மீன் வளர்ப்பில் உயிர்க் கூழ்மத்திரள் நுட்பம்!

உயிர்க் கூழ்மத்திரள்

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020

யிர்க் கூழ்மத்திரள் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளர்ப்புக்கு உகந்தது. மீன் வளர்ப்புத் தொட்டியில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை வளர்த்து, அவற்றையே மீன்களுக்குச் சத்தான உணவாகப் பயன்படுத்த வகை செய்கிறது. மேலும், குறைந்தளவு நீர் மாற்றம் அல்லது நீர் மாற்றமற்ற மீன் வளர்ப்புக்கு வழி வகுக்கிறது. இந்த உயிர்க் கூழ்மத்திரளில் புரதமும் கொழுப்பும் அதிகமாக இருக்கும். மேலும், மீன்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கும் உணவு மூலமுமாகும்.

கரிமப் பொருள்கள், இயற்பியல் மூலக்கூறுகள் மற்றும் நுண்ணுயிரிகளுள் நிகழும் சிக்கலான கூட்டு வினைகளால், உயிர்க்கூழ்மத் திரள்கள் உருவாகின்றன. உயிர்க் கூழ்மத்திரள் உத்தி, நீராதாரங்களில் இருக்கும் சத்துகள் மறுசுழற்சிச் செய்யப்படுதல் மற்றும் குறைந்தளவு நீர் மாற்றம் அல்லது நீர் மாற்றமற்ற மீன் வளர்ப்புக்கு உகந்ததாக இருக்கும். இது, குறைந்த இடத்தில் மீன்கள் மற்றும் இறால்கள் உற்பத்தியைப் பெருக்கும் வளங்குன்றா அணுகுமுறையாகும்.

கூழ்மத்திரளின் சத்து விவரங்கள்

உயிர்க் கூழ்மத்திரள் என்பது, பாசி, பாக்டீரியா, புரோட்டோசோவா, மீன் கழிவு, மீந்துபோன உணவு, இறந்த மற்றும் மட்கிய பொருள்கள் அடங்கிய கலவையாகும். இந்தக் கூழ்மத்திரள்கள்; பாக்டீரியாக்கள் சுரக்கும் சளியைப் போன்ற திரவம் மற்றும் மூலக்கூறுகளுக்கு இடையிலான மின்னியல் ஈர்ப்பால் இணைக்கப்படுகின்றன. இதில், விலங்கு மிதவை உயிரிகளும், புழுக்களும் அடங்கும். இந்தக் கூழ்மத்திரள் அமைப்பை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். அதன் அளவு பெரிதாக இருந்தால் நேரடியாகக் கண்களால் பார்க்கலாம். இவற்றின் அளவு 50-200 மைக்ரான்கள் இருக்கும்.

கூழ்மத்திரள்களில் உள்ள சத்துகளின் தரம் அவற்றில் இருக்கும் நுண்ணுயிரி இனங்களைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் புரதச்சத்து 25-50% மாறுபடும், சராசரியாக 30-45% இருக்கும். கொழுப்புச்சத்து 0-15% மாறுபடும். சராசரியாக 1-5% இருக்கும். இதில் மீத்தியோனைன் மற்றும் லைசின் அமினோ அமிலம் குறைவாக இருக்கும். உயிர்க் கூழ்மத் திரளில் சத்துகள், பாஸ்பரஸ் போன்ற தாதுகள் அதிகமாக இருப்பதால், வளர்ப்பு மீன்களில் நல்ல விளைவுகள் உண்டாகும். உலர் உயிர்க் கூழ்மத்திரளை, மீன் தூள் மற்றும் சோயாவுக்குப் பதிலாக, மீன் தீவனத்தில் பயன்படுத்தலாம்.

வகைகள்

உயிர்க் கூழ்மத்திரள் அமைப்புகளில் இருக்கும் ஒளியைப் பொறுத்து, இயற்கை ஒளி மற்றும் ஒளியில்லா அமைப்பு எனப் பிரிக்கலாம். குளங்கள், தொட்டிகள், இறால் வளர்ப்பு நீரை மறுசுழற்சி செய்யும் அமைப்புகள் மற்றும் நெகிழித்தாள் இடப்பட்ட குளங்கள் இயற்கையாக ஒளிவிழும் குளங்களுக்குச் சான்றுகளாகும். சூரியவொளி விழும் பசுமைக் குடில்களில் உள்ள நீர் மறுசுழற்சி அமைப்புகள் மற்றும் தொட்டிகளில் நீர் பசுமையாக இருப்பதால், இவை பசுமை நீர் அமைப்புகள் எனப்படும். சூரியவொளி விழாத கட்டடத்தில் உள்ள மீன் வளர்ப்பு அமைப்புகள் பழுப்பு நீர் அமைப்புகள் எனப்படும்.

வளர்க்கத் தகுந்த மீனினங்கள்

உயிர்க் கூழ்மத்திரளில் உள்ள சத்துகளை நேரடியாக எடுத்துக் கொண்டு வளர்வனவாக இருக்க வேண்டும். தரம் குறைந்த நீரில் வாழும் தன்மையும் இருக்க வேண்டும். இவ்வகையில், இறால், திலேப்பியா, கட்லா, ரோகு, மிர்கால், கோய், கெளுத்தி மற்றும் கலப்புக் கொடுவாய் மீன்களை வளர்க்கலாம்.

கூழ்மத்திரளில் நீரின் தர அளவுருக்களைப் பராமரித்தல்

உயிர்க் கூழ்மத்திரள் அமைப்பில் நீர்த் தரக் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றில், வெப்பநிலை, கரைந்துள்ள ஆக்ஸிஜன், கார அமிலத் தன்மை, உப்புத்தன்மை, கரைந்துள்ள மொத்தத் திடப்பொருள்கள், காரத்தன்மை, ஆர்த்தோபாஸ்பேட், நைட்ரேட், நைட்ரைட் மற்றும் மொத்த அம்மோனியா ஆகியன முக்கியமானவை. உயிர்க் கூழ்மத்திரள் அமைப்பில் இந்த நீரின் தர அளவுருக்களை நிர்வகிப்பது சற்றுக் கடினம். நீர்த் தரக் காரணிகளின் அளவு, வளர்க்கப்படும் மீனினங்களுக்கு ஏற்ப மாறுபடும். 

உயிர்க் கூழ்மத்திரளில் நுண்ணுயிரிகளின் பங்கு

தன்னூட்ட பாக்டீரியாக்களைக் கட்டுக்குள் வைத்து நீரின் தர அளவுருக்களைப் பராமரிப்பதில், மற்ற பாக்டீரியாக்கள், உயிர்க் கூழ்மத்திரள் உத்தியில்  முக்கியப் பங்கு வகிக்கின்றன. தொட்டியில் அதிகமாக, கார்பன் மற்றும் நைட்ரஜனை உருவாக்கினால், மீன் கழிவுகளை பாக்டீரியாக்கள் எளிதாகக் கிரகித்துக் கொள்ளும். இதனால், குளங்களில் குறைந்தளவு நீர் மாற்றம் அல்லது நீர் மாற்றம் இல்லாமல் நீர் சுத்தமாகும்.

இதன் நிலைப்புத்தன்மை என்பது, பாக்டீரியாக்களின் கூட்டமைப்பு மற்றும் இதர நுண்ணுயிரிகளான பூசணம், புரோட்டோசோவா, கோபிபோடுகள் ஆகியன, கரிமப் பொருள்களை மறுசுழற்சி செய்து உணவாக மாற்றுவதில், ஒருங்கிணைந்து செயல்படுவதைப் பொறுத்ததாகும். இதில் தற்சார்பு மற்றும் நைட்ரஜனை வெளியேற்றும் பாக்டீரியாக்களால் உயிரி மென்படலம் உருவாக்கப்படுகிறது. இந்த உயிரி மென்படலம் கனிம அயனிகளை எளிதாக ஈர்க்கிறது. மேலும், இதிலுள்ள திடப்பொருளின் மேற்பரப்பில் அதிகளவில் நைட்ரஜனேற்றத்தை ஊக்குவிக்கிறது.

இப்போது இந்த உயிர்க் கூழ்மத்திரள் அமைப்புகளில் புரோபயோடிக்குகள் பயன்படுகின்றன. இவை நல்ல விளைவுகளைக் கொடுக்கின்றன. அதாவது, தற்சார்பு பாக்டீரியாக்களின் சமூகத்தை ஒழுங்கமைக்கின்றன. வளர்ப்பு அமைப்புகளில் இருக்கும் கரிமத்தை மறுசுழற்சி செய்கின்றன. வளர்ப்பு அமைப்புகளில், திடப்பொருள்கள் மற்றும் மொத்த அம்மோனியா நைட்ரஜன் அளவைக் கட்டுக்குள் வைக்கின்றன.

உயிர்க் கூழ்மத்திரள் மேலாண்மை

தொடக்கத்தில், உயிர்க் கூழ்மத்திரள் அமைப்புகளில், நீரின் தரத்தில் வழக்கமான மறுசுழற்சி அமைப்புகளில் இருப்பதைப் போன்ற ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதிக உணவிடலால், நைட்ரேட் மற்றும் அம்மோனிய அளவு கூடுகிறது. இது வளர்ப்பு மீன்களுக்கு நஞ்சாக மாறி, அவற்றின் வளர்ச்சியையும் பிழைப்புத் திறனையும் பாதிக்கச் செய்கிறது.

தொடக்கத்தில், தீவன அளவு, மீன் குஞ்சுகள் இருப்பு, நுண்ணுயிரிகளின் பண்பு மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, உயிர்க் கூழ்மத்திரள் அமைப்புகள் வளர்கின்றன. இதற்கான நெறிமுறைகள் இல்லாததால், பண்ணையாளர்கள் தங்கள் அனுபவங்களின் மூலம் தங்களுக்கு ஏற்ற முறைகளில் உயிர்க் கூழ்மத்திரளை உருவாக்குகின்றனர். நைட்ரஜனேற்றக் கூட்டமைப்பு பாக்டீரியாக்களை மட்டும் தனியாக ஒரு தொட்டியில் வளர்த்து, மீன்களுள்ள வளர்ப்புத் தொட்டிக்கு மாற்றுகின்றனர். ஏற்கெனவே வளர்ப்புக்குப் பயன்படுத்திய நீரை, மீன்களை இருப்பு வைப்பதற்கு முன் பயன்படுத்துவதும் நல்ல முறையாகும்.

உயிர்க் கூழ்மத்திரள் உத்தியானது, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் மீன் வளர்ப்பைக் கொண்டு செல்ல உதவுகிறது. அதிகப்படியான உணவுகள் மற்றும் கழிவுகளை, நுண்ணுயிரிகள் கிரகித்து உயிர்க் கூழ்மத்திரளாக மாற்றுகின்றன. இதை வளர்ப்பு உயிரிகள் உண்பதால் அவற்றின் உணவு மாற்று விகிதம் குறைகிறது. இதில் குறைந்தளவு நீர் மாற்றம் அல்லது நீர் மாற்றமே நடைபெறாமல் இருப்பதால், குறைந்த இடத்தில் அதிக உற்பத்தியைப் பெற முடியும்.


உயிர்க் கூழ்மத்திரள் S. AANAND

முனைவர் சா.ஆனந்த்,

வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு நிலையம், பவானிசாகர்.

சு.பாரதி, திட்ட உறுப்பினர், தானம் அறக்கட்டளை, மதுரை.

ம.முகேஷ் கண்ணன், லாய்டு கிறிஸ்பின்,

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, பொன்னேரி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading