கட்டுரை வெளியான இதழ்: மே 2019
பூனை பல பருவநிலைச் சுழற்சியைக் கொண்டது. இம்மாற்றங்கள் ஒவ்வொரு நாளிலும் கிடைக்கும் ஒளியைப் பொறுத்து அமையும். பூனைகளில் இனப்பெருக்கச் சுழற்சி, ஜனவரி, செப்டம்பரில் ஏற்படும். அதாவது, ஜனவரியில் தொடங்கி, 7-10 நாட்களுக்கு ஒருமுறை, பகல் வெளிச்சம் குறையும் வரை தொடர்ந்து இருக்கும். அக்டோபரில் பகல் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால், வீடுகளில் வளர்த்தால், ஆண்டு முழுவதும் பருவச் சுழற்சி இருக்கும்.
பருவச் சுழற்சி
பெண் பூனை 6-9 மாதங்களில் பருவமடையும். இதன் பருவச் சுழற்சி ஐந்து நிலைகளைக் கொண்டது. அதாவது, பருவமற்ற நிலை, முன்பருவ நிலை, பருவ நிலை, இடைப்பருவ நிலை, பருவம் முடிந்த நிலை.
பருவமற்ற நிலை
இந்நிலை பனிக்காலத்தில் ஏற்படும். பெண் பூனைகளில் பருவநிலை அறிகுறி வெளிப்படுவதில்லை. அதனால், ஆண், பெண் பூனைகளில் ஈர்ப்பு ஏற்படுவதில்லை.
முன்பருவ நிலை
இந்நிலை 1-2 நாட்கள் அல்லது ஒருசில மணி நேரமே தென்படும். பெண் பூனையானது ஆண் பூனையைக் கவர்வதற்குத் தொடர்ந்து சத்தமிடும். ஆனால், தன்னிடம் ஆண் பூனையை அண்ட விடாது.
பருவ நிலை
இந்நிலை ஒரு வாரம் இருக்கும். ஆனால், சில நேரங்களில் நாட்கள் நீளும் அல்லது குறையும். முன்பருவ நிலையிலுள்ள அறிகுறிகளே வெளிப்படும். பூனைகள் சேர்க்கையில் ஈடுபடுவதாக நினைத்து, தலையைத் தாழ்த்தி முன்னங்கால்களைப் பின்னுக்குக் கொண்டு வந்து பின்பகுதியைத் தூக்கிக் காட்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். இப்போது இனச்சேர்க்கைக்கு ஆண் பூனையை அனுமதிக்கும். இச்சேர்க்கை, 1-20 நொடிகள் நடைபெறும்.
சில சமயம் பெண் பூனை ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பூனைகளுடன் சேரும். இந்நிலையில் பிறக்கும் குட்டிகளின் உரோமங்கள் பல நிறங்களில் இருக்கும். இதற்கு அதிகக் கரு உருவாதல் நிலை என்று பெயர். மேலும், மனிதர்களை அல்லது வீட்டுப் பொருள்களை உரசும்; தரையில் படுத்துப் புரளும்.
இடைப்பருவ நிலை
பருவ நிலையில் சேராத பூனைகள் இடைப்பருவ நிலைக்குச் செல்லும். எவ்விதப் பருவநிலை அறிகுறியும் தெரியாது. இந்நிலை ஒரு வாரம் நீடிக்கும். மீண்டும் பூனைகள் முன்பருவ நிலை மற்றும் பருவ நிலைக்குச் செல்லும்.
சேர்க்கையில் ஈடுபட்டுக் கருமுட்டைகள் கருப்பையில் சேர்ந்தும் சினையாகாத பூனைகள், பருவம் முடிந்த நிலைக்குச் செல்லும். இந்நிலை, 5-7 வாரங்கள் நீடிக்கும். இக்காலத்தில், பூனைகளில் பருவ அறிகுறி எதுவும் தெரியாது. ஆனால், சினையாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும்.
சினைப் பருவம்
24 மணி நேரத்தில் 3-4 முறை சேர்ந்தால் தான் கருமுட்டை வெளிப்படும். இந்நிலையில், பெண் பூனை, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பூனைகளுடன் சேரும்.
சினைக் காலம்
பூனைகளின் சினைக்காலம் 58-63 நாட்களாகும். சினையாக இருப்பதை 3 வாரங்கள் கழித்தே அறிய முடியும். 25 நாளில் ஸ்கேன் மூலமும், 42 நாளில் ஊடுகதிர் மூலமும் சினையை அறியலாம்.
சினைக்காலப் பராமரிப்பு
கொஞ்சம் உடற்பயிற்சி அளித்தால், நல்ல உடல்நிலையும், ஈனும்போது தசைத் தளர்வும் பூனைக்குக் கிடைக்கும். சினைப் பூனைக்குத் தடுப்பூசி போடக் கூடாது. பூசணங்கள் பூனைகளைத் தாக்குவதால், சினைக்காலத்தில் தோல் நோய்க்கு மருந்திடக் கூடாது. குறிப்பாக, கிர்ஸியோபல்வின் களிம்பைத் தோலில் தடவக் கூடாது. சத்தான உணவு அவசியம்.
ஈற்றுக்காலக் கவனிப்பு
ஈற்றின் போது, சினைப்பூனை அடிவயிற்றைச் சுருக்கி, இடுப்பு எலும்பைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் நடக்கும், பக்கவாட்டில் படுத்தும் எழுந்தும் நிற்கும். ஈற்றுக்கு முன் பிறப்புறுப்பில் இருந்து நீர் வடியும். தலையை மட்டும் நீட்டிக்கொண்டு குட்டி வெளிவரும். அப்போது தாய்ப்பூனை பின்பக்கம் திரும்பி நக்கி, குட்டியை வெளியே இழுத்து விடும்.
மரு.அ.ரேஷ்மா,
கால்நடை ஈனியல் மற்றும் இனவிருத்தியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி, ஹஸ்ஸான்-573202, கர்நாடகம்.