நாட்டுக் குட்டைத் தென்னையைக் காட்டிலும் மலேசிய குட்டைத் தென்னை சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதன் காய்கள் உருண்டு பெருத்து இருப்பதுடன், பருப்பும் இளநீரும் அதிகளவில் உள்ளன. குட்டைத் தென்னை அதிக உயரமின்றி இருப்பதால், இம்மரத்தில் ஏறும் சிரமமின்றி மகரந்தச் சேர்க்கையைச் செய்திட முடியும். ஆகவே, மலேசிய குட்டைத் தென்னையைத் தாயாக வைத்து, மகரந்தச் சேர்க்கை மூலம் இணைத்து, ஒட்டுக் கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. குட்டைxநெட்டை ஒட்டுக்காய்கள் விரைவாக முளைப்பதும், கன்றுகள் வேகமாக வளர்வதும், 3-4 ஆண்டுகளில் பூப்பதும் தெரிய வந்துள்ளன. 4-7 வயதில், ஒவ்வொரு பாளையிலும் காய்கள் மிக அதிகமாக இருக்கும். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு குட்டைxநெட்டை மரங்களின் காய்ப்புத்திறன் சரியும்.
ஆழியாரிலிருந்து வெளியிடப்பட்ட இரகங்கள்
ஏ.எல்.ஆர் (சி.என்)1: இது அரசம்பட்டி நெட்டையில் இருந்து உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்தில் அதிக மகசூலைத் தருவது. ஓராண்டில் ஒரு மரம் 126 காய்களைத் தரும். கொப்பரை 131 கிராம் இருக்கும். ஒரு எக்டரில் கிடைக்கும் கொப்பரை 2.88 டன். எண்ணெய் அளவு 66.5%. மானாவாரிக்கும் இறவைக்கும் ஏற்றது.
ஏ.எல்.ஆர் (சி.என்)2: திப்தூர் நெட்டையில் இருந்து உருவாக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஓராண்டில் ஒரு மரம் 12 பாளைகளை விடும். ஒரு மரம் ஓராண்டில் குறைந்தது 109 காய்களையும், அதிகளவில் 140 காய்களையும் காய்க்கும். கொப்பரை 135 கிராம் இருக்கும். ஒரு எக்டரில் 2.57 டன் கொப்பரை கிடைக்கும். எண்ணெய் 64.7% இருக்கும். 7,400 காய்களில் இருந்து ஒரு டன் கொப்பரை கிடைக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். காண்டாமிருக வண்டு, கூன்வண்டு மற்றும் இலைக்கருகல் நோயை ஓரளவு எதிர்க்கும் திறனுண்டு.
ஏ.எல்.ஆர் (சி.என்)3: கெந்தாளிக் குட்டையில் இருந்து உருவாக்கப்பட்டது. இளநீருக்கு மிகவும் ஏற்றது. ஒரு காயில் 420 மில்லி இளநீர் இருக்கும். மூன்று ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். காய்கள் இளஞ்சிவப்பாக இருக்கும். ஓராண்டில் ஒரு மரம் 86 காய்களைத் தரும். ஈரியோபைட் என்னும் செம்பான் சிலந்தியின் தாக்குதலைத் தாங்கி வளரும்.
வேப்பங்குளத்தில் இருந்து வெளியான இரகங்கள்
வி.எச்.சி.1: இது இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் வீரிய ஒட்டு இரகமாகும். கிழக்குக் கடற்கரை நெட்டை மற்றும் மலேசிய பச்சைக் குட்டையில் இருந்து 1982 இல் உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் பூக்கும். ஓராண்டில் ஒரு மரம் 120 காய்களைக் காய்க்கும். கொப்பரை 142 கிராம் இருக்கும். எண்ணெய் 69 சதம் இருக்கும். கிழக்குக் கடற்கரை நெட்டை இரகத்தை விட 38% கூடுதலாக மகசூலைத் தரும்.
வி.எச்.சி.2: கிழக்குக் கடற்கரை நெட்டை மற்றும் மலேசிய மஞ்சள் குட்டையில் இருந்து 1988 இல் வெளியிடப்பட்டது. மூன்று ஆண்டுகளில் பூக்கும். ஓராண்டில் ஒரு மரம் 142 காய்களைக் காய்க்கும். கொப்பரை 149 கிராம் இருக்கும். எண்ணெய் 70% கிடைக்கும். வி.எச்.சி.1-ஐ விட அதிகக் காய்கள், கொப்பரை மற்றும் எண்ணெய்ச் சத்தைத் தரும். கிழக்குக் கடற்கரை நெட்டையை விடக் கூடுதலாக 55% மகசூலைத் தரும். மட்டையும் குலையும் சரிவதில்லை.
வி.எச்.சி.3: கிழக்குக் கடற்கரை நெட்டை மற்றும் மலேசிய ஆரஞ்சுக் குட்டையில் இருந்து 2000 இல் வெளியிடப்பட்டது. 3-4 ஆண்டுகளில் பூக்கும். ஓராண்டில் ஒரு மரம் 157 காய்களைத் தரும். கொப்பரை 162 கிராம் இருக்கும். 70% எண்ணெய் கிடைக்கும். வி.எச்.சி.2 இரகத்தை விட 9%, கிழக்குக் கடற்கரை நெட்டையைவிட 67% மகசூலைக் கூடுதலாகத் தரும். மட்டையும் குலையும் சரிவதில்லை.
வேப்பங்குளம் 3: அந்தமான் சாதாரண நெட்டையிலிருந்து உருவாக்கி 1994 ஆண்டில் வெளியிடப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் பூக்கும். ஓராண்டில் ஒரு மரம் 92 காய்களைத் தரும். கொப்பரை 176 கிராம் இருக்கும். 70% எண்ணெய் கிடைக்கும். மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது. அதிகக் கொப்பரை உள்ளது. கிழக்குக் கடற்கரை நெட்டையை விடக் கூடுதலாக 15% மகசூலைத் தரும்.
வேப்பங்குளம் 4: மேற்குக் கடற்கரை நெட்டையிலிருந்து உருவாக்கி 2008 இல் வெளியிடப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் பூக்கும். ஓராண்டில் ஒரு மரம் 159 காய்களைக் கொடுக்கும். கொப்பரை 136 கிராம் இருக்கும். எண்ணெய் 67.8% கிடைக்கும். மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது. கிழக்குக் கடற்கரை நெட்டையை விட 19%, வேப்பங்குளம்3-ஐ விட 49% மகசூலைக் கூடுதலாகத் தரும்.
வேப்பங்குளம் 5: LCOTxCCNT ஆகியவற்றில் இருந்து உருவாக்கி 2015 இல் வெளியிடப்பட்டது. 3-4 ஆண்டுகளில் பூக்கும். ஓராண்டில் ஒரு மரம் 161 காய்களைக் காய்க்கும். கொப்பரை 150 கிராம் இருக்கும். எண்ணெய் 70% கிடைக்கும். வி.எச்.சி.3-ஐ விட 11%, கிழக்குக் கடற்கரை நெட்டையைவிட 62.6% மகசூலைக் கூடுதலாகத் தரும். மட்டையும் குலையும் சரிவதில்லை.
முனைவர் வெ.சிவக்குமார்,
முனைவர் அ.சுப்ரமணியன், முனைவர் க.வெங்கடேசன்,
தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்-642101, கோவை மாவட்டம்.