கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த உணவுகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவற்றில் மிகுந்துள்ள லெசிதின் நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. வைட்டமின் பி இதில் நிறைந்துள்ளதுடன், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம் ஆகிய சத்துகளும் உள்ளன. குறிப்பாக இந்த உணவுகளிலுள்ள குளுடின் இன்ஃபொலென்ஸ் என்னும் பசையம், ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. இந்த உணவுகள் எளிதில் செரிக்கும்.
இத்தகைய சத்துகள் நிறைந்த சிறுதானியங்களை அரிசியாக மாற்றுவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. மற்ற தானியங்களுக்குப் பயன்படுத்தும் கருவிகளை, இவற்றுக்குப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, சாமை அல்லது தினையை எடுத்துக் கொள்வோம். இவை உருண்டையாகவும், தடிமன் குறைவாகவும் இருக்கும். எனவே, நெல் அரவை எந்திரத்தில் இவற்றை அரைக்க முடியாது. ஆகவே, சிறுதானியங்களை அரைப்பதற்கான எந்திரம் தனியாகத் தேவைப்படுகிறது.
முன்பு கைக்குத்தல் முறையில் அரிசி எடுக்கப்பட்டது. பின்பு புழுங்க விட்டுக் காய வைத்துத் திருகை மூலம் உமி நீக்கப்பட்டது. பொதுவாக அரிசியாக அரைக்கும் போது, உமி, தவிடு கிடைக்கும். அரிசியைப் பளபளப்பாக ஆக்கும் போது தவிடு கிடைக்கும். ஆனால், சிறு தானியங்களில் இருந்து தவிட்டைப் பிரிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் தவிட்டில் தான் நிறையச் சத்துகள் உள்ளன. மேலும், அரிசி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்படிச் சிறுதானியங்களை அரைக்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. அரைக்கவுள்ள சிறுதானியத்தை நன்றாகக் காய வைத்து, கல், மண் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சிறு தானியங்களைப் புழுங்க வைத்து 10-12% ஈரப்பதத்தில் எந்திரத்தில் அரைத்தால், உடையாத முழு அரிசி கிடைக்கும். மேலும், புழுங்க வைக்கும் போது, அரிசியில் சத்துகள் மிகையேற்றம் செய்யப்படும். ஆகவே, புழுங்க வைத்து அரைத்தல் மிகவும் நல்லது.
நவீனச் சிறுதானிய உமி நீக்கும் கருவியானது, ஒரு மணி நேரத்தில் 80-100 கிலோ தானியத்தை அரைக்கும். இது தொடர்ந்து அரைக்க ஏதுவானது. ஒரு குதிரைத்திறன் மின் மோட்டாரால் இயங்கும். ஒரு முனை அல்லது மும்முனை மின்சாரத்தை இந்த எந்திரத்தில் பயன்படுத்தலாம். இந்த எந்திரத்தின் அடக்க அளவு 3க்கு 3 அடியாகும். உயரம் ஐந்தடியாகும். இதில் தூற்றுவானும் இருப்பதால், அரிசியும் உமியும் தனித்தனியே பிரிந்து விடும். உமியை அகற்றும் திறன் 90%க்கு மேலிருக்கும். இதை இயக்க ஒரே ஆள் போதும். பயிற்சியைப் பெற்ற யாரேனும் ஒருவர் மட்டுமே இதை இயக்கினால் நெடு நாட்களுக்கு நன்கு உழைக்கும்.
இந்த எந்திரத்தின் விலை சுமார் ஒரு இலட்ச ரூபாயாகும். தனியொருவரால் வாங்க இயலா விட்டால், குழுவாகச் சேர்ந்து வாங்கிப் பயன்படுத்தலாம். மேலும், விவரங்களுக்கு, காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044-27452371 என்னும் எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
முனைவர் மா.சித்தார்த்,
முனைவர் மா.விமலாராணி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.