கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
வேளாண்மையில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூல் பெறத் தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்கள், சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்ற சமூகப் பண்புகள் மிக்கவை.
தேனீக்கூட்டில் இருந்து தேன், மெழுகு, அரசகூழ் என்னும் தேனீப்பால், தேனீ விஷம், பிசின் (Propolis), மகரந்தம் ஆகிய பொருள்கள் கிடைக்கும்.
இந்தியாவில் ஐந்து வகையான தேனீக்களைக் காணலாம். அவை, மலைத் தேனி, கொம்புத் தேனீ, இந்திய தேனீ என்னும் அடுக்குத் தேனி, இத்தாலிய தேனீ, கொசுத்தேனீ வகைகள் ஆகும்.
இவற்றில், மலைத் தேனீ மற்றும் கொம்புத் தேனீ இனங்களை வளர்க்க இயலாது. பிற தேனீக்களான இந்தியத் தேனீ, இத்தாலிய தேனீ மற்றும் கொசுத் தேனீ வகைகளை, செயற்கையான தேனீப் பெட்டிகளில் வைத்து வளர்க்க இயலும்.
தேனீக் கூடுகளில், இராணித் தேனீ, ஆண் தேனீ மற்றும் வேலைக்கார தேனீக்கள் இருக்கும். இவற்றில் இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். ஒரு கூட்டில் ஒரு இராணித்தேனீ மட்டுமே இருக்கும். தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடும்.
அப்போது தனது இறுதிக்காலம் வரை முட்டை இடுவதற்குத் தேவையான ஆண் உயிர் அணுக்களைப் பெற்றுக் கொள்ளும். இராணித் தேனீ மூன்று ஆண்டுகள் வரை வாழும்.
புதிதாக வரும் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபடுவது ஆண் தேனீயின் பொறுப்பாகும். அதன் பிறகு, அந்த ஆண் தேனீ இறந்து விடும். ஒரு தேனீக்கூட்டில் குறைந்தது நூறு ஆண் தேனீக்கள் இருக்கும்.
வேலைக்கார தேனீக்களான பெண் தேனீக்கள், மெழுகு அடையைக் கட்டுவது, புழுக்களுக்கு மற்றும் இராணித்தேனீக்கு உணவளிப்பது, கூட்டைச் சுத்தம் செய்வது, மதுரம் மற்றும் மகரந்தத்தைச் சேகரித்து வருவது போன்ற அனைத்து வேலைகளிலும் ஈடுபடும்.
ஒரு கூட்டில் 1,500 முதல் 50,000 வேலைக்கார தேனீக்கள் வரையில் இருக்கும். இவற்றின் ஆயுட்காலம் 6-8 வாரங்கள் ஆகும்.
இரண்டிலிருந்து பதினெட்டு நாட்கள் வயதுள்ள இளம் தேனீக்கள் கூட்டைச் சுத்தம் செய்வது, பிற புழுக்களுக்கு உணவளிப்பது போன்ற வேலைகளைச் செய்யும். ஹைபோபாரின்ஜெல் சுரபி வளர்ந்த பிறகு, அவை அரசகூழ் என்னும் தேனிப்பாலைச் சுரந்து, இளம் புழுக்களுக்குக் கொடுக்கும்.
மேலும், அறுகோண வடிவ அடையையும் கட்டும். பதினெட்டு நாட்களுக்கு மேல் கூட்டைப் பாதுகாப்பது மற்றும் உணவான மதுரம் மற்றும் மகரந்தத்தை எடுத்து வருவது இவற்றின் வேலையாகும்.
தேனீக்களின் தகவல் பரிமாற்ற முறை
உணவானது 50 மீட்டர் தொலைவுக்குள் இருந்தால், தேனீக்கள் வட்டமாகச் சுற்றிச் சுற்றி நடனமாடும். உணவு, 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தால் வாலை அசைத்து அசைத்து நடனமாடும்.
மலைத் தேனீ: மலைத்தேனீக்கள் தமது கூட்டை ஒளி மிகுந்த பகுதியில் அமைக்கும். மேலும், மரத்தின் கிளைகள், கட்டடங்கள் போன்ற உயர்ந்த பகுதிகளில் கூட்டை வடிவமைக்கும். மலைத் தேனீக்களை வளர்க்க இயலாது. இவற்றின் கொடுக்கு மிக வலிமையாக இருக்கும்.
இதன் மூலம் கொட்டினால் கடும் வேதனை ஏற்படும். மலைத்தேனீ அடையில் இருந்து ஆண்டுக்கு 36 கிலோ தேன் வரை எடுக்கலாம். தகுந்த பாதுகாப்புடன் இக்கூட்டில் தேனை எடுக்க வேண்டும்.
கொம்புத் தேனீ: மலைத் தேனீக்களைப் போலவே கொம்புத் தேனீக்களும், தமது அடையை ஒளி மிகுந்த பகுதியில் உள்ள மரக்கிளைகள் அல்லது கட்டடங்களில் அமைக்கும். இவற்றின் கூடு மலைத்தேனீக் கூட்டை விடச் சிறியதாக இருக்கும்.
இவை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு இடம் பெயரும் குணமுள்ளவை. தேனீக்கள் சிறியதாக இருக்கும். ஒரு கூட்டிலுள்ள இந்தத் தேனீக்கள் ஓராண்டில் ஆறு கிலோ தேன் வரை உற்பத்தி செய்யும்.
இந்திய தேனீ: இந்தியத் தேனீக்களைச் செயற்கைத் தேனீப்பெட்டியில் இட்டு வளர்க்க இயலும். தமது கூட்டை இருட்டுப் பகுதியில் தான் அமைக்கும். அடைகளை அடுக்கடுக்காக வடிவமைக்கும். இந்த அடுக்கு அடைகளை மாலை நேரத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள தேனீப்பெட்டிகளில் இராணித் தேனீயுடன் இடமாற்றம் செய்து வளர்க்கலாம்.
இந்திய தேனீக்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் உள்ளன. இவை அயல் மகரந்தச் சேர்க்கைத் தாவரங்களின் மகசூலை அதிகரிக்க உதவுகின்றன. ஒரு கூட்டிலுள்ள இந்தியத் தேனீக்கள் ஓராண்டில் 6-8 கிலோ தேனை உற்பத்தி செய்யும்.
இத்தாலிய தேனீ: இந்தியத் தேனீயைப் போலவே இத்தாலிய தேனீக்களையும் பெட்டியில் வைத்துச் செயற்கையாக வளர்க்க இயலும். இவற்றை வட மாநிலங்களில் அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.
இந்தத் தேனீக்களும் தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடக்க உதவி புரிகின்றன. ஒரு கூட்டிலுள்ள இத்தாலிய தேனீக்கள் ஓராண்டில் 25-40 கிலோ தேனை உற்பத்தி செய்யும்.
கொசுத் தேனீ: இது மிகவும் சிறியதாக இருக்கும். கொசுத் தேனீக்கள், கூடு மரம் மற்றும் சுவர் பொந்துகளில் இருக்கும். மற்ற தேனீ வகைகளைப் போல இதிலும் இராணித்தேனீ, ஆண் தேனீ மற்றும் வேலைக்கார தேனீக்கள் இருக்கும்.
இயற்கையான கூடுகளைச் செயற்கைப் பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். இந்தத் தேனில் மருத்துவ குணம் மிக அதிகம். இந்தத் தேன் புளிப்புச் சுவையில் இருக்கும். ஓராண்டில் ஒரு பெட்டியில் இருந்து நூறு கிராம் வரையில் தேன் கிடைக்கும்.
முனைவர் வீ.செ.அனுஷா,
இளநிலை ஆய்வாளர், பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.
முனைவர் சு.சங்கீதா, உதவிப் பேராசிரியர்,
வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம்.