கட்டுரை வெளியான இதழ்: மே 2021
தென்னையைத் தோப்பாக வளர்க்க, 25×25 அடி இடைவெளியும், வரப்புகளில் வளர்க்க 22 அடி இடைவெளியும் விட வேண்டும். மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும். பிறகு, குழிமண் மற்றும் மட்கிய உரத்தைக் கலந்து குழியில் இரண்டடி வரை நிரப்பி, அதில் காய் பதியும்படி கன்றை நட்டு, சுற்றியுள்ள மண் இறுகும்படி மிதித்துவிட வேண்டும். கன்றுகளை, வேர்கள் அறுபடாமலும், வடுக்கள் ஏற்படாமலும், நாற்றங்காலில் இருந்து எடுத்து அவை வாடுவதற்கு முன் நட்டுவிட வேண்டும்.
இதனால் விரைவில் புது வேர்கள் உருவாகும். கன்றுகளின் கிழக்கு, மேற்கில் சிறிய பனையோலைகளை ஊன்றி, சூரிய ஒளியில் இருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். 3-4 மாதம் வரையில் 2-3 நாட்கள் இடைவெளியில் தேவைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும். கன்றுகள் தூர் கட்டி வளரும் வரை, குழியில் அதிகமாக மண்ணைச் சேரவிடக் கூடாது. ஆண்டுக்கு 10 செ.மீ. வீதம் குழிகளை நிரப்பி, மூன்றாண்டுகள் கழித்து, தரைமட்டத்துக்கு மண்ணை நிரப்பி, கன்றுகளைப் பராமரிக்க வேண்டும்.
நடவுக்குழியும் இடைவெளியும்
வளர்ந்த தென்னையின் வேர்ப்பகுதி அல்லது தூரானது, ஒரு கன மீட்டர் சுற்றளவில் இருக்கும். இந்தப் பரப்பிலிருந்து 7,000-8,000 வேர்கள் உற்பத்தியாகும். இந்த வேர்ப்பகுதி முழுதும் மண்ணுக்குள் இருக்குமாறு நட்டு வளர்க்கப்பட்ட மரத்தின் தூரானது, பம்பர வடிவில் ஒரு கன மீட்டர் சுற்றளவில் இருக்கும். அதனால் தான் ஒரு கன மீட்டர் குழி பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த அளவுள்ள குழிகளில் நடப்பட்ட கன்றுகளில் 45 மாதங்களில் பாளைகள் வந்து விடும். மரங்களின் தண்டுப்பகுதி முழுதும் சீராக இருக்கும். வேர்களும் அதிகமாக இருப்பதால், புயலையும் தாங்கி நிற்கும்.
தென்னை நீண்ட ஓலைகளில் உள்ள பச்சையத்தையும் சூரிய ஒளியையும் பயன்படுத்தி மாவுப்பொருளைத் தயாரிக்கும். இந்நிலையில் ஒளி தடைபட்டால், மரத்தின் பல்வேறு செயல்களும் தடைபடும். இதனால், வளர்ச்சியும், பூக்கள் வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியும் தடைபடும். பாளைகளில் பெண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து, பெரும்பான்மைக் குரும்பைகள் வளராமல் உதிர்ந்து விடும். இதனால் விளைச்சல் வெகுவாகக் குறைந்து விடும்.
இவற்றைத் தவிர்த்து மரத்தின் காய்ப்புத் திறனை அதிகரிக்கத் தான் 25 அடி அல்லது 30 அடி இடைவெளி பரிந்துரை செய்யப்படுகிறது. இப்படி அதிக இடைவெளி இருக்கும் தோப்புகளில் 20 ஆண்டுக்குப் பிறகு, வாழை, கொக்கோ, அன்னாசி, குறுமிளகு, சேனைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்.
நடவு முறை
தென்னை நடவில் பல்வேறு முறைகள் உள்ளன. ஆனால், சதுர முறையில் நடுவது, பிற்காலத்தில் ஊடுபயிர் சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும். 25 அடி இடைவெளியில் ஒரு எக்டரில் 175 கன்றுகளை நடலாம். கன்றுகளை வாடுமுன் நட இயலாதநிலையில், நிழலான இடத்தில் மணலைப் பரப்பி அங்கே நட்டுப் பராமரித்தால், 15 நாட்கள் முதல் சில மாதங்கள் வரை காப்பாற்றலாம்.
முக்கோணம் மற்றும் சதுர நடவு
முக்கோண நடவும் சதுர நடவும் பொதுவான நடவு முறைகளாகும். முக்கோண முறையில் நெட்டை இரகத்துக்கு 25 அடியும், குட்டை இரகத்துக்கு 20 அடியும் இடைவெளி விட வேண்டும். முதல் வரிசையில் கன்றுகளைத் தெற்கு வடக்கு வரிசையில் நடுவதும், இரண்டாம் வரிசையில் முதல் மரத்துக்கு நேராக நடாமல் ஒன்று விட்டு ஒன்றாக நடுவதும் வழக்கில் உள்ளது. இதனால் மரங்கள் வளர்ந்த பிறகு அவற்றின் நிழல் ஒன்றின் மேல் ஒன்று விழாமல் இருக்கும். இம்முறை அடைப்பு நடவு முறை எனப்படும்.
வாய்க்கால் வரப்புகளில் ஒரே வரிசையில் மட்டும் நடுவதற்கு, 15-18 அடி இடைவெளியே போதும். பொதுவாக 22 அடி இடைவெளியில் நட்டால், முக்கோண முறையில் எக்டருக்கு 236 மரங்களும் சதுர முறையில் 204 மரங்களும் இருக்கும். 25 அடி இடைவெளியில் நட்டால் முக்கோண முறையில் 205 மரங்களும், சதுர முறையில் 178 மரங்களும் இருக்கும்.
சதுப்பு நிலத்தில் தென்னை நடவு
நீர் தேங்கி நிற்கும் சதுப்பு நிலங்களில் தென்னைகளை நடும் சூழல் ஏற்பட்டால், குழிகளைத் தோண்டுவதற்குப் பதிலாக 3-5 அடி உயர மண் குவியல்களை அமைத்து, அவற்றில் ஒரு அடி ஆழத்தில் குழிகளை எடுத்து, கன்றின் காய்ப்பகுதி மண்ணுக்குள் இருக்கும்படி நட வேண்டும். இது, குன்று நடவு எனப்படும். இப்படி நட்டு 4-5 ஆண்டுகள் கழித்து, இரண்டு கன்றுகளின் இடைவெளியில் உள்ள நீர்ப்பகுதியை மண்ணால் நிரப்பி, 3-5 அடி உயரம் மற்றும் அகலத்தில் வரப்பை அமைக்க வேண்டும்.
மண் குவியல்களில் நடப்பட்ட கன்றுகளின் தூர்கள், ஆழக்குழிகளில் நடப்பட்ட கன்றுகளின் தூர்களைப் போல மண்ணுக்குள் செல்வதால், பாதிப்பு ஏதுமின்றி வளர்ந்து காய்க்கத் தொடங்கும். காலப்போக்கில் சதுப்புநில நிலை மாறி, பெரிய வரப்புகளில் வளரும் தென்னைகளைப் போலச் செழிப்பாக வளரும். இந்த நடவு முறை, குட்டை நாடு மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள களர் நிலப் பகுதிகளில் இப்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
முனைவர் க.செ.விஜய் செல்வராஜ்,
முனைவர் ஆ.கார்த்திகேயன், தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்.
முனைவர் அ.பாரதி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை.