கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019
நாட்டுக்கோழி வளர்ப்புக் காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு அதிக இடமோ முதலீடோ தேவையில்லை. இலாப நோக்கமின்றி வீட்டுத் தேவைக்காக மட்டுமே சாதாரணமாக வளர்க்கப்பட்ட இக்கோழிகள், இன்று வாழ்க்கை ஆதாரமாகவே மாறியுள்ளன. ஒரு ஜோடிக் கோழிகளை வளர்த்தால் ஆண்டுக்கு 5,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
இத்தகைய நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்களில் முக்கியமானது, அவை ஒன்றையொன்று கொத்திக் கொள்வதாகும். இது, பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளிடம் தான் அதிகமாக உள்ளது. அதுவும் குஞ்சுப் பொரிப்பகங்களில் வாங்கி வளர்க்கப்படும் கோழிகளிடம் அதிகம். அடையில் பொரிக்கும் குஞ்சுகளிடம் கொத்திக் கொள்ளும் பழக்கம் இல்லை. இதற்கு, மரபுவழியும், மற்ற கோழிகள் மூலம் கற்றுக் கொள்வதும் முக்கியக் காரணங்களாகும்.
கோழிகள் கொத்திக் கொள்வதில் பல வகைகள் உள்ளன. காலைக் கொத்துவது, இறகுகளை மட்டும் கொத்திப் பிடுங்குவது, கொண்டையைக் கொத்துவது, ஆசனவாயைக் கொத்தி முட்டையை உடைத்து உண்பது, ஆசன வாயைக் கொத்திக் குடலையே வெளியே இழுத்துப் போட்டு இறப்பை ஏற்படுத்துவது என்று பல முறைகள் உள்ளன.
இளம் குஞ்சுகளில் தீவனப் பற்றாக்குறையால் காலைக் கொத்தும் பழக்கம் ஏற்படுகிறது. இட நெருக்கடியால் கொண்டையைக் கொத்தும் பழக்கம் ஏற்படுகிறது. நீர் மற்றும் தீவனக் குறையால், சிறகுகளைக் கொத்துதல், ஆசன வாயைக் கொத்துதல் ஆகியன நிகழ்கின்றன.
நீர் மற்றும் தீவனத் தொட்டிகள் குறைபாடு, புரதம், மெத்தியோனின், சோடியம் மற்றும் பாஸ்பரஸ், உப்புக் கூடுதலாகவும் குறைவாகவும் இருத்தல், மாவுச்சத்து அதிகமாகவும், நார்ச்சத்துக் குறைவாகவும் உள்ள தீவனத்தை அளித்தால், தோலுக்கு அடியில் அதிகமாகக் கொழுப்புப் படிந்து, தோலின் தன்மை பாதிக்கப்படும். இதனால், இறகுகள் பிடுங்குவதற்கு எளிதாகி விடுகிறது. அதிகளவு குருணைத் தீவனத்தை அளித்தால் உப்புக் குறைபாடு ஏற்படும். இதனால், சிறிதளவில் உண்ணும் கோழிகள், மீதமுள்ள நேரத்தில் மற்ற கோழிகளைத் கொத்தித் துன்புறுத்தும்.
தடுக்கும் வழிகள்
15-20 கோழிகளுக்கு ஒரு தீவனத்தொட்டி, ஒரு நீர்த் தொட்டியை வைக்க வேண்டும். சரிவிகித மற்றும் சத்தான தீவனத்தை வழங்க வேண்டும். தாதுப்புகளும், வைட்டமின்களும் தேவையான அளவில் இருக்க வேண்டும். குருணைத் தீவனத்தைக் கொடுக்கக் கூடாது. மாவுத் தீவனத்தைக் கொடுத்தால் உண்ணும் நேரம் அதிகமாகி, கோழிகள் கொத்திக் கொள்வது குறையும். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் உப்பு வீதம் கலந்து கொடுத்தால், கோழிகள் கொத்திக் கொள்வதைத் தடுக்கலாம்.
அதிகளவு நார்ச்சத்தும், சரிவிகிதக் கொழுப்புச் சத்துமுள்ள தீவனத்தை அளித்தால், இறகுகளைப் பிடுங்குதல், கொத்துதல் ஆகியவற்றைக் குறைக்கலாம். அகத்தி, முருங்கை, வேலிமசால், வேப்பிலை போன்ற பச்சிலைகளைக் கொடுத்தால் கொத்தும் பழக்கும் குறையும்.
பராமரிப்புக் குறைகள்
வெவ்வேறு வயதுள்ள கோழிகளை ஒரே கூண்டில் வளர்ப்பது. மாதந்தோறும் குடற்புழு நீக்க மருந்தைத் தராமல் இருப்பது. தீவனம் மற்றும் பண்ணைப் பராமரிப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்கள். போதுமான தீவன, நீர்த் தொட்டிகள் இல்லாதது. குறைந்த இடத்தில் நிறையக் கோழிகளை வளர்ப்பது. தீவிர முறையில் நாட்டுக் கோழிகளை அடைத்து வைத்து வளர்ப்பது. ஆழ்கூளத்தைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பது.
பராமரிப்பில் கவனம்
நாட்டுக் கோழிகளைப் பண்ணையில் அடைத்து வளர்க்கக் கூடாது. வெளியே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். இதனால், கோழிகள் இரைக்காக அலைந்து திரிவதால் கொத்தும் பண்பு குறைந்து விடுகிறது. பண்ணை முறையில் வளர்க்கும் போது ஆழ்கூளத்தை நன்றாகப் பராமரிக்க வேண்டும். கொத்தும் கோழிகளின் மூக்கை வெட்டி விட்டால், பண்ணைக்கோழி என நினைத்துக் குறைந்த விலைக்கு வணிகர்கள் கேட்பதால் இழப்பு ஏற்படும். கோழிகளுக்குத் தேவையான இடவசதி இருக்க வேண்டும். ஒரே வயதுள்ள கோழிகளை மட்டுமே ஒரு கூண்டில் வளர்க்க வேண்டும்.
தாய்க்கோழிகளுடன் வளரும் குஞ்சுகளிடம் கொத்தும் பழக்கம் குறைவாக இருக்கும். நோயுற்ற மற்றும் வயதான கோழிகளைப் பிரித்து வளர்க்க வேண்டும். கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்துக் கிடைக்க, ஒரு தட்டில் கிளிஞ்சலைப் பொடியாக்கி வைக்க வேண்டும். மாதம் ஒருமுறை என ஆறு மாதம் வரை குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். பின்பு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி வெவ்வேறு மருந்தைக் கொடுக்க வேண்டும்.
இந்த முறைகளை நாட்டுக்கோழி வளர்ப்பில் பின்பற்றினால், கோழிகள் கொத்திக் கொள்ளாமல் இருக்கும். சீக்கிரம் முட்டையிடும். அடையில் அமர்ந்து குஞ்சுகளைப் பொரிக்கும். மூக்கை வெட்டத் தேவையில்லை. பண்ணை வருமானமும் கூடும்.
மரு.ஏ.ஆர்.ஜெகத் நாராயணன்,
முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, சேலம். +91 99442 69950