நன்கு பராமரித்தால் செம்மறி ஆடுகளில் ஈற்றுகளை அதிகரிக்கலாம்!

செம்மறி ஆடு Chemmari

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021

செம்மறி ஆடுகள் இயற்கையாக வளரும் புல் வகைகளை உண்டு, வறட்சியைத் தாங்கி வளரும் உயிரினம் ஆகும். இந்த ஆடுகளை நடமாடும் வங்கி என அழைப்பர். ஏனெனில், இவற்றை உடனடியாக விற்றுப் பணத் தேவையைச் சரி செய்து கொள்ள முடியும். இறைச்சித் தேவை நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில், செம்மறி ஆடுகளை முறையாக வளர்த்தால் நல்ல இலாபத்தைப் பெறலாம்.

அண்மையில் எடுக்கப்பட்ட இருபதாவது கால்நடைக் கணக்கெடுப்பின் மூலம், தமிழகத்தில் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை 6.36% குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பெருகி வரும் நகரமயமாதல், குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள் ஆகியன, செம்மறியாடு வளர்ப்பில் மிகப்பெரிய சவாலாக உள்ளன. எனவே, பாரம்பரிய முறைகளுடன் அறிவியல் முறைகளையும் கடைப்பிடித்து வளர்க்க வேண்டும்.

கொட்டகை மேலாண்மை

பகலில் மேய்ச்சலுக்குச் சென்று வரும் செம்மறி ஆடுகளை இரவில் பாதுகாக்க நல்ல கொட்டகை வேண்டும். ஆடுகள் காலையில் மேய்ச்சலுக்குச் சென்றதும் கொட்டகையைத் தூய்மைப்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் கொட்டகையில் நீர்த் தேங்கக் கூடாது. ஏனெனில், சகதியான தரை, கால் குளம்புகளில் புண்களை உருவாக்கும்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவக் காலங்கள் முடிந்து பனிக்காலம் தொடங்கும் நேரத்தில், உண்ணிகள், பூச்சிகள் மூலம் நோய்கள் பரவும். எனவே, இந்தக் காலத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, கொட்டகையின் இடுக்குகள் மற்றும் விரிசல்களில் உண்ணியைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தெளித்து நோய்களைக் குறைக்க வேண்டும்.

இனப் பெருக்கம்

செம்மறி ஆடுகள் ஆண்டுக்கு ஒரு குட்டியை ஈனும் என்னும் எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனால், நன்கு பராமரித்தால் இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈற்றுகளைப் பெற முடியும். ஆடுகளைச் சினை சேர்ப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன், தினமும் 250 கிராம் அடர் தீவனம் கொடுக்க வேண்டும். இதைப் பெட்டை ஆடுகளைச் செழுமைப்படுத்துதல் என்று கூறுவர். இதனால், ஆடுகள் விரைவாகச் சினைக்கு வருவதுடன், சினை முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஈனும்.

கிடாக்கள் முட்டிக் காயப்படுத்தாமல் இருக்க, சினையாடுகளைத் தனியே பிரித்து வளர்க்க வேண்டும். மேலும், மேய்ச்சலின் போது கிடாக்களின் இடது பின்னங்காலை வலது பின்னங்காலுடன் கயிற்றால் கட்டி விட்டால்,  பருவத்துக்கு வராத குட்டிகளைக் கிடாக்கள் தொந்தரவு செய்யாது.

தீவனம்

பண்ணைப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு தீவனச் செலவாகும். சத்துமிகு தீவனத்தைச் சரிவிகித அளவில் கொடுத்தால், தீவனச் செலவைக் குறைத்து நல்ல வளர்ச்சியைப் பெறலாம். உலர் தீவனத்தை விட பசுந்தீவனத்தில் அதிகமாக இருக்கும், புரதம், தாதுப்புகள் மற்றும் ஏ, இ போன்ற உயிர்ச் சத்துகள், இளங்குட்டிகள் நன்கு வளர்வதற்கு உதவும்.  கடலைச்செடி, சோளத்தட்டை போன்ற உலர் தீவனங்களைப் பசுந்தீவனத்தில் சேர்த்துக் கொடுத்தால் செரிக்கும் திறன் அதிகமாகும்.

உடல் நலம் காத்தல்

மாடுகளுக்குக் கலப்புத் தீவனம் கொடுப்பதைப் போல, ஆட்டுக்கு 100 கிராம் வீதம் கலப்புத் தீவனத்தைக் கொடுத்து வளர்த்தால், செம்மறி ஆடுகளின் உற்பத்தித் திறன் அதிகமாகும். கோடைக் காலத்தில் ஆடுகள் மேய்ச்சலில் இருந்து திரும்பியதும், கொட்டிலில் அடைத்து வேப்பிலை மற்றும் நொச்சியைத் தீயிலிட்டுப் புகை மூட்டம் போட்டால், ஆடுகளைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் உண்ணிகளைக் குறைக்கலாம். இதை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். குட்டிகள் மண்ணைத் தின்னாமல் இருக்க, கொட்டகையின் ஒரு மூலையில் அகத்தி இலைகளைக் கட்டித் தொங்க விடலாம்.

குடற்புழு நீக்கம்

குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியான அளவில் குடற்புழு நீக்க மருந்துகளை மாற்றி மாற்றி ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆடுகளின் புழுக்கைகளை ஆராய்ந்து குடற் புழுக்களின் தன்மைக்கு ஏற்ப குடற்புழு நீக்க மருந்தைத் தர வேண்டும்.

ஆடுகளின் கண்களின் இரத்தப்போக்கை ஆராய்ந்து, அதை, பமாச்சா (FAMACHA Chart) விளக்கப் படத்துடன் ஒப்பிட்டு, அதற்கேற்பவும் குடற்புழு நீக்கம் செய்யலாம். குளக்கரைகளில் ஆடுகள் மேய்வதைத் தடுக்க வேண்டும். ஏனெனில், தட்டைப் புழுக்களுக்கு இடைநிலைக் காரணிகளாகச் செயல்படும், நத்தைகள் மூலம் ஆடுகளுக்கு பேசியோலோசிஸ் என்னும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

தடுப்பூசி

மழைக்காலத்தில் ஆடுகளை, அடைப்பான், தொண்டை அடைப்பான், கோமாரி, துள்ளுமாரி போன்ற நோய்கள் தாக்கும். எனவே, கோடையின் இறுதி மாதங்களில் இந்த நோய்களைத் தடுக்கும் தடுப்பூசிகளை ஆடுகளுக்குப் போட வேண்டும். மழைக்காலம் முடிந்த பிறகு பூச்சிகள் மூலம், நீலநாக்கு நோய் ஏற்படலாம்.

எனவே, புதர்ப் பகுதிகளில் ஆடுகளை மேயவிடக் கூடாது. மேலும், மழைக்காலத்தின் பிற்பகுதியில் நீலநாக்கு நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும். கோடையில் அம்மை நோயும் பரவும். இதைத் தடுக்க, கோடைக்காலம் தொடங்கு முன்பு, அம்மை நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும்.

செம்மறி ஆடுகளை வளர்க்கும் இடத்தைப் பொறுத்து அவற்றுக்குத் தேவையான தடுப்பூசியைக் கால்நடை மருத்துவர் மூலம் செலுத்த வேண்டும். நோயுற்ற ஆடுகளைத் தனியே பிரித்துப் பராமரித்தால், நோய்ப் பரவலைத் தடுக்கலாம். காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பொருளாதார இழப்பைக் குறைக்கலாம்.


.பரமசிவம்,

த.சாந்தி, செ.ஜோதிகா, அ.கிளமென்ட் எபினேசர் ஹென்றி,

கால்நடைப் பண்ணை வளாகத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி,

ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading