நல்ல வருமானம் தரும் தேனீ வளர்ப்பு!

தேனீ வளர்ப்பு Bee Keeping

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020

தேனீக்களின் பயன்களை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே மனிதன் அறிந்து வந்துள்ளான். தேனீக்களைப் பற்றிய குறிப்புகள், வேதங்கள், இராமாயணம் மற்றும் குர்ஆனில் காணப்படுகின்றன. நவீன தேனீ வளர்ப்பு ரெட், லாங்ஸ்ட்ராத் மூலம் 1851 இல் அசையும் சட்டப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, லாங்ஸ்ட்ராத் இந்திய தேனீ வளர்ப்பு வங்கத்தில் 1882 ஆம் ஆண்டில் தொடங்கியது. ரெட், நியூட்டனால் 1911 இல் தென்னிந்தியாவில் தேனீ வளர்ப்பு அறிமுகமானது.

தேனீ இனங்கள்

தேனீக்களில் ஐந்து இனங்கள் உள்ளன. 1. ஏபிஸ் டார்சேட்டா என்னும் மலைத் தேனீ. 2. ஏபிஸ் செரௌ என்னும் இந்திய தேனீ. 3. ஏபிஸ் மெல்லிபிரா என்னும் இத்தாலியத் தேனீ. 4. ஏபிஸ் ஃப்ளோரியா என்னும் கொம்புத் தேனீ. 5. திரிகோன இரிடிபென்னிஸ் என்னும் கொசுத் தேனீ.

தேனீ வகைகள்

மலைத் தேனீக்கள்: இயற்கையில், காடு, மலை, பெரிய கட்டடங்கள் போன்ற பகுதிகளில் ஒரே அடுக்காக 2-5 அடி அளவில் கூடு கட்டி வாழும். இடம் விட்டு இடம் மாறும். இவற்றைப் பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியாது. வீரியம் மற்றும் விஷத்தன்மை மிக்கவை. இவற்றை வளர்ப்புக்குப் பயன்படுத்த முடியாது.

கொம்புத் தேனீக்கள்: இவை சாதாரணமாக மரக்கிளைகளில் சிறியளவில் ஓரடுக்குத் தேனடைகளைக் கட்டும். இவற்றைப் பெட்டியில் வைத்து வளர்க்க முடியாது. குறைந்தளவில் தேனைச் சேகரிக்கும் தன்மை மிக்கவை.

இந்திய தேனீக்கள்: இவை நம் வளர்ப்புக்கு ஏற்றவை. பெட்டியில் வைத்து வளர்க்கலாம். பல அடுக்குகளைக் கொண்ட தேன் அடைகளைக் கட்டும். ஆண்டுக்கு 5 முதல் 20 கிலோ வரை தேனைத் தரும். மரப்பொந்து, பாறையிடுக்கு, சுவர் இடைவெளி போன்ற வெளிச்சம் குறைவான இடங்களில் தேன் கூடுகளை அமைக்கும்.

இத்தாலிய தேனீக்கள்: இவை 1970 வாக்கில் இத்தாலியிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டவை. நோயெதிர்ப்புத் திறனுள்ள இந்தத் தேனிக்கள் மூலம் அதிகளவில் தேனைப் பெறலாம். சூரியகாந்தி விளையும் பகுதிகளில் இவற்றை வளர்க்கலாம். நாற்பது கிலோ வரையில் தேனைக் கொடுக்கும். இதுவரை குறிப்பிட்ட நான்கு இனங்களும் கொட்டும் தன்மை மிக்கவை.

கொசுத் தேனீக்கள்: இவை, தேனீ வகைகளில் சிறியவை. மரப்பொந்து, பாறை மற்றும் சுவர் இடுக்களில் சிறு துளையிட்டு வாழும். இவற்றின் கூட்டில் மண் மற்றும் பிசின் கலந்த குழாய் வடிவத் துளைகள் இருக்கும். கொசுத்தேன் மருத்துவக் குணமிக்கது.

தேனீக் குடும்பம்

தேனீக்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பமாக வாழும். ஒவ்வொரு குடும்பத்திலும் இராணித் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள், ஆண் தேனீக்கள் இருக்கும். ஒரு குடும்பத்தில் இராணித்தேனீ ஒன்று மட்டுமே இருக்கும். இனச் சேர்க்கைக்குப் பிறகு ஒரு நாளைக்கு 40-230 முட்டைகளை அறைக்கு ஒன்றாக இடும். கருவுற்ற முட்டைகளில் இருந்து வேலைக்காரத் தேனீக்கள் மற்றும் இராணித்தேனீ உற்பத்தியாகும். கருவுறா முட்டைகள் மூலம் ஆண் தேனீக்கள் உற்பத்தியாகும்.

தேனீ வளர்க்க ஏற்ற இடம்

நீர் நிறைந்த ஓடை, குளம், ஏரி இருக்க வேண்டும். மலை அடிவாரம் மற்றும் பூக்கும் செடி கொடிகள், மா, தென்னை, வேம்பு, யூகலிப்டஸ், முருங்கை, வாழை, இலவ மரம் முதலியன இருப்பதும் உகந்தது. இத்தகைய சூழலில் நிழலான பகுதியில் தேனீப் பெட்டிகளை வைத்து வளர்க்க வேண்டும். அதிகமாகக் காற்றடிக்கும் பகுதியாக இருக்கக் கூடாது.

தேனீக் கூட்டத்தைக் கண்டறிதல்

தேனீக்கள் வெளியே வரும் அதிகாலைப் பொழுதில் துணிப்பை மூலம் இவற்றைச் சேகரிக்கலாம். இராணித் தேனீயைச் சேகரித்தல் மிகமிக முக்கியம். பிடித்த தேனீக்களை, பிடித்த இடத்திலேயே மாலை வரை வைத்திருக்க வேண்டும். ஏனெனில், வெளியே சென்றுள்ள ஈக்கள் மாலை வேளையில் தான் அதே இடத்துக்குத் திரும்பி வரும். தேன் பெட்டியைப் பயன்படுத்தும் முன்னர் சிறியளவில் புகையை இட்டால், தேனீக்களைக் கட்டுப்படுத்தலாம்.

இயற்கையாகப் பொந்துகளில் இருக்கும் தேனடையை, பொந்தின் துளையைப் பெரிதாக்கி, அடையை மெதுவாகக் கத்தி அல்லது கையால் பிரித்தெடுத்து, மேல் பகுதி, கீழ்ப்பகுதி மாறாமல், தேனீச் சட்டத்தில் வாழைநாரால் கட்ட வேண்டும். கூட்டைப் பிரிப்பதற்கு முன், கொஞ்சம் புகையைப் போடுவது நல்லது. கூட்டை எடுத்த பிறகு, அதே இடத்தில் பெட்டியை, மாலை வரை வைத்திருக்க வேண்டும். பிறகு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வைக்க வேண்டும்.

இந்நிலையில், சில காரணங்களால் பெட்டியில் அதிகளவில் ஈக்கள் இல்லாமல் போகலாம். அதாவது, சூரியவொளி அதிகமாக இருத்தல், கூட்டத்தில் இராணித்தேனீ இல்லாமல் போதல் அல்லது இராணித்தேனீ அறைகளில் வைரஸ் தாக்கம் இருக்கலாம். புகையை அதிகமாகச் செலுத்தினாலும் தேனீக்கள் சேதமடையும்.

தேன் பெட்டி

இந்திய தேனீக்களை வளர்க்கப் பெட்டி அவசியம். புன்னை மற்றும் தேக்குமரப் பெட்டிகள் சிறப்பாக இருக்கும். அசையும் சட்டங்களில் தேனீ வளர்ப்பதில் பல நன்மைகள் உள்ளன. அதாவது, தேனீக்களின் எண்ணிக்கையை வைத்து, கூட்டின் தேவையின் அடிப்படையில் கூட்டவோ குறைக்கவோ முடியும். எளிதாக உணவு நிலையை மதிப்பிடலாம். தேனீக்களின் சுகவீன நிலையை அறியலாம். குஞ்சுகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கலாம்.

செயற்கை இராணி வளர்ப்பைத் திறம்படக் கண்காணிக்கலாம். பழைய மற்றும் சேதமான அடைகளை நீக்கலாம். தேனீக்களை எளிதில் கவனிக்கலாம். சேதமின்றித் தேனடையைப் பிரிக்கலாம். மேலும், தேன் சூப்பர்ஸ் கொடுத்துப் பிரித்தெடுக்க ஏதுவாக இருக்கும்.

கூட்டின் வெளிப்புற நிறம், வெள்ளை, நீலம், மஞ்சள் அல்லது பச்சையாக இருக்க வேண்டும். பொதுவாக வெள்ளைநிறம், கூட்டின் கட்டுமானத் திறனை அதிகரிக்க உதவும். அது ஆயுள் மற்றும் நெகிழ்வைக் கையாளும் திறனை வழங்கும். கூட்டின் உள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைச் சீராக்கி, கூட்டின் திறனை மேம்படுத்தும்.

இதுவரையில் கூறியுள்ள உத்திகளைக் கொண்டு தேனீ வளர்ப்பைத் தொடங்கலாம். 


தேனீ வளர்ப்பு V.BASKARAN

முனைவர் .பாஸ்கரன்,

முனைவர் சீ.விஐய், ஜோ.மேரிலிசா, முனைவர் இரா.வினோத், முனைவர் க.அண்ணாத்துரை,

வேளாண் கல்வி நிறுவனம், குமுழூர், திருச்சி, முனைவர் வ.சத்தியசீலன்,

வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading