வயல்களிலும் வீடுகளிலும் விளைபொருள்களை தின்று சேதப்படுத்தும் எலிகளை அழிப்பது பூனை. இதை அறிவியல் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.
பூனை வளர்ப்பு என்பது ஏறக்குறைய நாய் வளர்ப்பைப் போல இருந்தாலும், பூனையின் முரட்டுக் குணங்கள், உணவுப் பழக்கம் ஆகியன நாயிலிருந்து வேறுபட்டவை. பூனையைக் கூண்டிலோ, ஒரே அறையிலோ அடைத்து வைக்கக் கூடாது. அதன் விருப்பப்படி சுதந்திரமாகச் சுற்றித் திரியவிட வேண்டும். இல்லையெனில், சுவாச நோயால் அவை இறக்க நேரிடும்.
நாய்களுக்குக் கால் நகங்களை வெட்டி விடுவதைப் போல, பூனையின் நகங்களை வெட்டக் கூடாது. அப்படிச் செய்தால் இருட்டான இடத்தில் ஒளிந்து கொள்ளும். கால்களில் மீண்டும் நகங்கள் வளர்ந்த பிறகு தான் வெளியே வரும். மேலும், பூனையை முரட்டுத்தனமாகக் கையாளக் கூடாது. தேவையானால், கழுத்து மற்றும் முதுகுத்தோலை ஒரு கையாலும், நான்கு கால்களை மற்றொரு கையாலும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
நாயைப் போல எந்தப் பொருளையும் பூனை உண்ணாது. இறைச்சி, முட்டை, மீன், பாலைத் தான் விரும்பி உண்ணும். பூனைக்குட்டி இரண்டு மாதங்களில் தாயை விட்டுப் பிரிந்து விடும். பூனைக்கு, இன்புளுயன்சா, வெறிநோய், நுரையீரல் நோய், வயிற்றுச் சிக்கல்கள், தோல் நோய்கள் ஏற்படும். மற்ற விலங்குகளுக்கு வாய் மூலம் மருந்தைக் கொடுப்பதைப் போல, பூனைக்குக் கொடுக்க முடியாது.
பூனையின் உடலில் மேல் பூச்சு மருந்துகளையும் தடவக் கூடாது. அப்படித் தடவினால் அதை நாக்கால் நக்கிச் சாப்பிட்டு விடும். இதனால், உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, நோயுற்ற பூனையைக் கால்நடை மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும்.
வெறிநோய், பூனைச்சொறிச் சுரம், ரிக்கட்சியல் சுரம், லெப்டோஸ்பைரோசிஸ், அமீபியா மற்றும் தோல் நோய்கள் பூனையிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுப் பூனையை வளர்த்தால், நல்லதொரு வீட்டு விலங்கை வளர்த்த நிறைவை அடையலாம்.
மரு.வி.இராஜேந்திரன்,
முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை,
நத்தம்-624401, திண்டுக்கல்.